இவர்களின் சவால்கள் வேறுவகை
அன்புள்ள சித்ரா வைத்தீஸ்வரனுக்கு நமஸ்காரம். நான் தங்களைப் பல வருடங்களுக்கு முன்னால் சந்தித்துப் பேசியிருக்கிறேன். நீங்கள் கொடுத்த தொலைபேசி எண் மாறிவிட்டது போல இருக்கிறது. நல்ல காலம், அன்புள்ள சிநேகிதியே பகுதியில் உங்கள் Email ID கொடுத்திருந்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா?

நான் இதை எழுதக் காரணம், இந்த அமெரிக்கப் பயணம் என்னுடைய 18வது விஜயம். அந்தக் காலத்தில் பருப்புப் பொடியும் அப்பளமும் மூட்டை கட்டிக்கொண்டு வருவேன். இப்போதெல்லாம் அது இல்லை. என் பெண்கள், பிள்ளைகள் எல்லாரும் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்கள். என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள். பிஸினஸ் க்ளாஸில் அழைத்து வந்து, திருப்பி அனுப்புகிறார்கள். பகவான் கருணையிலே எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், ஒன்று மாத்திரம் எனக்கு இப்போதெல்லாம் புரிவதில்லை. முன்பெல்லாம் இங்கே வந்தால் அந்தப் பேரன், இந்தப் பேத்தி என்று பார்த்துக்கொள்ள வருவோம். எனக்கே வாழ்க்கை ரொம்ப ரொம்ப பிஸியாக இருக்கும். என் கணவரும் அப்போது இருந்தார். நேரம் போவதே தெரியாமல் இருக்கும். பேரன், பேத்திகளோடேயே இந்த ஊர்ப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நாங்கள் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு, வளர்ந்துகொண்டு வந்தோம்.

ஆனால், இந்த முறை மூணு வருஷம் கழித்து வருகிறேன். தனியாக வந்தேன். துக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் பிராக்டிகலாக இருந்தேன். இப்போதான் என் பெண், பிள்ளைகள் பேசிக்கறதைப் பார்த்து, அதை ரிசர்ச் பண்ண நேரம் கிடைத்தது. எல்லோரும் நல்ல நிலையிலே இருக்கிறார்கள். ஆனால், எப்பப் பார்த்தாலும் stressed out என்கிறார்கள். பிசி என்கிறார்கள். டென்ஷன் என்கிறார்கள். ஒரு சின்ன விஷயம் நேர்மாறாக நடந்துவிட்டால் upset ஆகிவிடுகிறார்கள். ஐந்து வயதுப் பேத்தியும் tension; 16 வயதுப் பேரனும் upset. அப்பாவும், அம்மாவும் Psychology, Sociology என்று மூளையைக் கசக்கி குட்டையைக் குழப்பிக் கொள்கிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள். வாழ்க்கை என்றால் stress இருக்கத்தானே இருக்கும். எங்கள் காலத்தில் சமைக்க gas கூடக் கிடையாது. கூட்டுக் குடித்தனம். காலையில் 4 மணிக்கு எழுந்து வெளியில் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, சமையலுள்ளில் புகுந்தால், இரவு 9 மணிக்கு மேல்தான் அயர நேரம் கிடைக்கும். கணவருடன் பேச நேரம் இருக்காது. நாம் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சுவதற்குக் கூட நேரம் இருக்காது. மாமியாரும், நாத்தனாரும், எதிர்த்த வீட்டு மாமிகளும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். எல்லாவற்றிற்கும் டென்ஷன் பட்டுக் கொண்டிருந்தால், எப்படிக் குடும்பத்தைச் சமாளிப்பது? கூட்டுக் குடும்பத்திலிருந்து இவருக்கு டெல்லிக்கு மாற்றலாக, வெளியில் வந்து, நான்கு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியபோது எத்தனையோ பிரச்சனைகள்தான். ஆனால், பிரச்சனை வரும்போதுதான் மனசு கவலையாக இருக்கும். மற்றபடி வெளியூர், பண்டிகை என்றெல்லாம் ஜாலியாக இருப்போம். அந்த டபுள் பெட்ரூம் குவார்ட்டர்ஸில் வந்து தங்காத உறவுகளே கிடையாது. திடீரென்று வருவார்கள். எங்கள் வீட்டில் சாமான்களைப் போட்டுவிட்டு பத்ரிநாத் போவார்கள். ஆக்ரா போவார்கள். வருவார்கள். படிக்கும்போது என் குழந்தைகளுக்கு ப்ரைவசி என்பதே இல்லை. எல்லாம் மணிமணியாக மார்க் வாங்கினார்கள். இப்போது எந்தக் குறையும் இல்லாமல் நல்ல பொறுப்பில் இருக்கிறார்கள். நான் B.A. இங்கிலீஷ் லிடரேச்சரும் B.A. சமஸ்கிருதமும் திறந்தவெளிப் பல்கலையில்தான் முடித்தேன்.

இங்கே வந்து செட்டிலான பிறகு என் பசங்களே மாறிப் போய்விட்டார்கள். வேலை போனால் கவலைப்படலாம்; உடம்புக்கு வந்தால் கவலைப்படலாம். வெகேஷன் பிளான் பண்ணுவதற்கும் ஸ்ட்ரெஸ். பையனுக்கு எதிர்பார்த்த காலேஜில் இடம் கிடைத்து, அவனைக் கொண்டு சேர்ப்பதற்கும் டென்ஷன். எப்போது பார்த்தாலும் வேகுவேகென்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் பிஸி, நேரமாகி விட்டால் டென்ஷன். இத்தனைக்கும் புருஷன்மார்களும் பங்குபோட்டுக் கொண்டுதான் வீட்டுவேலை செய்கிறார்கள். எல்லா சௌகர்யமும் இருப்பதால் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும், எல்லாவற்றையும் நம் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும், எல்லாவற்றிலும் முன்னால் இருக்கவேண்டும் என்ற மனப்பான்மைதான் காரணமா, தெரியவில்லை. இல்லை, என்னுடைய வயது, என்னுடைய தள்ளாமை இவர்கள் ஓடிக்கொண்டே இருப்பதைப் பார்த்து அப்படி நினைக்க வைக்கிறதா என்பதும் புரியவில்லை. உங்களுடைய நேரத்திற்கு என்னுடைய நன்றி.

ஆசிர்வாதம்

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே

நமஸ்காரம். உங்கள் ஆதங்கம் புரிகிறது. அந்தக் காலத்தில் மட்டுமல்ல; அவரவர் காலத்தில் நாம் எல்லோருமே நம்முடைய மனதில் ஏற்படும் அதிருப்தியை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறோம். அந்தக் காலத்தில் சமூக/குடும்ப விதிகள் நம்மைக் கட்டிப்போட்டு பயமோ, எரிச்சலோ, கோபமோ வெளியில் அதிகம் காட்டமுடியாமல் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருப்போம். இல்லை, நம்மை ஒத்த உறவினரிடம் உடல்/மன சுமையைப் பகிர்ந்துகொண்டு, நம் பிரச்சனைகளைச் சமாளிப்போம்.

இந்தச் சமுதாயத்தில், இந்தக் கலாசாரத்தில் எல்லோரும் தனித்தனி சிறிய தீவுகளாகத்தானே இருக்கிறோம். எல்லாவற்றையும் சரியாக நடத்தவேண்டும் என்ற ஒரு anxiety சதா நம் குழந்தைகளுக்கு இருப்பதை நான் மறுக்கவில்லை. அங்கே அந்தக் காலத்தில் பொறுப்புகள் சமூகச் சார்பாக இருந்தது. இங்கே பொறுப்புகள் தனிமனித வாழ்க்கையை ஒட்டியவை. இங்கே இருப்பவர்களுக்கு வெவ்வேறு வகையான சவால்கள். "என்னால முடியலையே" என்று நீங்கள் சொல்லியிருப்பீர்கள். "I am stressed out" என்று இவர்கள் சொல்லுகிறார்கள். அவர்கள் கவலைப்படுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. உங்களுடையது ஒரு observation என்றுதான் நினைக்கிறேன். அவர்களுடைய பிஸியான வாழ்க்கையிலும், உங்களை பிஸினஸ் க்ளாசில், டென்ஷனுடன் அழைத்துவந்து stress out ஆனாலும், "அம்மா எப்படியிருக்கிறார்?" என்று மாறி மாறி உங்கள் பெண்களும், பிள்ளைகளும் கூப்பிட்டு நலன் விசாரிக்கும்போது, அவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நீங்களும் பூரிப்படைகிறீர்கள், இல்லையா? Enjoy Life.

உங்கள் ஆசிகளுக்கு நன்றி.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com