ஆகஸ்டு 2017: வாசகர் கடிதம்
ஜூன் இதழில் அருணா சுப்ரமணியனின் கவிதை 'வேற்றுமையில் ஒற்றுமை' மனதைக் கவர்ந்தது. ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு சிறப்பாக இருந்தது. 'அறங்கெட்ட சபையை' ஹரிகிருஷ்ணன் அழகாக விவரித்திருக்கிறார். சிறுகதையில் "தரிசனம் என்பது நீயாகப் பெறுவதல்ல; அவரே கொடுப்பது" என்ற கருத்து சிந்திக்க வைத்தது. ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் "இப்பொழுது என்ன அவசரம்?" என்ற சின்ன கதை ஒரு அரிய கருத்தினை அழகாக அளிக்கிறது.
யூசுஃப் அவர்களின் தமிழாக்கக் கதை 'நெய்ப்பாயசம்' நெஞ்சை உருக்கியது.

மொய்யில்லா மொய் விருந்தில் 2000 பேருக்குமேல் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வையும், விவசாயத்தைக் காக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பையும் மேற்கொண்டது போற்றத்தக்கதே!

டாக்டர் T. சுப்ரமண்யன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

*****


"நாவில் வேதம் கையில் வேளாண்மை" என்று இருக்கும் பி.டி. ராமச்சந்திரபட் அவர்களின் நேர்காணல் அற்புதம். பூத்துக் குலுங்கும் பண்ணைபற்றித் தாங்கள் கொடுத்திருக்கும் விவரங்கள் ஆச்சரியப்பட வைத்தன. அதுபற்றிப் படிக்கும்போது வளமான பண்டைக்காலக் கிராமம்தான் கண்முன்னர் காட்சி அளிக்கின்றது. பா.சு. ரமணன் எழுதிவரும் 'ஸ்ரீமத் ராமாநுஜர்' ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைந்து இருக்கிறது. ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடு என்று வாழ்க்கையில் நேர்மையாக வாழ்வதன் அவசியத்தைச் சிறு சம்பவத்தின் மூலம் 'சின்ன கதை' சிறப்பாகத் தெரிவிக்கிறது.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா



© TamilOnline.com