எஸ். ஷங்கரநாராயணன்
கதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு என்று படைப்பின் எல்லாத் தளங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் எஸ். ஷங்கரநாராயணன். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 28,1959ம் நாளன்று பிறந்தார். அங்கிருந்த நூலகம் இவருக்குப் பல கதவுகளைத் திறந்து விட்டது. ஜானகிராமன், லா.ச.ரா., சாமர்செட் மாம், ஹெமிங்வே, ஜாக் லண்டன், ஓ'ஹென்றி போன்றோரின் படைப்புகள் இவரை மிகவும் கவர்ந்தன. எழுத்தார்வம் வந்தது. சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். முதல் படைப்பு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கையில் வெளியானது. தொடர்ந்து எழுதியனுப்ப அவை பிரசுரமாகின. பிரபல இதழ்களில் சிறுகதைகள் தொடர்ந்து வெளியாகி இவரை எழுத்தாளராக அடையாளம் காட்டின. 'நந்தவனத்துப் பறவைகள்' இவரது முதல் நாவல். ஔவை நடராசன் அந்நூலை வெளியிட்டார். அது இவர் படித்த கல்லூரியின் முதுகலை மாணவர்களுக்குப் பாடநூலாகி இவருக்குப் பெருமை சேர்த்தது. 'இலக்கிய வீதி' இவரை ஊக்குவித்தது. தீவிரமாக எழுதினார். கல்லூரியை முடித்ததும் தொலைத்தொடர்புத் துறையில் பணி அமைந்தது. பணியாற்றிக்கொண்டே கதைகள், நாவல்கள் எழுதினார். மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் கொண்டு இயங்கினார். இலக்கிய ஆர்வத்தால் 'நிஜம்' என்னும் சிற்றிதழைச் சிலகாலம் நடத்தினார். சங்கரநாராயணன் என்ற பெயரில் மற்றொரு எழுத்தாளரும் எழுதவே, தனது பெயரை 'எஸ். ஷங்கரநாராயணன்' என்று மாற்றிக்கொண்டு எழுதினார்.

மனித உணர்வுகளை போலிச்சாயம் பூசாமல் துல்லியமாகப் பிரதிபலிப்பவை இவரது படைப்புகள். தேவையான விவரணைகள், மெல்லிய நகைச்சுவை, சொல்லவந்ததைச் சுற்றி வளைத்துச் சொல்லாமல் நேரடியாகச் சொல்லும் பாங்கு, வாசிக்க எளிமையான மொழி போன்றவை இவரது எழுத்தின் பலம். அலுப்புத்தட்டாத நடை கொண்டவையாக இவரது படைப்புகள் விளங்குகின்றன. தான் பார்க்கும் காட்சிகள், சம்பவங்கள், கேள்விப்படும் விஷயங்களிலிருந்தே தன் படைப்பு உருவாவதாகக் கூறும் இவர், இலக்கிய இதழ்கள், வெகு ஜன இதழ்கள் என இரண்டிலும் 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாக எழுதிவருகிறார். இவரது இரண்டு சிறுகதைகளை பாலுமகேந்திரா தனது 'கதைநேரம்' தொடரில் சீரியலாக எடுத்திருக்கிறார். சென்னை தொலைக்காட்சியிலும் இவரது சிறுகதைகள் நாடகமாக வெளியாகியுள்ளன. சில தொலைக்காட்சித் தொடர்கள், குறும்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் இவர் கொண்டுவரும் 'இருவாட்சி' பொங்கல் மலர் நல்ல வரவேற்பைப் பெறும் ஒன்று.

"ஒரு படைப்பை எல்லாருக்கும் புரியும்படியாக எளிமையாக எழுதுவது என்பது சாதாரண விஷயமில்லை. உலகளாவிய அளவில் பேசப்படும் பல படைப்புகள் மிக எளிமையானவை. அதனாலேயே அவை எல்லோராலும் வாசிக்கப்பட்டு பேசப்படுகின்றன. படித்தபிறகு யோசிக்க வைப்பதுதான் இலக்கியம். ஒரு மனிதனின் ஆத்மாவைத் தட்டி எழுப்பக்கூடிய இலக்கியம் என்றும் நிலைபேறு உடையதாக இருக்கும். இலக்கியம் வாழ்க்கையை மென்மைப்படுத்துகிறது; மேன்மைப்படுத்துகிறது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்கிறார் இவர். மொழிபெயர்ப்புப் பற்றிக் கூறுகையில், "மொழிபெயர்க்கிற படைப்பாளன் தனது படைப்பாளுமையை அதில் செலுத்தாத பட்சம் அதில் உணர்வுகளைச் சரியாகக் கைமாற்ற முடியாது. மூலமொழியின் சாத்தியப்பாடுகளை ஓர் எழுத்தாளன் நிறுவ முயலும்போது, நாம் நம் மொழியின் வீச்சையும் காட்டமுடியும். மனித உணர்வுகள் எல்லா நாட்டிலும் ஒன்றுதான், என மானுடத்தை நோக்கி ஒரு படைப்பை எழுச்சியுறச்செய்து காட்டச் செய்வதையே நான் என் குறிக்கோளாக வைத்திருக்கிறேன். நான் தேர்வு செய்யும் படைப்புகளே அத்தகையவையே" என்கிறார்.

கிளிக்கூட்டம், மானுட சங்கமம், காலத்துளி, கனவுகள் உறங்கட்டும், மற்றவர்கள், கிரண மழை, கடல் காற்று, நேற்று இன்றல்ல நாளை, தொட்ட அலை தொடாத அலை, முத்தயுத்தம், திசை ஒன்பது திசை பத்து, கண்ணெறி தூரம், நீர்வலை, வசீகரப் பொய்கள் போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த நாவல்களாகும். 'தொட்ட அலை தொடாத அலை' நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு கிடைத்தது. 'நேற்று இன்றல்ல.. நாளை' நாவல் அக்னி அட்சர விருது பெற்றது. 'நீர்வலை' நாவலுக்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது. இவரது மற்ற படைப்புகளுக்காக லில்லி தேவசிகாமணி விருது, அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது, இலக்கியச்சிந்தனை விருது, இலக்கிய வீதியின் அன்னம் விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது உள்ளிட்ட பலவற்றைப் பெற்றுள்ளார்.

நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியிருக்கும் இவரது சிறுகதைத் தொகுப்புகள் பலவும் குறிப்பிடத்தகுந்தவை. 'பிரசவ அறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்', 'நரஸ்துதி காலம்', 'காமதகனம்', 'ஒரு துண்டு ஆகாயம்', 'புதுவெள்ளம்', 'படகுத்துறை', 'ஆயிரங் காலத்துப் பயிர்', 'பெப்ருவரி-30', 'யானைச் சவாரி', 'லேப்டாப் குழந்தைகள்', 'ஆகாயப் பந்தல்', 'காலம் விரித்த குடை' போன்றவை முக்கியமானவை. 'இருவர் எழுதிய கவிதை' என்ற தொகுப்பு ஏழெட்டு மாதங்களே ஆன மழலைகளைப் பின்னணியாகக் கொண்ட கதைகளின் தொகுப்பாகும். முதுமையின் பிரச்னைகளை மையமாக வைத்து இவர் எழுதிய கதைகள் 'இரண்டாயிரம் காலத்துப் பயிர்' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. இரவின் பின்னணி கொண்ட கதைகளின் தொகுப்பு 'காலம் விரித்த குடை', 'நாணல் பைத்தியம்' பைத்தியக்காரர்களின் உலகைப் பேசுகிறது. எழுத்தாளர்களை மையமாக வைத்து இவர் எழுதிய சிறுகதைகளை 'விரல் நர்த்தனம்' என்ற தலைப்பில் தந்திருக்கிறார். ஓ'ஹென்றியின் பாணியில் சுவாரஸ்யமான முடிச்சுகள் கொண்ட கதைகளின் தொகுப்பு 'நன்றி ஓ'ஹென்றி' வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட தொகுப்பாகும். 'பெண்கொற்றக்குடை', 'பிரபஞ்ச பூதங்கள்', 'அஃறிணை', 'கைத்தலம் பற்ற', 'இல்லாததாய் இருக்கிறது', 'அமிர்தம்', 'தருணம்' போன்றவையும் இவ்வாறாகத் தொகுக்கப்பட்டவைகளே! இப்படி ஒரே பேசுபொருள், பின்னணி, சூழல் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும் தமிழின் ஒரே எழுத்தாளர் இவர்தான். இவரது சிறுகதைகள் பலவும் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள், குறுநாவல்கள் முழுவதும் இரு தொகுதிகளாக வெளியாகியுள்ளன.

கவிதையிலும் எஸ். ஷங்கரநாராயணனுக்கு ஆர்வம் உண்டு. கூறாதது கூறல் (கவிதை பம்பரம்), ஞானக்கோமாளி (கவிதாப் பிரசங்கம்), ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்), திறந்திடு சீஸேம் (கவிதாவதாரம்), கடவுளின் காலடிச் சத்தம் (கவிதை சந்நிதி), தவளைக்கச்சேரி (கவிதைத் தூறல்) போன்றவை இவரது கவிதைப் படைப்புகளாகும். மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடத்தக்க முயற்சிகளைச் செய்து வருகிறார். நோபல் பரிசு பெற்ற யோசே சரமாகோவின் போர்த்துக்கீசிய நாவலை (Blindness novel by Portuguese author Jose Saramago) 'பார்வை தொலைத்தவர்கள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். சாமர்செட் மாம் எழுதிய Cakes and Ale நூலைத் தமிழில் தந்திருக்கிறார். முல்க் ராஜ் ஆனந்தின் morning face நாவலை 'விடியல் முகம்' என்ற தலைப்பில் சாகித்ய அகாதமிக்காகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். வெளிநாட்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை 'கனவுச் சந்தை' என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார். ரிச்சர்ட் பாஷ், ஜான் அப்ஜய், தாமஸ் மன், ஜாக் லண்டன், சிங்லாண்ட் வைஸ் போன்றோரது சிறுகதைகள் அடங்கியது இத்தொகுப்பு. உலகச் சிறுகதைகளை மொழிபெயர்த்துப் பல தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளார்.

"எஸ். ஷங்கர நாராயணன் நிறையத் தமிழில் எழுதுவது மட்டுமல்ல; நிறைய ஆங்கிலம்வழி உலகளாவிய எழுத்துகளை ஒருவரால் முயன்று பெறும் அளவுக்கு அறிவார். தமிழ் எழுத்துகளையும் அயல்மொழி எழுத்துகளையும் நிறைய தொகுத்தும் கொடுத்திருக்கிறார்" என்ற வெங்கட் சாமிநாதனின் கூற்று மிகையல்ல, உண்மை. சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கவிதை நூல்கள் என்று 80க்கு மேல் தந்திருக்கும் ஷங்கரநாராயணன், சென்னையில் வசித்து வருகிறார். தொலைத்தொடர்புத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது வலைப்பக்கம்: gnanakomali.blogspot.in

அரவிந்த்

© TamilOnline.com