தென்றல் பேசுகிறது....
"இது தன்னந்தனி ஆளாகச் செய்கிற காரியமல்ல. உதவியாளர் அணியை நீங்கள் பெருமளவுக்குச் சார்ந்து செயல்பட வேண்டியிருக்கும். மிக அனுபவம் வாய்ந்த நபர்களிலிருந்து 20-30 வயதே ஆன இளைஞர்கள் வரை இந்த அணியில் முக்கியப் பொறுப்புகளைச் சுமப்பார்கள். ஆக, சரியான அணியைத் தேர்ந்தெடுத்தால்தான் உங்களுக்குக் கிடைக்கும் தகவல்களும் ஆலோசனைகளும் சரியானதாக இருக்கும்." இப்படிக் கூறியவர் ஒபாமா. தமது பதவிக்காலத்தின் இறுதிப் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிவுரையை அடுத்து வரப்போகும் அதிபரான ட்ரம்ப்புக்கு இதனைக் கூறினார். ட்ரம்ப் பதவியேற்ற 8 மாதங்களில் தனி நபர்களும் குழுக்களும் விரைவாக வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். எப்போது யார் வெளியே அனுப்பப்படுவார் அல்லது பதவி துறப்பார் என்பதைச் சொல்லவே முடிவதில்லை. இப்படிப்பட்ட நிச்சயமற்ற சூழ்நிலை அரசின் கொள்கைகளோ செயல்பாடுகளோ உறுதியான பாதையில் நடப்பதற்கு உகந்ததல்ல. அதிபர் ட்ரம்ப் கூர்ந்து கவனித்து, நிறையச் சிந்தித்து, வரலாற்றை மனதில் கொண்டு, குறைவாகப் பேசி, சரியானதைச் செய்தால் நாட்டின் எல்லாத் துறைகளிலும் இன்று நிலவும் நம்பிக்கைக் குறைவு சீராகும். நாடு மீண்டும் மேல்நிலை அடையும்.

*****


இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்குமிடம் டோக்லம். என்றாலும் அது பூட்டானுக்குச் சொந்தமான பிரதேசம். சீனா அதன் வழியே ஒரு சாலை அமைத்துத் தனது நாட்டாமையைக் காண்பிக்க நினைத்தது. இன்றைய பாரதம் முதுகெலும்பில்லாத பாரதமல்ல என்பதைக் காட்ட பூட்டானுடன் கொண்ட ஒப்பந்தத்துக்கேற்ப தனது படையை அங்கே கொண்டுபோய் நிறுத்தியது. "பெரும்போர் மூளும்" என்று எச்சரித்தது சீனா. பாரதம் அஞ்சவில்லை. "டோக்லம் என்ன உங்கள் இடமா?" என்று சீனாவின் யாங் ஜியேச்சி இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலிடம் கேட்டார். இதற்குச் சற்றும் கண்ணிமைக்காமல், "சர்ச்சைக்குட்பட்ட எல்லா இடங்களும் தானாகவே சீனாவினுடையது ஆகிவிடுமா?" என்றார் பதிலுக்கு டோவல். 'டிப்ளோமசி' என்றால் விளக்கெண்ணெயில் வதக்கிய வெண்டைக்காய்ப் பேச்சல்ல என்பதை மோதியின் அரசு மீண்டும் இதன்மூலம் உணர்த்தியது. அட்டைக்கத்தி சுழற்றுவதை நிறுத்திவிட்டு, சத்தமில்லாமல் துருப்புக்களைச் சீனா பின்வாங்கிக் கொண்டதை மோதி அரசின் மிகப்பெரிய வெற்றியாக உலகநாடுகள் புகழ்கின்றன. நாமும் இதில் பெருமிதம் அடைகிறோம்.

*****


சிறிய கிராமத்தில் பிறந்த முனீஸ்வரன் என்ற இளைஞரின் தத்ரூப ஓவியங்கள் பிரமிக்க வைப்பவை. சற்றுத் தாமதித்தால் உயிர்பெற்றுப் பேசிவிடுமோ என்று திகைக்க வைப்பவை. அவருடைய பின்னணி, சிந்தனைகள், வந்த வழி, போக விரும்பும் இடம் என்று பலவற்றை அவர் நேர்காணலில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அட்டையையும் அவர் தீட்டிய அற்புத ஓவியம் அலங்கரிக்கிறது. தமிழ் முன்னோடி அரசஞ்சண்முகனார், எழுத்தாளர் எஸ். ஷங்கரநாராயணன் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் தகவல் செறிந்தவை. புரட்சிச் சிந்தனையாளர் ஸ்ரீமத் ராமானுஜரின் வாழ்க்கைச் சித்திரம் இந்த இதழில் நிறைவுறுகிறது. கதைகளும் கவிதைகளும் தெரிந்தெடுத்த முத்துக்கள். இனியும் நாம் குறுக்கே நிற்பது அழகல்ல. நீங்களே சுவையுங்கள்.

வாசகர்களுக்கு பக்ரீத், முஹர்ரம் மற்றும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

செப்டம்பர் 2017

© TamilOnline.com