மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "குருடென்றுரைக்கும் கொடியோனே"
மனித உறவுகளில் கலந்து கிடக்கும் பலநூறு விதமான உன்னத, வக்கிர உணர்வுகளை இந்தக் கட்டத்தில் வியாசர் அபாரமாகப் படம்பிடித்திருக்கிறார். பாஞ்சாலியைச் சூதில் இழந்தாகிவிட்டது. அவளைச் சபைக்கு அழைத்துவரச் சொல்லி விதுரனை ஏவி, அவன் மறுத்து, அவனுக்கு பதிலாகத் தேரோட்டி பிராதிகாமியை அனுப்புகிறார்கள். அங்கே பாஞ்சாலி, "சூதபுத்திரனே! செல்; நீ அந்தச் சூதாடினவரிடம் சென்று, நீர் முதலில் உம்மைத் தோற்றீரா, அல்லது என்னைத் தோற்றீரா? என்று சபையில் கேள்" (ஸபா பர்வம், த்யூத பர்வம் அத்: 89, பக்: 282) என்று கேட்டு அவன் இந்தக் கேள்வியைச் சபையில் எழுப்ப, ஒருவரும் பதில் பேசாமல் மௌனம் காக்கின்ற நேரம். யுதிஷ்டிரன் உயிர்போனவனைப் போல மனம் குன்றி நிற்கும் நேரம். "துரியோதனன், 'பாஞ்சாலி இங்கு வந்தே இந்தக் கேள்வியைக் கேட்கட்டும். அவள் சொல்லுகிறதையும் இவன் (யுதிஷ்டிரன்) சொல்லுகிறதையும் இங்குள்ளவர் அனைவரும் கேட்கட்டும்' என்று சொன்னான்". (மேற்படி, பக்கம் 283).

எதோ பொழுதுபோக்காக விளையாடத் தொடங்கி, மறுக்க மறுக்கக் கட்டாயப்படுத்தியும் சீண்டிவிட்டும்-சபையில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் சம்மதிக்க வைத்து-நாடு தொடங்கி ஐவரையும் ஆட்டத்தில் தோற்கச்செய்து இவ்வளவு தொலைவுக்குக் கொண்டு வந்தாயிற்று. ஒவ்வொரு முறை வெல்லும்போதும் 'மோசமான வழிமுறைகளைக் கடைப்பிடித்து சகுனி வென்றான்' என்று வியாசர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே வருவதையும் பார்த்தோம். இப்போது 'வீடு பெருக்கவும் மற்ற வேலைகளைச் செய்வதற்காகவும் பாஞ்சாலியை அழைத்து வா' என்று துரியோதனன் உத்தரவிடுகிறான். இன்னமும் பெரியவர் எவரும் வாயைத் திறக்கக் காணோம். விதுரனும் விகர்ணனும் பேசுவதை யாரும் காதில் வாங்கும் நிலையில் இல்லையே! இப்போது 'ஆட்டத்தில் என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா, அல்லது தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றாரா' என்று பாஞ்சாலி கேட்டுவரச் சொல்லியிருக்கிறாள். இங்கேதான் அடிமையும் ஆண்டானும் சூதாடும்போது பந்தயம் வைத்தாடக்கூடாது என்ற அடிப்படை உண்மை அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. பாஞ்சாலி விஷயத்தில் தருமன் செய்தது தவறுதான். ஆனால் அவன் இந்தக் கட்டத்தில்கூட கசாப்புக் கடைக்காரனை நம்பும் ஆட்டைப் போலத்தான் 'இவர்களிடத்திலும் கொஞ்சம் மனச்சாட்சி எஞ்சியிருக்கிறது. எதையும் எல்லைமீறிச் செய்துவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு-அசட்டு நம்பிக்கையோடு-இருக்கிறான்.

பாஞ்சாலியோ 'ஆட்டமே செல்லாது' என்கிறாள். துரியோதனனோ, 'அதை இங்கே சபையில் வந்து யுதிஷ்டிரனிடம் சொல்லச் சொல். அவளுக்கு இவன் தரும் விடையை, இங்கே எல்லோருக்கும் முன்னிலையில் சொல்லட்டும்' என்று உத்தரவிடுகிறான். இந்த நிலையிலும் பாஞ்சாலியின் கோலத்தைக் கண்டு பெரியப்பாவும் சபையினரும் மனமிரங்குவர் என்று தருமபுத்திரர் நம்புகிறார். திரெளபதியின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவனைத் தனியே அழைத்து, "பாஞ்சாலியே! ரஜஸ்வலையாய் இருக்கும் நீ அரையில் முடியப்பட்ட ஒற்றை வஸ்திரத்துடன் அழுதுகொண்டு சபைக்கு வந்து மாமனார்முன் நில். ராஜபுத்திரியாகிய நீ சபைக்கு வந்ததைக் கண்டபோது சபையோரெல்லோரும் துரியோதனனை மனத்தினால் திட்டுவார்" என்று சொல்லியனுப்பினார்". (மேற்படி, பக்: 284). இதைப் பாஞ்சாலி ஏற்கவில்லை. ஒற்றையாடையோடு அந்த மாமனாருக்கு முன்னால் வந்திருந்தாலும் எதுவும் நடந்திருக்கப் போவதில்லை. அதைவிட மோசமான நிலை அந்த மருமகளுக்கு ஏற்பட்ட சமயத்திலும் அந்த மாமனார் குறுக்கிட முயலவில்லை என்பதை அறிவோம். எதற்காக இங்கே இதைக் குறிப்பிட்டோமென்றால், இந்த நிலையில்கூட தருமனுக்கு இப்படியெல்லாம் நேரப்போகிறது என்று தோன்றவே இல்லை. சொல்லப் போனால் இந்த நிமிஷம் வரையில் துரியோதனனுடைய மனத்தில்கூட அப்படியொரு எண்ணம் இருந்திருக்கவில்லை. அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் பாஞ்சாலியைச் சபைக்கு வரவழைத்து அவமதிப்பது மட்டும்தான். ஆனால் அந்த அவமதிப்பின் எல்லையை நிர்ணயித்தவன் கர்ணன். கர்ணன் தூண்டிவிடும் வரையில் துரியோதனனுக்கேகூட 'அடிமைகளுக்கு மேலாடை அணியும் உரிமை இல்லை' என்ற எண்ணமே தோன்றியிருக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஆகவே தர்மபுத்திரன் இந்த நிலையிலும் பெரியப்பா மனமிரங்குவார் என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லை.

இவர்கள் அனைவரும் சிறு வயதிலிருந்து ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள்; நெருங்கிய உறவினர்கள்; பாஞ்சாலி நூற்றுவருக்கு அண்ணி. சிறுவயதில் துரியோதனன் எத்தனையோ தொல்லைகளைக் கொடுத்திருந்த போதிலும், கொல்லவே முயன்ற போதிலும் பீமனுக்கு அர்ச்சுனனுக்கும் வேண்டுமானால் கோபமிருந்திருக்கலாமே ஒழிய, தர்மபுத்திரனால் அவற்றை மறக்க முடியாவிட்டாலும் மனதார மன்னிக்க முடிந்தது. ஏனென்றால் அவனைப் பொருத்தவரையிலே பெரியப்பாவின் சொல் ஒன்றே வேதம். அவர் சொன்னது எதையும் இவன் மறுத்ததில்லை. பாதியரசு என்ற பெயரில் இவர்களுக்கு ஒரு காட்டைக் கொடுத்ததுகூட, தருமன் கேட்டுப் பெற்றதில்லை. மக்களுடைய கருத்துக்கு அஞ்சிய திருதிராஷ்டிரன் தானே முன்வந்து கொடுத்தது. அந்தக் காட்டை அழித்துதான் நாடு சமைத்தார்கள். முப்பத்தோரு வயதில் தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியதையும் அவன் கேட்டுப் பெறவில்லை. (பார்க்க) காண்டவ வனத்தையும் கேட்டுப் பெறவில்லை. இத்தனைக்கும் நாட்டை ஆளும் முழு உரிமையையும் உடையவன் தருமனே என்பதைப் பல சமயங்களில் சொல்லியிருக்கிறோம். இதையும் ஒருமுறை பார்க்கவும். இந்தச் சந்தர்ப்பத்தில்கூட, 'அரசை துரியோதனனுக்குக் கொடுத்துவிடு' என்றால் கொடுத்துவிடும் மனநிலையில்தான் தர்மன் இருந்தான். இந்த நிலைப்பாடு உத்தியோக பர்வத்தில்தான் மாறுபடுகிறது. அவ்வளவு ஏன், இத்தனை நடந்ததற்குப் பிறகும் அனுத்யூதம் எனப்படும் மறுசூதுக்கு துரியோதனன் திருதிராஷ்டிரன் மூலமாகத்தானே அழைப்புவிடுத்து, வனவாசப் பந்தயம் வைத்து ஆடச் செய்தான். அந்த நிலையில்கூட பெரியப்பாவின் அழைப்பு என்ற ஒரே காரணத்துக்காக, தருமன் மறுசூதை ஏற்கத்தானே செய்தான்.

இப்படியெல்லாம் நம்பிக்கை வைத்திருந்த காரணத்தால்தான் தருமன் பாஞ்சாலியைச் சபைக்கு அழைத்துவரச் சொல்லும்போதும் மௌனியாக இருந்தான். தான் அடிமைப்பட்டுவிட்டோம் என்பதால் எதையும் மறுக்கும் உரிமை தனக்கில்லை என்ற கூச்சம் வேறு அவனைத் தின்றுகொண்டிருந்தது. பிராதிகாமி இரண்டு முறை சென்று அழைத்துவிட்டுத் திரும்பிய பின்னர் துரியோதனன், துச்சாதனனை ஏவுகிறான். இங்கே ஒன்று சொல்லவேண்டும். பாரதத்தில் பல இடங்களில் 'பிராதிகாமி தன்னை அவமதித்தாக' பாஞ்சாலி வருத்தப்படுவதைப் பார்க்கலாம். 'அம்மனே போற்றி; அறங்காப்பாய் தாள்போற்றி' என்று பாஞ்சாலி சபதத்தில் இவனுடைய பேச்சு தொடங்கினாலும், பாரதி இந்த இடத்தில் அவன் அவமரியாதையாகப் பேசுவதை விட்டுவிட்டான். "திரெளபதியே! யுதிஷ்டிரர் சூதென்னும் கள் மயக்கத்தினால் மயங்கியிருக்கிறார். துரியோதனன் உன்னை ஜயித்துவிட்டான். ஆதலால் நீ திருதிராஷ்டிரன் வீட்டுக்குள் போ. யாக்ஞஸேனியே! வேலை செய்வதற்காக உன்னை அழைக்க வந்திருக்கிறேன்" (த்யூத பர்வம் 89ம் அத்தியாயம் பக்கம் 282) என்றுதான் இவன் முதலில் தொடங்குகிறான். ஓர் அரசியிடம் ஒரு தேரோட்டி பேசுகின்ற விதமில்லை இது. ஆனால் பாரதி தீட்டியிருக்கும் தேர்ப்பாகன் குணச்சித்திரம் முற்றிலும் மாறுபடுகிறது.

பாஞ்சாலி தங்கியிருக்கும் அரண்மனைக்குச் சென்ற துச்சாதனன் அவளை நெருங்கும்போது வில்லிபாரதத்தின்படி, காந்தாரியும் உடனிருந்தாள். பாஞ்சாலி காந்தாரிக்குப் பின்னால் நின்றுகொண்டாள். 'மேவார் அல்லர்; தமர் அழைத்தால் மேலுன் கருத்து விளம்பிவரப்//பாவாய் அஞ்சாது ஏகென்றாள்" என்று பாடும் வில்லி இந்த இடத்தில் காந்தாரியின் பாத்திரப் படைப்பைச் சரித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 'உன் மைத்துனன்தானே கூப்பிடுகிறான். போய்விட்டுத்தான் வாயேன்' என்று காந்தாரி பேசியிருப்பாளா என்று யோசித்தால், உண்மையில் காந்தாரி அந்தச் சூதாட்ட சபையில் இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு என்றுதான் சொல்லவேண்டும். வியாச மூலத்தில் பாஞ்சாலி தனியாகத்தான் இருந்தாள். அவளிடத்திலே துச்சாதனன் நெருங்கி-சொல்லவே நா கூசுகின்ற சொற்களைப் பேசி-சபைக்கு அழைக்கையில், 'நான் சபைக்கு வரமுடியாத நிலையிலிருக்கிறேன். ஒற்றை ஆடையை அணியும் மாதவிலக்கு நேரமிது' என்று சொல்லவும், அண்ணன் மனைவியுடைய கூந்தலைப் பற்றியிழுக்கும் அந்த மைத்துனன் சொல்கிறான்:

"யக்ஞஸேனன் மகளே! ரஜஸ்வலையாகத்தானிரு; ஒற்றை வஸ்திரத்தோடிரு; அல்லது வஸ்திரமில்லாமலேயிரு. ஆட்டத்தில் ஜயிக்கப்பட்டுப் போனாய். தாசியாகச் செய்யப்பட்டாய். உன் தகுதிப்படி தாசிகளிற் சேர்ந்திருக்க வேண்டும்' என்று சொன்னான்." (த்யூத பர்வம், அத்: 89, பக். 285). நீ ஆடை அணிந்திருந்தாலென்ன, அணியாமலே இருந்தால்தான் என்ன என்று சொன்னபடி அவளைக் கூந்தலைப் பிடித்திழுத்துத் தெருத்தெருவாக வந்து, சபைக்குள் தள்ளினான். இந்தச் சமயத்தில் வில்லி,

காணேம் என்று நிலம் நோக்கிக்
கதிர்வேல் நிருபர் இருந்(து)இரங்கக்
கோணே நேர்பாடாய் இருந்தான்
குருடுஎன்று உரைக்கும் கொடியோனே,


என்று பாடுகிறார். 'கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ' என்று எந்தச் சொல்லைச் சொல்லக் கூசி பாரதி, 'காதும் கேட்காமல் போய்விட்டதோ' என்று சொல்லி அவனுடைய குறையைக் குறிப்பால் உணர்த்தினானோ, வில்லி, கட்டுக்கடங்காத கோபத்தில் அதே சொல்லால் திருதிராஷ்டிரனைச் சாடுவதைப் பார்க்கலாம். இன்னும் பீஷ்மர் பேசும் நியாயமெல்லாம் இருக்கிறது.

(மேலும் பார்ப்போம்.)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com