எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
அத்தியாயம் - 10
அருண் நானியுடன் பள்ளிக்கூடத்திலிருந்து வீடுவந்து சேர்ந்தான். அவனது நினைவெல்லாம் ஃப்ராங்க்கைப் பற்றியே இருந்தது. நானி அவனை வீட்டுப்பாடம் செய்யச் சொன்னபோதும் அவன் காதில் விழவில்லை. கொஞ்சநேரம் தன் செல்ல நாய்க்குட்டி பக்கரூவோடு விளையாடி ரிலாக்ஸ் ஆகலாம் என்று எண்ணினான்.

"பக்கரூ! பக்கரூ! இங்கே வா" என்று பக்கரூவை வீட்டின் கீழேயிருந்து கூப்பிட்டான். பக்கரூவிடமிருந்து பதில் இல்லை. சாதாரணமாக, அருண் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து கதவைத் திறந்தவுடனேயே ஓடிவந்து மேலே ஏறிக் குதிப்பான். ஆனால், அன்றோ பக்கரூவின் நிழலைக்கூட எங்கும் காணவில்லை.

"பக்கரூ! பக்கரூ!" என்று பதட்டத்துடன் கத்திக்கொண்டே வீட்டின் மாடிக்குத் தேடப்போனான். நானியும் அருணோடு சேர்ந்துகொண்டு கூப்பிட்டுப் பார்த்தாள். அருணுக்கு மனம் திக்திக் என்றது. பக்கரூவின் இருப்பிடம் பக்கம் போனான். அங்கே தூங்குகிறானோ என்று பார்த்தான். அங்கேயும் இல்லை. காலைமுதல் இரவுவரை எதையாவது துருதுருவென்று செய்து கொண்டிருப்பான். ஆனால், அன்று அவனிடமிருந்து ஒரு சின்னச் சத்தம்கூட வரவில்லை.

அருணின் பதட்டத்தைப் பார்த்து நானி இன்னும் பதட்டப்பட்டாள். அருண் தன் அறைக்குள் தேடப்போனான். கட்டிலின் மறுபுறத்திலிருந்து ஒரு சின்ன முனகல் கேட்டது. படபடக்கும் நெஞ்சத்துடன் போய்ப் பார்த்தான். அங்கே, பக்கரூ மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். சடாரென்று அருகே மண்டியிட்டு அமர்ந்து அவனைத் தூக்கினான் அருண். "மிஸ் லேக்! இங்க வாங்களேன் சீக்கிரம்" என்று நானியைக் கூப்பிட்டான். "சீக்கிரம் வாங்க. பக்கரூவை நாம வெட்கிட்டே கூட்டிட்டுப் போகணும்." மாடிப்படி அதிர மிஸ் லேக் ஓடிவந்தாள்.

அதே சமயம் அறைக்கதவு படாரென்று திறக்கும் சத்தம் கேட்டது. "அருண், அருண்! எங்கே இருக்க? உன்ன என்ன பண்றேன் பாரு" என்ற அம்மா கீதாவின் குரல் வீடெங்கும் எதிரொலித்தது. கீதாவின் குரல் கேட்டதும் மிஸ் லேக் ஓடிச்சென்று, கீதாவிடம் பக்கரூவின் நிலைமை பற்றிச் சொல்லப் போனார். அதற்க்குள், கீதாவே அருணின் அறைக்குள் வந்தார்.

"அருண், நீ என்ன நினைச்சுட்டு இருக்க மனசுல? பெரிய ஹீரோன்னு நினைப்பா? போன தடவைதான் அந்த டேவிட் ராப்ளேயோட சண்டை போட வேண்டியதாச்சு, இப்பவுமா? எப்படி என்னை எல்லார் முன்னாலேயும் சத்தம் போட்டாரு தெரியுமா? அப்படியே எங்காவது ஓடிப் போயிடலாம்னு தோணிச்சு. அதிகப் பிரசங்கி. பெரிய மகாத்மா காந்தின்னு நினைப்பு. உலகத்தைத் திருத்தப் போறான்! அந்த ஃப்ராங்க் பயகூட நீ நெருங்கிப் பழகும்போதே நினைச்சேன், என்னை எங்கயாவது வம்புல மாட்டிவிடப் போறேன்னு" என்று தீபாவளிச் சரம்போல பொரிந்து தள்ளினார்.

அம்மாவின் கத்தலுக்குக் கொஞ்சமும் கவலைப்படாமல் அருண் பக்கரூ பற்றிக் கூறினான். "அம்மா, நம்ம பக்கரூவுக்கு உடம்ப சரியில்ல. நாம இப்பவே வெட்கிட்ட கூட்டிட்டு போகணும். வாங்க சீக்கிரம்," என்றான். இவ்வளவு கத்தியும் அருண் கொஞ்சம்கூடச் சட்டை செய்யவில்லை என்பதில் கீதாவுக்குக் கோபம் இன்னும் பலமடங்கு அதிகமானது.

"அருண்! நான் இங்க பிசாசு மாதிரி கத்திட்டு இருக்கேன், நீ என்னடான்னா திருப்பித் திருப்பி, பக்கரூ, பக்கரூன்னு சொல்லிட்டு இருக்க. This is getting too much. You have not only become adamant, but a lot arrogant, too!"

அம்மாவிடம் சண்டை போட அருணுக்கு இஷ்டமில்லை. ஆனால், அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் பக்கரூவின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம். அம்மாவை சமாதானப்படுத்துவது முக்கியமில்லை என்று அவனுக்குப் பட்டது. "அம்மா, தயவுசெஞ்சு கத்தாதீங்க. பக்கரூவை இப்பவே நாம கூட்டிட்டு போலைன்னா, அவன் நிலைமை ரொம்ப மோசமாயிடும்" என்று பேய் பிடித்தவன் போலக் கத்தினான். கத்திக்கொண்டே பக்கரூவைத் தூக்கி அம்மாவிடம் தூக்கிக் காட்டினான்.

கீதா அப்போதுதான் கவனித்தார். அவருக்கு நிலைமை புரிந்தது. "மிஸ் லேக், வாங்க வண்டியைக் கிளப்புங்க, போலாம்" என்றார்.

கிளம்பும்போது, அருண் தற்செயலாக ஃப்ராங்கிடம் இருந்து கொண்டுவந்திருந்த சாப்பாட்டுப் பாக்கட்டின் கவர் அறையின் மூலையில் தரையில் கிடப்பதைப் பார்த்தான். அவசர அவசரமாக அதைத் தனது பேன்ட் பாக்கெட்டினுள் எடுத்து வைத்துக்கொண்டான்.

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com