சிற்றாறு....
சிற்றாறு...
குற்றாலத்தருவி
கொட்டுகையில் மட்டும்
கூத்தாடிக் குதித்தோடும்
வற்றாத ஓராறு!

கோடையில் அகண்டதோர்
ஓடைபோல் ஆடி
வாடையில் வறண்டதோர்
வாய்க்காலாய் வாடி
இல்லாது போகும் மணலாறு!

பேராறு எனப் பேர்பெற்றால்
எங்கே பேர் விளங்காது
போய்விடுமோ என மயங்கி,
பெற்ற பெயர்தனைக்
கட்டிக் காத்திடவே சற்றே வதங்கி,
நின்றும் நடந்தும் சத்தமின்றிச்
சிலநேரம் ஓடியும் பார்த்திடும்
சந்ததியற்ற சிற்றாறு....

தலைகால் புரியாதே நான்
தடம்புரண்ட நாட்களில் எல்லாம்
எனைச் "சற்றாறு....,
அடச் சலனம் ஏதுமின்றி
எந்தன் மணல் மேனிதனில்
சயனித்துப் பாரு!
இல்லை... உட்காரு
உள்ளுக்குள் உனைப் பாரு!"
என உட்செவிக்குள் ரமணரைப் போலே
வேதம் ஓதிட்ட காட்டாறு.

'நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்'
வஞ்சனையின்றி வழங்கிய தோராறு!

கொஞ்சுதமிழில் திருக்குற்றாலக்
குறவஞ்சியைக் கொட்டித் தந்து
நதிமூலம் சொன்னானே
அந்தத் திரிகூட ராசப்பக் கவிகூட
கொஞ்சம் தன்னையும்
கொஞ்சாமல் போனானே
என்றதோர் குறையிலே முகம் சுளித்து
'நீரினில் மூழ்கி, நினைப்பொழிந்து' போன
நான் வணங்கும் பேராறு!

வேறாரு?
என்னுள் என்றும்
ஏன் இன்றும்...
மண்ணைத் தாண்டி வந்திட்டும்
அந்த மகரிஷிபோல்
'என்னைத் தோண்டி ஞானம்' காட்டும்
ஓராறு, இச்சிற்றாறு!

கோம்ஸ் கணபதி,
டென்னசி

© TamilOnline.com