ஜூலை 15, 2017 அன்று டெக்சஸ் மாகாணத்தின் டாலஸ் மாநகரிலுள்ள அவ்வை தமிழ் மையமும் டாலஸ் தமிழ்மன்றமும் இணைந்து தமிழர் இசைவிழாவை ஃப்ரிஸ்கோவில் நடத்தியது. விழாவில் மக்களிசைக் கலைஞர் ஜெய்மூர்த்தி, பண்ணிசைப் பாடகர் முனை. கோ.ப. நல்லசிவம், புரவலர் பால்பாண்டியன் முதலானோர் பங்கேற்றனர்.
பக்தி இலக்கிய, பண்ணிசை ஆய்வாளர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகப் பேரா. முனை. கோ.ப. நல்லசிவம் ஒருவார காலம் இப்பகுதியில் முகாமிட்டு பண்ணிசைப் பயிற்சிப் பட்டறை நடத்தினார். இதில் பயின்ற மாணவிகளான அன்னமயில் மனோகர், சிநேகா முத்தையா ஆகியோரின் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நல்லசிவம் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாசுரங்களைப் பாடினார்.
அடுத்து, நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பாளார், மக்களிசை ஆய்வாளர், பாடலாசிரியர், பாடகர் ஜெய்மூர்த்தியின் மக்களிசை இடம்பெற்றது. இவர் பாடிய தமிழே உயிரே வணக்கம், ஆத்தா உன் சேலை, ஊரடங்கும் சாமத்திலே ஆகிய பாடல்கள் அவையைக் கட்டிப்போட்டன. தபேலா, மிருதங்கம் வாசித்த நரேன், வயலின் வாசித்த உமாமகேஷ், கீபோர்டில் டாக்டர் செல்லையா பாண்டியன் ஆகியோரும் சிறப்பாகப் பங்களித்தனர்.
தமிழிசைப் பேரகராதி (பண் களஞ்சியம்) வெளிவர உதவிய புரவலர் திரு. பால்பாண்டியன் விழாவுக்கு முன்னிலை வகித்துக் கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார். தமிழ்மையத் தலைவர் திரு. நந்தகுமார், டாலஸ் தமிழ்மன்றச் செயலாளர் திரு. முனிராஜ் ஆகியோர் கலைஞர்களுக்குப் பட்டயம் வழங்கி நன்றி தெரிவித்தனர்.
சௌந்தர் ஜெயபால், டாலஸ், டெக்சஸ் |