ஜூலை 15, 2017 அன்று ஆஸ்டினில் (டெக்சஸ்) உள்ள Asian American Resource Center அரங்கில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆஸ்டின் தமிழ்ச்சங்கம், சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கம், ஆஸ்டின் தமிழ்ப்பள்ளி , மத்திய டெக்சஸ் தமிழ்க்கழகம், ஹார்வர்ட் தமிழிருக்கை (டெக்சஸ் கிளை), தமிழக விவசாயிகளைக் காப்போம் ஆகிய அமைப்புகள் இணைந்து இதனை நடத்தினர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று வழங்கிய நடனம், நாடகம், கரோக்கி பாடல்கள் கலகலப்பூட்டின.
ஹார்வர்டு தமிழிருக்கைக்கான நிறுவனர் டாக்டர். விஜய் ஜானகிராமன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ் மொழியை பேணிக்காக்கவும், தமிழ்மொழி வரலாற்றை ஆய்ந்து அதன் தொன்மையை நிலைநாட்டவும் இந்தத் தமிழிருக்கை துணைநிற்கும் என்றார். ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு தமிழர்கள் ஆமையின் கடல்வழித் தடத்தைக் கொண்டு, உலகெங்கும் சென்று வணிகம் செய்தும், குடியேறியும் வந்த வரலாற்றை எடுத்துரைத்தார். அதற்குச் சான்றாக உலகெங்கிலும் இருக்கும் தமிழ்ப்பெயர் கொண்ட நகரங்களைப் பட்டியலிட்டார்.
திரு. கார்த்திகேய சிவசேனாபதி பேசுகையில் அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்கள், தமிழக நலனுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது நெகிழ்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். வெளிநாட்டுத் தமிழர்கள் நிலம் வாங்கி விவசாயம் செய்ய விரும்பினால், மொத்தத்தையும் விவசாயத்தில் போட்டுவிட வேண்டாம். மூன்றில் ஒரு பங்கையே முதலீடு செய்யுங்கள் என்றார். சிலர், தமிழகம் திரும்பி வந்து முழு நேர விவசாயம் செய்ய விருப்பம் தெரிவிக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் வெளிநாட்டில் இருந்தபடியே தமிழக நலனுக்கு உதவுங்கள் என்றுதான் கேட்டு கொள்வேன் என்றார்.
திருமதி. கவிதா பாண்டியன் தமிழக கிராமப்புற விவசாயிகள், மாணவர்கள், மற்றும் பள்ளிக் கட்டமைப்புகளுக்காக Save Tamil Nadu Farmer மற்றும் Our Village Our Responsibility அமைப்புகளின் சேவைகளை விவரித்தார்.
ஹார்வர்டு தமிழிருக்கையின் டெக்சஸ் ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன், டெக்சஸ் தமிழர்களின் ஆதரவையும், அடுத்தடுத்த முயற்சிகளையும் எடுத்துரைத்தார். ஆஸ்டின், யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சஸ் பேரா. ராதாகிருஷ்ணன் சங்கரன், ஹார்வர்டு தமிழிருக்கை மற்ற பல்கலைக்கழங்களிலும் தமிழிருக்கை ஏற்பட ஊக்கசக்தியாக விளங்கும் என்றார்.
இது அறிமுக விழாதான், அடுத்து பிரம்மாண்டமான நிதியளிப்பு விழா நடத்த உள்ளோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மணி வரவேற்றுப் பேசினார். இன்பாவும் பவித்ராவும் தொகுத்து வழங்கினார்கள். அசோக் நன்றியுரை ஆற்றினார்.
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |