அரங்கேற்றம்: மீரா சுரேஷ்
ஜூலை 8, 2017 அன்று, திருமதி. நவ்யா நடராஜனின் மாணவி செல்வி. மீரா சுரேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் பாலோ ஆல்டோவில் உள்ள கபர்லி தியேட்டரில் விமரிசையாக நடந்தேறியது. சிறந்த பரதநாட்டியக் கலைஞர்களான திருமதி. பிரகா பெஸ்ஸல் மற்றும் திருமதி. மைதிலி குமார் (அபிநயா டான்ஸ் கம்பெனி) நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். குரு நவ்யா நடராஜன் (நட்டுவாங்கம்), திரு. ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), திரு. பி.பி. ஹரிபாபு (மிருதங்கம்), திரு. கிரண் ஆத்ரேயா (வயலின்), திரு. மோகன்ராஜ் ஜெயராமன் (புல்லாங்குழல்) ஆகியோர் நிகழ்ச்சி சிறப்புறப் பக்கபலமாக இருந்தனர்.

இந்நிகழ்ச்சி புஷ்பாஞ்சலிடன், புரந்தரதாஸரின் 'சரணு ஸித்தி விநாயகா' என்ற பாடலுடன் ஆரம்பித்தது. பிறகு, அலாரிப்பு மற்றும் ஜதீஸ்வரத்திற்கு ஆடினார். அடுத்து ஆதிசங்கரர் இயற்றிய 'மீனாக்ஷி பஞ்சரத்னம்' ஸ்தோத்திரத்திற்கும், லால்குடி ஜெயராமனின் 'தேவர் முனிவர்' என்ற வர்ணத்துக்கும் பிரமாதமாக ஆடினார். புரந்தரதாஸர் இயற்றிய 'கும்மன கரயதிரே' என்ற கிருதிக்கு மீரா ஆடியது கண்ணனையும் யசோதாவையும் கண்முன்னே நிறுத்தியது. பிறகு பூர்விகல்யாணியில் நீலகண்ட சிவனின் 'ஆனந்த நடமாடுவார்' என்ற பாடலுக்கும், சௌராஷ்டிரத்தில் சுப்பராம ஐயரின் 'அதுவும் சொல்லுவாள்' என்ற பாடலுக்கும் பிரமாதமாக அசத்தினார். இறுதியாக ரேவதி ராகத்தில் அமைந்த மதுரை கிருஷ்ணனின் தில்லானா மற்றும் மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

மீரா சுரேஷ் 7 வயதுமுதல் நவ்யா நடராஜனிடம் பரதம் பயின்றுவருகிறார். சிறந்த நடனமணிகளான திரு. எ. லக்ஷ்மணஸ்வாமி, திருமதி. பெஸ்ஸல் மற்றும் திருமதி. அலர் கிருஷ்ணன் ஆகியோர் மீராவுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. மீரா விரிகுடாப் பகுதியின் கர்நாடக இசைக் கலைஞர் திருமதி. காயத்ரி சத்யாவிடம் கர்நாடக சங்கீதம் பயில்கிறார். பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

சுதா லக்ஷ்மிநாராயணன்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com