ஆகஸ்ட் 26, 2017 அன்று குறுந்தொகை மாநாடு ஒன்றை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் மற்றும் பிற தமிழ் அமைப்புகளுடன் இணைந்து நடத்தவுள்ளது. இடம்: 6125 Montrose Road, Rockville, Maryland
சங்க இலக்கிய நூல்களுள் மிகப் பழமையானதும், அதிகமாக மேற்கோளாகக் கையாளப்படுவதும் குறுந்தொகைதான். குறுந்தொகைப் பாடல்கள் 4 முதல் 8 அடிவரை கொண்ட சிறிய பாடல்கள். அனைத்தும் கற்பனை வளமும், கவிதை நயமும் செறிந்த, காலத்தால் அழியாத காதற் கவிதைகள். ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் 205 புலவர்களால் வரையப்பட்ட சொல்லோவியங்கள். "இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை" என்பார் எழுத்தாளர் சுஜாதா.
முனைவர் பிரபாகரன் தலைமையில் குறுந்தொகையைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வழி அழைப்பு மூலம் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் உள்ள தமிழர் சிலர் முறையாகப் படித்தனர். அவ்வாசிப்பின் நிறைவு விழாவாகவும், குறுந்தொகையை வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்தவும், பரப்பவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சிறந்த பேச்சாளரும், எழுத்தாளரும் ஆகிய முனைவர் வெ. இறையன்பு I.A.S. அவர்கள் இதற்கு வரவிருக்கிறார். மூதறிஞர் முனை. மருதநாயகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர்கள் முருகரத்தனம், மோகன், நிர்மலா மோகன் ஆகியோரும் சிறப்புரையாற்றுவார்கள்.
பெரியோர்களுக்கு வினாவிடைப் போட்டி, பட்டிமன்றம், கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்குப் பாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவையும் நடைபெறும் அவர்களுக்கென நடக்கவுள்ள இணையரங்கத்தில் ஹார்வர்டு பலகலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனை. சரவணபவன் 'The importance of understanding and adopting Tamil Culture' என்ற தலைப்பிலும், முனை. பிரபாகரன் 'Valluvar's Strategy for Success' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றுவார்கள். அன்றிரவு, குறுந்தொகை சார்ந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாநாட்டுச் செலவுபோக எஞ்சிய தொகை ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு: www.kurunthokai.org
அங்கு உங்கள் வருகையைப் பதிவு செய்யலாம்.
தொடர்புக்கு: முனை. பிரபாகரன் மின்னஞ்சல் - prabu0111@gmail.com தொலைபேசி: 410.420.0111
செய்திக்குறிப்பிலிருந்து |