ஸ்ரீரங்கம் கோயிலில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்தார். வைகானச ஆகமத்திலிருந்து பஞ்சராத்ர ஆகமத்திற்கு வழிபாட்டு முறையை மாற்றி நெறிப்படுத்தினார். அனைத்து உற்சவங்களும் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார். சீடர்களுக்கும், முக்கிய பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம், நிதி, பரமாரிப்பு எனப் பல பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தார்.
அதே காலகட்டத்தில் பக்தி இயக்கத்திற்கும், சமயத்திற்கும் புத்துயிர் அளிக்கும் பணி ராமாநுஜரைச் சேர்ந்ததாகியது. அதற்காகக் கடுமையாக உழைத்தார். அன்பு ஒன்றே அனைவரையும் அரவணைக்கக் கூடியது; ஆழ்வார்கள் ஆண்டவன்மீது கொண்ட ஆழ்ந்த பக்தியினால் மட்டுமே அவனை அடைந்தனர் என்பதை அனைவருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்தார். சாதி வேற்றுமை பாராது தகுதியுடையோரைத் தமராக்கி, பஞ்ச சம்ஸ்காரம் செய்து ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆக்கினார். வேடுவரான உறங்காவில்லியை உறங்காவில்லி தாசராக மாற்றினார்.
பெரியநம்பியிடமிருந்து ரகஸ்யத்ரயம் எனப்படும் திருமந்திரம், திவ்யமந்திரம் மற்றும் சரமஸ்லோகதைக் கற்க விரும்பினார். திருமந்திரத்தின் மிக விரிவான பொருளையும், சரம ஸ்லோகத்தின் ரகசிய விளக்கத்தைக் குரு ஆளவந்தார், திருக்கோஷ்டியூர் நம்பிக்கு நேரடியாக உபதேசம் செய்திருந்தார். அவரிடம் சென்று அதனைக் கற்று வருமாறு நம்பி ஸ்ரீராமாநுஜரைப் பணித்தார். ராமாநுஜரும் திருக்கோஷ்டியூர் நம்பியின் இருப்பிடத்தை அடைந்தார். அவரைப் பணிந்து, தனக்கு உபதேசிக்குமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், நம்பி அதற்குச் செவி சாய்க்கவில்லை. மனம் கலங்கிய ஸ்ரீராமாநுஜர், கண்ணீர் மல்க மீண்டும் பணிந்து வேண்டினார். பலமுறை வேண்டியும் பலனில்லாததால் குறையுடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அவர் ஒரு வருட காலத்தில் பதினெட்டு முறை திருக்கோஷ்டியூர் சென்று வேண்டியும் நம்பி மனமிரங்கவில்லை.
பெரியநம்பி, ஒரு சமயம் ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் அவரது செயலுக்கான காரணத்தை வினவினார். அதற்கு கோஷ்டியூர் நம்பி, "ராமாநுஜருக்கு உண்மையிலேயே கற்கும் விருப்பமிருந்தால் அவர் அன்ன ஆகாரமின்றி நீரும் அருந்தாது ஒரு மாதம் விரதம் இருந்து பின்னர் தனியாக என்னைக் காணவரட்டும்" என்றார். அவ்வாறே விரதமிருந்து ராமாநுஜர், நம்பியைக் காணச் சென்றார். உடன் முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் அழைத்துச் சென்றிருந்தார். அது கண்டு வெகுண்ட நம்பி, "ஏன் இவர்களை உடன் அழைத்து வந்தாய், நான் உன்னைத் தனியாக அல்லவா வரச்சொன்னேன்?" என்றார்.
"இவர்கள் எனது தண்டமும் மோதிரமும் போன்றவர்கள்" என்று பதில் சொன்னார் ராமாநுஜர்.
திருக்கோஷ்டியூர் நம்பி, ராமாநுஜரை தான் வசித்த இல்லத்தின் மேல்தளத்திற்கு அழைத்துச் சென்றார். திருமந்திர ரகசியத்தையும் பொருளையும் ராமாநுஜருக்குப் போதித்தார். பின் அவரிடம், "இனி உம்மால் இந்த உலகம் உய்ந்துவிடும் என்பதில் ஐயமில்லை. ஆனால், நீர் இந்த ரகசியங்களை எக்காரணமுமின்றி ஒருவருக்கும் வெளிப்படுத்தக் கூடாது" என்று உறுதி வாங்கிக்கொண்டார். மேலும் அவர், "ஜாக்கிரதை! நான் சொன்னதற்கு மாறாக இதை யாருக்கேனும் கூறினால் ஆசார்யனுக்குத் துரோகம் செய்தவராகக் கருதப்படுவீர். அந்தப் பாவத்திற்காக நரகமும் செல்லவேண்டி வரும்" என்று எச்சரித்தார்.
குருவைச் சேவித்து விடைபெற்றார் ஸ்ரீ இராமாநுஜர். அவருக்கு இரவெல்லாம் உறக்கமே வரவில்லை. "உலகம் உய்ந்துவிடும் என்றாரே குருநாதர்!. ஆனால், நான் இந்த மந்திரத்தைச் சுயநலத்துடன் எனக்கென்று வைத்துக்கொண்டால் எப்படி உலகம் உய்யும்? இந்த மந்திரோபதேசத்தை மிகவும் பாடுபட்டு அடியேன் அடைந்தேன். ஆனால், சாதாரண மானுடர்களால் இவ்வளவு கஷ்டப்பட இயலுமா? 'யாருக்குமே இதை உபதேசிக்கக் கூடாது' என்றும் குரு சொல்லிவிட்டாரே, பின் இதன் பயன்தான் என்ன? உண்மையில் பாகவத சேவைதானே பகவத் சேவை. அப்படியிருக்க நான் ஒருவன் மட்டுமே இந்த மந்திரத்தினால் பலன் பெறுவது என்பது தகாத ஒன்றாயிற்றே" என்று எண்ணினார். இறுதியில், "நான் பெற்றிருக்கும் இந்தப் பேரின்ப ரகசியத்தை இவ்வுலக வாழ்க்கையில் உழன்று அல்லலுறும் அனைத்து மக்களும் பெற வேண்டும். அதுவே சரியானதாக இருக்கும்" என்று முடிவு செய்தார். பின் உறங்கச் சென்றார்.
மறுநாள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டவர், ஆங்காங்கிருந்த பக்தர்களைத் திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் ஆலயகோபுரம் முன் வந்து சேருமாறு கேட்டுக்கொண்டார். அங்கே ராமாநுஜர் ஆலயத்தின் மாடகோபுரம் ஏறி, அதன் உச்சியில் நின்றுகொண்டு, தன் குரு திருக்கோஷ்டியூர் நம்பி ரகசியமாக அளித்த திவ்ய மந்திரத்தை அனைவரும் கேட்கும்படி உரத்த குரலில் உபதேசித்தார். அதன் பொருளையும், பெருமையையும், சிறப்பையும் விளக்கிச் சொன்னார். அதைக் கேட்ட பக்தர்கள் மனமகிழ்ந்து பெருமாளையும், பாகவதரையும் சேவித்துத் தங்களுக்கு வைகுந்தப்ராப்தம் உறுதி என்ற நிறைவுடன் சென்றனர்.
செய்தியறிந்த நம்பி, ராமாநுஜர்மீது கடுங்கோபம் கொண்டார். உடனடியாகத் தன்னை வந்து பார்க்கும்படிச் சொல்லியனுப்பினார்.
ஸ்ரீராமாநுஜரும் கூப்பிய கரங்களுடன் திருக்கோஷ்டியூர் நம்பியைச் சென்று சந்தித்தார். அவரைக் கடும் வார்த்தைகளால் அர்ச்சித்தார் நம்பி. "நீ மன்னிக்கத் தகாத குற்றத்தைச் செய்துவிட்டாய். குரு வார்த்தையை மீறியதற்காக நீ நரகம்தான் செல்வாய்" என்றார். அதற்கு ஸ்ரீராமாநுஜர் பணிவுடன், "குருவே, அடியேன், நரகம் செல்வதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுடன் இணையும் ஆயிரமாயிரம் மக்களின் மோட்சமே எனக்குப் போதுமானது" என்ற பொருளில்,
"யதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குரு பாதகாத் ஸர்வே கச்சந்து பவதாம் க்ருபயா பரமம்பதம்"
என்று சொல்லி, குருவின் திருவடியைப் பணிந்தார்.
அதைக் கேட்டுத் திடுக்கிட்டார் நம்பி. "நான் நரகம் சென்றாலும் பரவாயில்லை; ஆயிரக்கணக்கானவர்கள் மோக்ஷப்ராப்தி அடைவதே எனக்கு மகிழ்ச்சி" என்று கூறும் ராமாநுஜரது உயர்ந்த உள்ளத்தையும், குணத்தையும் கண்டு வியந்தார். "இப்படிப்பட்ட உயர்ந்த ஆத்மாவான இவரை என்ன சொல்லிப் பாராட்டினால் தகும்?" என்று எண்ணியவர் 'எம்பெருமானைவிடக் கருணை மிகுந்தவர்' என்ற பொருளில் "நீரே எம்பெருமானார்" என்று சொல்லி அப்படியே அவரைக் கட்டிக்கொண்டார்.
குருவின் மனங்கவர்ந்த உத்தம சீடராக ஸ்ரீரங்கம் திரும்பினார் ராமாநுஜர். ஆளவந்தாரின் முக்கிய சீடர்களுள் ஒருவரான திருமலை ஆண்டான் என்னும் மாலாதாரரிடமிருந்து திருவாய்மொழியைக் கற்றுத் தேர்ந்தார். புதிய விளக்கங்களையும் அவரால் அதற்குச் சொல்ல முடிந்தது. தொடர்ந்து திருவரங்கப் பெருமாள் அரையரிடமும் கற்றார்.
ஸ்ரீ ராமாநுஜரின் சீர்திருத்தங்களைப் பிடிக்காத சிலர் அவர் பிட்சை எடுத்துண்ணும் உணவில் விஷமிட்டுக் கொல்ல முயன்றனர். பரந்தாமனின் அருளால் அவர் அதிலிருந்து தப்பினார். இதையறிந்த திருக்கோஷ்டியூர் நம்பி, ஸ்ரீ ராமாநுஜரின் பாதுகாப்புக் குறித்துக் கவலை கொண்டார். பரம பாகவதரான கிடாம்பி ஆசானை ராமாநுஜரின் மெய்க்காவலராக நியமித்தார். அவரே இனி ராமாநுஜருக்கு உணவு தயாரித்து அளிக்க வேண்டுமென்ற முறையை ஏற்படுத்தினார். ராமாநுஜர் பிட்சைக்கு வெளியில் செல்வது நின்றது.
மாயாவாதத்தில் தேர்ந்த அறிஞரான யக்ஞமூர்த்தியை வாதில் வென்று சீடராக்கிக் கொண்டார். 'தேவராஜ முனி' என்ற தாஸ்ய நாமத்தை அவருக்குத் தந்து 'அருளாளப் பெருமாள் எம்பெருமானார்' என்ற பட்டத்தையும் அளித்தார். சீடரான அனந்தாழ்வானைத் திருமலைக்கு அனுப்பி அங்கே பெரியதோர் நந்தவனம் உருவாக ஏற்பாடு செய்தார். அதனைக் காணத் திருமலைக்குச் செல்லும் வழியில் காஞ்சிபுரம் சென்று ஸ்ரீ வரதராஜப் பெருமாளையும், திருக்கச்சி நம்பிகளையும் தரிசித்து ஆசிபெற்றார்.
ஆதிசேஷனே திருமலையாகத் தோற்றமளிக்கிறான் என்பதால் ஆழ்வார்கள் பலரும், அம்மலை மீது ஏறாமல், அடிமலையில் நின்றே சேவிப்பர். ராமாநுஜரும் அங்கிருந்தே சேவித்துச் செல்ல விரும்பினார். ஆனால், நந்தவனத்தைப் பராமரிக்கும் அனந்தாழ்வானை ஏமாற்ற விரும்பாமல், கால் பாவாமல் கைகளால் தவழ்ந்தே வேங்கடமலை ஏறினார். அவரைப் பெரியதிருமலை நம்பி வரவேற்றார். வேங்கடவனைத் தரிசித்து அங்கு சிலகாலம் இருந்தார். பெரிய திருமலை நம்பியிடம் ராமாயணம் கற்றார். பின்னர் அங்கு திருப்பணி செய்துவந்த கோவிந்தபட்டரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். பெரியதிருமலை நம்பியின் சீடரான அவர், பின்னர் ராமாநுஜரையே குருவாக ஏற்றார். ஸ்ரீரங்கத்திற்குச் சென்று குருவுடன் சேர்ந்து பல திருப்பணிகளைச் செய்து வந்தவர், நாளடைவில் காவியுடையும், திரிதண்டமும் ஏந்தித் துறவறம் பூண்டு 'எம்பார்' ஆனார்.
வியாசரின் பிரம்ம சூத்திரங்களையும், திராவிட வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் முழுமையாக இணைத்த ஒரு நூலைப் படைக்க ராமாநுஜர் உறுதி பூண்டிருந்தார். அதற்காக பிரம்ம சூத்திரங்களையும், போதாயனரின் போதாயன விருத்தி என்ற நூலையும் வாசிக்க விரும்பினார். அவை தென்னகத்தில் எங்கும் கிடைக்கவில்லை. அது காஷ்மீரத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டவர், கூரத்தாழ்வானுடன் புறப்பட்டுச் சென்றார். காஷ்மீர மன்னன் பீடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மூலச்சுவடிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தார். ராமாநுஜர் தினந்தோறும் சுவடிகளை வாசித்து வந்தார். ஆனால், அங்கிருந்த அத்வைதிகளுக்கு அது உவப்பானதாக இருக்கவில்லை. அவர்கள் நள்ளிரவில் அந்தச் சுவடியை கவர்ந்து சென்றுவிட்டனர். மறுநாள் இதனையறிந்த ராமாநுஜர் மனம் துவண்டார். தான் மேற்கொண்ட பணியைச் செய்ய இயலாது போகுமோ, குருவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமல் போகுமோ என்று எண்ணிப் பதைத்தார்.
அதுகண்ட கூரத்தாழ்வார், "இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். நீங்கள் தினந்தோறும் படித்து உறங்கச் சென்றபின் நான் அவற்றை படித்து மனனம் செய்துகொண்டேன். அதனை அப்படியே என்னால் ஒப்பிக்க முடியும். அதனை இங்கேயே செய்ய வேண்டுமா அல்லது காவிரி இருகரைகளின் இடையே உள்ள ஸ்ரீரங்கம் சென்றபின் செய்யலாமா என்று சொல்லுங்கள்" என்று கேட்டார். மனமகிழ்ந்த ராமாநுஜர் "நீர் என் பவித்திரம் என்பதை உறுதிசெய்தீர்" என்று சொல்லி கூரத்தாழ்வானை ஆரத் தழுவிக் கொண்டார். இருவரும் ஸ்ரீரங்கம் திரும்பினர்.
(தொடரும்)
பா.சு. ரமணன் |