அஃக் பரந்தாமன்
"இது ஏடல்ல; எழுத்தாயுதம்" என்ற லட்சியத்துடன், "அஃக்" என்ற வித்தியாமான சிறு பத்திரிகையை நடத்திய அஃக் பரந்தாமன், சென்னையில் காலமானார். அச்சிதழையும் அழகாக உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் இவர். இலக்கிய இதழை தனது உயிர்மூச்சாகக் கொண்ட பரந்தாமன், அதற்கான செலவுகளைக் குறைப்பதற்காக, தானே சொந்தமாக 'பிருந்தாவனம்' அச்சகத்தை உருவாக்கினார். பத்திரிகைக்கு எல்லாமுமாக இருந்து லட்சிய வேட்கையுடன் நடத்தினார். பிரமிளின் 38 கவிதைகளைத் தொகுத்து ஒரே இதழில் வெளியிட்டுச் சிற்றிதழ் உலகில் கவன ஈர்ப்புச் செய்தார். அதுபோல வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைத் தாங்கிய சிறப்பிதழ் ஒன்றையும் வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்தினார். அம்பை, இந்திரா பார்த்தசாரதி, கி.ரா., ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, கலாப்ரியா என பலரது படைப்புகள் தொடர்ந்து அஃக் இதழில் வெளியாகின.

வடிவமைப்பிலும் பரந்தாமன் மிகுந்த அக்கறை செலுத்தினார். பிரமிளின் வித்தியாசமான ஓவியங்களைத் தொடர்ந்து அஃக் இதழின் அட்டைப்படமாக வெளியிட்டார். ஆதிமூலம், கவிஞர் பிரம்மராஜன் ஆகியோரின் ஓவியங்களை வெளியிட்டார். நேர்த்தியான வடிமைப்புக்காக மூன்றுமுறை இந்திய அரசின் தேசிய விருது பெற்றார்.



© TamilOnline.com