மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மாணிக்கவாசகர் பிறந்த வாதவூருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருமோகூர். நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலம். 108 திவ்யதேசங்களில் நாற்பத்தெட்டாவதாகவும், பாண்டித் திருப்பதிகளுள் ஆறாவதாகவும் இத்தலம் அமைந்துள்ளது. மூலவர் காளமேகப் பெருமாள். தாயார், மோகனவல்லி. திருமோகூர்வல்லி என்ற பெயரும் உண்டு. தலவிருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: க்ஷீராப்தி தீர்த்தம். இது கோயில் ராஜகோபுரத்தின் முன்னால் அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது ஒருதுளி தீர்த்தம் இத்தலத்தில் விழுந்தது. அவ்விடத்தில் தேவர்கள் ஒரு குளத்தை வெட்டினர். அதுவே க்ஷீராப்தி தீர்த்தம் என மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
தலப்பெருமை : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது முதலில் நஞ்சு வெளிப்பட்டது. அதனை உண்டு சிவபெருமான் நீலகண்டராகி உலகைக் காத்தார். தொடர்ந்து உச்சைசிரவஸ் குதிரை, ஐராவதம், கற்பகம், சந்திரன், அகலிகை, திருமகள், கௌஸ்துபமணி ஆகியவை வெளிவந்தன. இறுதியாக அமுதம் வெளிப்பட்டது. அதனை அடையத் தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்டனர். மகாவிஷ்ணு மோகினி ரூபமாகி அவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளிக்க முன்வந்தார். அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கி ஏமாந்தனர். தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் வழங்கினார் மகாவிஷ்ணு. இவ்வாறு அவர் அமிர்தம் வழங்கிய தலமே திருமோகூர். முதலில் மோஹனபுரம், மோகன நேத்திரம், மோகினியூர், மோகியூர் என்றெல்லாம் வழங்கப்பட்டு, பிற்காலத்தில் திருமோகூர் ஆகிவிட்டது. புலஸ்திய முனிவர் மகாவிஷ்ணுவை மோகினிரூபத்தில் காண விரும்பி செய்த தவத்தை ஏற்றுப் பெருமாள் அவ்வாறே காட்சி தந்தார்.
பதினெண் புராணங்களில் பிரம்மாண்ட புராணம், மத்ஸ்ய புராணத்தில் திருமோகூர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தேவசிற்பி விஸ்வகர்மாவால் கட்டப்பட்டது. அகநானூறு, பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பாண்டியர், சோழர், நாயக்கர், மருதிருவ மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள விவரம், கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. காளமேகப் புலவர், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் போன்றோர் இத்தல இறைவனைத் துதித்துப் பாடியுள்ளனர்.
கோயில் ஐந்து ராஜகோபுரங்கள், சதுர்முக விமானத்துடன் அமைந்துள்ளது. பெருமாள் கிழக்குநோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் ஐந்து படைக்கலன்களுடன் காட்சி தருகிறார். இவரை குடமாடு கூத்தன் என்றும், சுடர்கொள் சோதி, திருமோகூர் ஆப்தன் என்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளனர். பெருமாள் கருவறைக்கு வலப்புறம் தாயார் சன்னதி. தாயார் மோகனவல்லி கருணை பொழியும் முகத்துடன் காட்சி தருகிறார். வீதியுலாவில் பெருமாள் மட்டும் வெளியில் செல்வார். சன்னிதிப் படியைத் தாயார் எந்த நேரத்திலும் தாண்டியதில்லை என்பதால் இவர், 'படிதாண்டாப் பத்தினி' என்று போற்றப்படுகிறார். தாயார் சன்னதியின் பின்புறமுள்ள சன்னிதியில் முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும் பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சன்னிதி, பள்ளிகொண்ட பெருமாள் சன்னிதியும் அமைந்துள்ளன.
வேதம் தமிழ்செய்த மாறனான நம்மாழ்வாரின் மனம் கவர்ந்தவர் காளமேகப் பெருமாள். நம்மாழ்வார் வைகுண்டத்திற்கு எழுந்தருளும்போது தாமே ஓடிவந்து வழிகாட்டி அழைத்துச் செல்கிறார். முன்பக்கமே பார்த்துக்கொண்டு செல்லாமல், பின்னால் வரும் ஆன்மா, மாயையில் மயங்கி நின்றுவிட்டால் என்ன செய்வதெனத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அழைத்துச் செல்கிறார் பெருமாள் என்பது வரலாறு. ஆன்மாவின் வழித்துணையாக வருபவர் காளமேகப் பெருமாள்.
கோயிலில் ஆறுகால பூஜைகளுடன் திருத்தேர், தீர்த்தவாரி, முப்பழ உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் என அனைத்து விழாக்களும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர் நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய் காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே. - நம்மாழ்வார்
சீதா துரைராஜ், சான் ஹோசே, கலிஃபோர்னியா |