பிரபல ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமூக செயற்பாட்டாளர் என பல களங்களில் இயங்கிய வீரசந்தானம் சென்னையில் காலமானார். கும்பகோணத்தை அடுத்துள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிறந்த சந்தானம், இளவயதிலேயே ஓவிய ஆர்வம் கொண்டிருந்தார். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் ஓவியம் பயின்ற இவர், ஆலயச் சுவர்களில் இருக்கும் ஓவியங்கள்மீது ஆர்வம் கொண்டிருந்தார். அவற்றைப் பிரதி எடுத்துத் தனது திறனை வளர்த்துக் கொண்டார். தொடர்ந்து சென்னை ஓவியக் கல்லூரியில் தொழில்துறை ஆடை வடிவமைப்பில் மேற்படிப்பை முடித்தார். பின்னர் ராஜஸ்தானில் பனஸ்தலி வித்யாபீட் பல்கலைக்கழகத்தில் ஃப்ரெஸ்கோ (சுவரோவியம்) பயிற்சியை நிறைவுசெய்தார்.
நெசவாளர் சேவை மையத்தில் பணி அமைந்தது. சென்னை, மும்பை, திரிபுரா, நாக்பூர், மிசோரம், பெங்களூரு, காஞ்சிபுரம் என இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றார். பாலுமகேந்திராவின் 'சந்தியாராகம்' படத்தில் ஓவியராகவே நடித்தார். தொடர்ந்து பல படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தார். சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சிறந்த ஓவியருக்கான குடியரசுத் தலைவர் விருது, வனவிலங்குகளின் வாழ்க்கை பற்றிய புகைப்படத்துக்கான விருது, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது உட்படப் பல விருதுகளும் பெற்றவர் சந்தானம். தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை வடிவமைத்தவர் இவரே.
|