வீட்டின் முகப்பில் "Sivan is never appealed to in vain" என்னும் ஜி.யு. போப்பின் வரி வரவேற்கிறது. வரவேற்பறை மேசையில் சேக்கிழார் பெருமானும், ரோஜா முத்தையா செட்டியாரும் வரவேற்கின்றனர். சேக்கிழார் அடிப்பொடி, தில்லைஸ்தானம் நடராஜன் ராமச்சந்திரன் என்னும் தி.ந. ராமச்சந்திரன் பூஜையில் இருக்கிறார். இலக்கிய கலாநிதி, சித்தாந்த கேசரி, சைவசித்தாந்த கலாநிதி, சித்தாந்த சைவச்செம்மணி, பாரதிசீர் பரவுவார், பாரதி சித்தாந்தச் செம்மல், கபிலவாணர் விருது, தமிழக அரசின் மகாகவி பாரதி விருது என அடுக்கடுக்காகப் பல கௌரவங்கள் பெற்ற அறிஞர் இவர். 83 வயதைக் கடந்தும் சைவ சித்தாந்தச் சொற்பொழிவு, திருமுறை வகுப்பு, திருமுறை மொழிபெயர்ப்பு என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். பாரதியாரின் கவிதைகள் முழுவதையும் ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார். இவரது திருமுறைகள் மொழிபெயர்ப்பு அறிஞர்களால் போற்றப்படுவது. சைவசித்தாந்த நூல்கள், சேக்கிழார் வரலாறு, பட்டினத்தார் வரலாறு, சிவஞான முனிவர் வரலாறு எனப் பல நூல்களை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார். தமிழிலும் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்திருக்கிறார். இலக்கியம், சித்தாந்தம், வாழ்க்கை வரலாறு எனப் பல பிரிவுகளில் நூல்களை எழுதியிருக்கிறார். இலங்கை, லண்டன், பஹ்ரைன் எனப் பல வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தமிழ், சைவம், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து உரையாற்றியிருக்கிறார். இவரது வீட்டு நூலகத்தில் 50,000க்கும் மேற்பட்ட நூல்கள் சேகரத்தில் உள்ளன. 'சேக்கிழார் அடிப்பொடி' என்னும் தலைப்பில் இவரது வாழ்க்கை வரலாற்றைப் பேராசிரியர் இரா. சுப்பராயலு எழுதியிருக்கிறார். www.drtnr.org என்ற தளத்தில் இவரது வாழ்க்கையும், நூல்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடினோம். அதிலிருந்து...
*****
கே: வழக்குரைஞரான உங்களுக்கு இலக்கிய ஆர்வம் எப்படி வந்தது? ப: நான் படித்தது இங்கிலீஷ் மீடியம். அந்தக் காலத்தில் ஆங்கில இலக்கிய ஆசிரியர்கள் அவற்றை மிகவும் சுவாரஸ்யமாக நடத்தினார்கள். ஷேக்ஸ்பியர், மில்டன் என்று நானாகவே தேடிப் படித்தேன். தி.வே. கோபாலய்யர் சிறந்த தமிழறிஞர். தமிழுக்காக உழைத்த மிகப்பெரிய தியாகி. அவரது தம்பி என் வகுப்புத்தோழர். அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைக் கேட்டாலே போதும் நமக்குத் தமிழ் ஞானம் வந்துவிடும். நான் தமிழ், இலக்கண, இலக்கியங்கள் எல்லாம் கற்றுக்கொண்டது அவரிடம்தான்.
கே: உங்கள் பாரதி காதலை விவரியுங்கள்... ப: சிறுவயதிலேயே எனக்கு அவர்மீது ஈடுபாடு. என் அக்கா கணவர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. அவரது மகன் எழுத்தாளர் தி.சா. ராஜு. அக்காலத்தில் தெருவெல்லாம் பாரதி பாடல்களை மக்கள் பாடிக்கொண்டு செல்வார்கள். திருலோக சீதாராம் போன்ற நண்பர்களின் தொடர்பால் அந்த ஆர்வம் அதிகரித்தது. பாரதியின் பாடல்களை மொழிபெயர்த்து 'சிவாஜி' இதழில் வெளியிட்டேன். பாரதியாரின் படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிடத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முடிவு செய்தபோது அந்தப் பொறுப்பை எனக்குக் கொடுத்தது. அதுவரை பாரதியாரைப்பற்றி ஆங்கிலத்தில் பலர் எழுதியிருந்த எல்லாவற்றையும் தொகுத்து வெளியிட்டேன். பாரதியாரே தன்னுடைய பாடல்களை ஆங்கிலத்தில் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். பேராசிரியர் பி. மகாதேவன் எழுதியிருக்கும் பாரதியின் ஆங்கில வாழ்க்கை வரலாற்று நூலில் அவரது ஆங்கிலத்தை மிகவும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். "இவ்வளவு ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு இந்த மனிதர் ஆங்கிலத்தில் அதிகம் எழுதாமல் போய்விட்டாரே!" என்று அவர் வருந்துகிறார். பாரதிக்கு ஷெல்லி, கீட்ஸ் ஆகியோர் மேல் அதிக ஈடுபாடு உண்டு. அதனால்தான் தனது புனைபெயரை ஷெல்லிதாசன் என்று வைத்துக் கொண்டார். வால்ட் விட்மனை இன்று உலகமெல்லாம் தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் அவரைப்பற்றி அறிந்து, புகழ்ந்து எழுதிய ஒரே இந்தியர் பாரதிதான்.
கே: திருலோக சீதாராமுடனான உங்கள் நட்பு குறித்து... ப: பாரதிக்கு அதாரிட்டி என்றால் பாரதிதாசன். அவரையடுத்து திருலோக சீதாராம். எனக்கு மிக நெருங்கிய நண்பர். அவர் நடத்திய 'சிவாஜி' இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். அவர் ஆகமம், சாஸ்திரம் எல்லாம் அறிந்தவர். சிறந்த கவிஞர். நல்ல சொற்பொழிவாளர். அவருடைய 'தேவசபை' கூட்டங்கள் புகழ்பெற்றவை. அவருடைய கவிதைகள் என்னை ஈர்த்தன. அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'சிவாஜி' இதழில் வெளியிட்டேன். அவருடைய கவிதைகளை எல்லாம் தொகுத்து, 'The Poetical Works of Tiruloka Sitaram with Translation and Notes' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறேன்.
கே: சைவசித்தாந்தத்தில் இத்தனை ஆர்வம் எப்படி ஏற்பட்டது? ப: நான் பிறந்தது வேதாந்தக் குடும்பத்தில். ஆனால் ஈடுபாடு வந்தது சைவ சித்தாந்தத்தில். சிவஞான போதம்' நூலுக்கு ஜே.எம். நல்லசாமிப் பிள்ளையின் மொழிபெயர்ப்பு நூலை வாங்கிப் படித்தேன். 1895ல் வெளியான நூல் அது. அதில் எல்லாச் சொல்லும் புரிகிறது. ஆனால், என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை.
அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையில் தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்
என்பது சிவஞானபோதத்தின் முதற்பாடல். உரைநூல்கள் பல வாசித்தும் புரியவில்லை. ஆனால், எல்லாரும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் உரை எழுதியவர் வைஷ்ணவரான டி.ஆர். சீனிவாசாச்சாரியார். அவர் 'உண்மை விளக்கம்' என்ற பெயரில் ஒரு நூலை எழுதியிருந்தார். அதைப் புரிந்துகொண்டால் சைவ சித்தாந்தம் புரிந்துவிடும். அதுபோல திருமுறைகளில் எனக்கு ஈடுபாடு வரக் காரணம் எம்பார் விஜயராகவாச்சாரியார். அவர் சொல்லக் கேட்டதுதான் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணமும், சுந்தரமூர்த்தி நாயனார் புராணமும்.
கே: பெரியபுராணம் உங்களை வசீகரித்தது குறித்துக் கூறுங்கள்.... ப: 1960ல் சுகப்பிரம்மம் ராமசாமி சாஸ்திரிகள் என்று ஒருவர் இருந்தார். அவர் 40 நாட்கள் தஞ்சாவூரில் 'பெரியபுராணம்' சொற்பொழிவு நிகழ்த்தினார். வாரியார் அதனை ஆரம்பித்து வைத்தார். அவர் ஒருமணி நேரம் பேசி, பின்னர், இவர் பேசுவார் என்று அறிவித்து அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர். காரணம், சாஸ்திரிகள் அந்த அளவுக்கு அப்போது பிரபலம் இல்லை. சாஸ்திரிகள் பேசினார், அரைமணி நேரம்தான். அதற்குள் கொட்டு கொட்டென்று கொட்டி விட்டார். இரண்டு நாளைக்கு அப்படி நடந்தது. மூன்றாம் நாள் முதல் சாஸ்திரிகளின் பேச்சைக் கேட்பதற்கென்றே கூட்டம் வர ஆரம்பித்தது.
கே: 'சேக்கிழார் அடிப்பொடி' ஆகவே மாறிவிட்டீர்களே, அது எப்படி? ப: சேக்கிழாரின் பெரியபுராணம் படிக்கப் படிக்கப் புதுப்பொருள் தரவல்லது. வாசிக்க வாசிக்க இன்பம்தான். தொண்டர்களின் புராணங்கள் நம் உள்ளத்தை உருக்கிக் கண்ணீர் வரவழைத்து விடும். பெரியபுராணம் என்பது வரலாறு. இப்படி ஒரு நூல் உலக இலக்கியங்களில் இல்லவே இல்லை, அந்த அளவுக்கு பக்திச்சுவை உடையது. எதுவுமே பெரியபுராணத்திற்கு ஈடாகாது. பெரியபுராணத்தின் மீது, சேக்கிழார் மீது கொண்ட ஈடுபாட்டால் நான் 'சேக்கிழார் அடிப்பொடி' ஆனேன். அந்த ஈடுபாட்டாலேயே பெரியபுராணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.
கே: பெரியபுராணம் மற்றும் திருமுறைகளின் சிறப்புகளாக எதைச் சொல்வீர்கள்? ப: பெரிய புராணம் என்பது பல சிகரங்களை உடையது. எல்லோராலும் எல்லாவற்றையும் எட்டிப் பார்த்துவிட முடியாது. அவனருளால்தான் சாத்தியமாகும். இப்படியன், இன்னிறத்தன், இவ்வண்ணத்தன் என்பது அவன் சொல்லிக் கொடுத்தால்தான் நமக்குப் புரியும். நம் நிலைக்கு அவன் இறங்கி வருகிறான். இரங்கி வருகிறான். நாயன்மார்களின் பெருமையை உலகிற்கு அறிமுகப்படுத்தவே இறைவன் பலவாறாக வருகிறான் என்று சேக்கிழார் சுவாமிகள் சொல்கிறார். அடியார்கள் நமக்கு ஆண்டவனை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆண்டவன் நமக்கு அடியார்களை அறிமுகப்படுத்துகிறான். தில்லை மூவாயிரவர்களில் அந்தச் சிவபெருமானும் அடக்கம். அவனே ஒரு தீக்ஷிதர். அவனே அடியெடுத்துக் கொடுக்கிறான், "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று. அதனால்தான் அவன் 'பக்த பக்திமான்', அதாவது பக்தர்களைப் பக்தி செய்யும் கடவுள். அடியார்க்கு எளியவன். பக்தர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். எந்த நிலைக்கும் கீழிறங்குவான்.
திருவிளயாடற் புராணத்தில் 'பன்றிக் குட்டிக்கு முலைகொடுத்த படலம்' என்று ஒன்று உண்டு. தாய்ப்பன்றி இறந்ததால், சிவனே பெண்பன்றியாக மாறி அங்கிருந்த அத்தனை பன்றிக்குட்டிகளுக்கும் பால் கொடுத்தான். இதைவிட எளிமையாக ஒரு தெய்வம் கீழிறங்கி வர முடியுமா? அன்பெனும் பிடியினில் மட்டுமே அகப்படும் மலை அவன். அன்பே சிவம்தான். ஆனால் அதை "யாரும் அறிகிலார்" என்கிறார் திருமூலர். பக்தியில் மூளைக்கு வேலையில்லை; அனுபவத்திற்குத்தான் வேலை. அனுபூதிதான் இங்கே முக்கியம். அறிவல்ல.
பக்தியால் மட்டுமே அவனை அடைய முடியும். 'அழுதால் அவனைப் பெறலாம்' என்பார் மாணிக்கவாசகர். எதெதற்கோ அழுகிறோம், இறைவனுக்காக அழுகிறோமா? பெரியபுராணத்தை, திருவாசகத்தை வாசிக்கும்போது நம்மால் தாங்கமுடியாது. கண்ணீர் பெருகும். ஆனால், இந்த மாதிரி நூல்களை எரிக்கவேண்டும் என்று சிலர் சொன்னார்கள். நாம் எரிக்கவில்லை. எரிக்காமலேயே அவர்களது அந்த ஆசையைப் பூர்த்தி பண்ணிவிட்டோம். நாம் இவற்றைப் படிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டோம். இந்த நூல்களை ஒவ்வொரு வீட்டிலும் படித்தால் மனமாற்றம், சமூகமாற்றம் எல்லாம் தானாக வரும். மனதிற்கு அமைதி கிடைக்கும். நிம்மதி கிடைக்கும்.
கே: மாணிக்கவாசகரைப் பற்றிச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிடவில்லை. அ.மு. சரவண முதலியார் போன்றவர்கள் 'பொய்யடிமை இல்லாத புலவர்' மாணிக்கவாசகராக இருக்கலாம் என்கிறார்கள். உங்கள் கருத்தென்ன? ப: பலர் இப்படிப் பல கருத்துக்களைச் சொல்வார்கள். தொகையடியார்கள் வேறு. தனியடியார்கள் வேறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 'தில்லைவாழ் அந்தணர்' தொகையடியார். அதேபோன்று 'பொய்யடிமை இல்லாத புலவர்' என்பதும் தொகையடியார்தான். புலவர் என்பது பன்மை. பல புலவர்களை அது குறிக்கிறது. மாணிக்கவாசகரை ஏன் பாடவில்லை என்றால் அவர் சுந்தரர் வாழ்ந்த காலத்தில் இல்லை. அதாவது சுந்தரருக்குப் பின் நூறு வருடம் கழித்துப் பிறந்தவர் மாணிக்கவாசகர். அதனால்தான் சுந்தரர் அவரைப் பாடவில்லை. அவரை அடியொற்றி எழுதிய சேக்கிழாரும் பாடவில்லை. அவ்வளவுதான்.
குடவாயில் பாலசுப்பிரமணியன்: அநபாயன் காலத்தில் பெரியபுராணத்தை சேக்கிழார் சொல்லில் வடித்தார். தாராசுரத்தில் பார்த்தால் 'பொய்யடிமை இல்லாத புலவர்' என்று கல்வெட்டில் எழுதி, அங்கே மூன்று பேரின் உருவங்கள் இருக்கின்றன. அந்தக் கோயில் சேக்கிழார் வாழ்ந்தபோதே கட்டப்பட்ட கோயில். இரண்டாம் ராஜராஜன் காலத்தது. சேக்கிழாரின் கண்காணிப்பில் கட்டப்பட்டது. அங்கே ஒவ்வொரு பேனலிலும் கல்வெட்டுக் குறிப்புகள் இருக்கின்றன. அங்கே 'பொய்யடிமை இல்லாத புலவர்' என்று போட்டு அதில் மூன்று புலவர்களைக் காண்பித்திருக்கிறார்கள். அப்படி இருக்க, 'பொய்யடிமை இல்லாத புலவர்' என்பது மாணிக்கவாசகர் என்ற தனியடியார்தான் என்று சொல்வதில் பொருளில்லை. அதுபோல மாணிக்கவாசகர் திருக்கோவையாரை எழுதவில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். அதிலும் பொருளில்லை. வதுக்கூரில் ஒரு பதினோராம் நூற்றாண்டுச் சோழர் காலச் செப்புப் பிரதிமம் கிடைத்திருக்கிறது. அதில் மாணிக்கவாசகரின் உருவச்சிலை இருக்கிறது. கையில் ஏடு வைத்திருக்கிறார். அந்த ஏட்டில் திருக்கோவையாரின் முதலடி எழுதப்பட்டிருக்கிறது. முதலடி முழுவதும் அதில் இருக்கிறது. இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?
சேக்கிழார் அடிப்பொடி: மாணிக்கவாசகரின் இயற்பெயர் சிவபாத்தியர். இதனை நம்பியாண்டார் நம்பி சொல்கிறார்.
"வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனை வளர் தில்லை மன்னைத் திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தருதிருக் கோவைகண்டே"
என்று, சிவபாத்தியன் எழுதிய திருச்சிற்றம்பலக் கோவை குறித்து அவர் சொல்லியிருக்கிறார். அதுதான் திருக்கோவையார். இப்படி அசைக்க முடியாத பல இலக்கிய, வரலாற்று ஆதாரங்கள் இருந்தாலும் சிலர் பிடிவாதமாக இவ்வாறு சொல்லிக் கொண்டுதான் உள்ளனர்.
கே: புலவர் பி.வி. அப்துல் கபூர் உங்கள்மீது ஒரு சித்திரக்கவிமாலை எழுதியிருக்கிறாரே, அதுகுறித்துச் சொல்லுங்கள். ப: அவர் சிறந்த கவிஞர். எளிமையானவர். மு. ராகவையங்கார், ரா. ராகவையங்கார், உ.வே.சா., வேங்கடசாமி நாட்டார் எனப் பலரது அபிமானம் பெற்றவர். என்மீது அவருக்கு மிகுந்த அன்புண்டு. என்மீது தினமும் ஒரு சித்திரக்கவி எழுதினார். பின்னர் அவை ஒரு நூலாக வெளியாகின. தற்போது அவரது பேத்தி அவரைப் போன்றே சித்திரக்கவிகள் சிறப்பாக எழுதி வருகிறார்.
கே: கவிஞர் ரவி சுப்பிரமணியன் உங்களைப்பற்றி எடுத்த ஆவணப்படம்குறித்து... ப: ரவி சுப்பிரமணியன் நல்ல கவிஞர். அவர் எடுத்த ஆவணப்படத்தை யூ ட்யூபில் பார்க்கலாம்.
அவர் திருலோக சீதாராம் குறித்தும் ஓர் ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். மிகவும் உழைத்து அதனை அவர் எடுத்திருக்கிறார். (அதனைக் காண)
கே: இன்றைக்கு சமயம், ஆன்மிகம், பக்தி வளர்ந்திருக்கிறதா? ப: நம் உடம்பில் கால் மட்டும் வீங்கினால் அது பயில்வானா? அது வீக்கம். அதுதான் இன்றைய நிலைமை. 'பக்தி' என்பது சாதாரணமானதல்ல. கடினமானது. "பக்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ எத்தினாற் பத்தி செய்கேன்" என்கிறார் அப்பர் பெருமான். அவரைவிடப் பெரிய பக்திமான் உண்டா? இன்றைக்கு இருப்பது சுயநலம் சார்ந்த பக்தியாக இருக்கிறது.
கே: உங்கள் நூலகத்தின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. ப: எனக்கு புத்தகப் பைத்தியம். 90 புத்தகங்களோடு ஆரம்பித்தது இன்றைக்கு 50,000 நூல்களுக்கு மேல் இருக்கிறது. இதில் ரோஜா முத்தையா செட்டியார் எனக்கு முன்னோடி. புத்தகங்களை எப்படி வாங்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது அவர்தான். வெள்ளிக்கிழமை மாலையே நானும் நண்பர் ராமலிங்கமும் கோட்டையூருக்குக் கிளம்பிவிடுவோம். இரண்டு நாட்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்து அவருடைய புத்தகங்களைப் பார்ப்போம். அவர் தேடித்தேடிப் புத்தகங்களைச் சேகரித்தவர். ஒரு பேட்டி ஒன்றில், "உங்களுக்கு இந்தப் புத்தகச் சேகரிப்பில் எப்படி ஆர்வம் வந்தது?" என்ற கேள்விக்கு, "எனக்கு இதைத் தவிர வேறொன்றும் தெரியாது" என்று பதில் சொல்லியிருந்தார். "உங்கள் வாழ்க்கையில் எது உங்களுக்கு அதிகச் சந்தோஷம், எது அதிக துக்கம்?" என்ற கேள்விக்கு, "உ.வே.சா. காலத்தில் வாழ்ந்தது சந்தோஷம்; மூர் மார்க்கெட் எரிந்தபோது வாழ்ந்தது துக்கம்" என்றார். அப்படியொரு புத்தகக் காதல் அவருக்கு. தன் சேகரிப்பில் இருந்த அனைத்தையும் அவர் வாசித்திருந்தார் என்பதிலிருந்து அவரது ஞானத்தை நாம் எடை போட்டுக்கொள்ளலாம்.
கே: உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்... ப: மனைவி கல்யாணி பட்டப்படிப்பு படித்தவர். வடமொழி ஞானம் மிக்கவர். முதல் மகன் டி.ஆர்.சுரேஷ் எம்.டி. சைக்கியாட்ரிஸ்ட். சென்னை கோடம்பாக்கத்தில் சொந்தமாக க்ளினிக் வைத்திருக்கிறார். அவரது மனைவியும் சைக்கியாட்ரிஸ்ட் தான். இரண்டாவது மகன் டி.ஆர். கணேஷ். பஹ்ரைனில் வேலை பார்க்கிறார். மூன்றாவது மகன் டி.ஆர். ரமேஷ் கோவில் நிலங்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறார். அதற்காகக் கோவில் தொழுவோர் சங்கம் (www.templeworshippers.in) என்ற அமைப்பை நிறுவிப் பாடுபட்டு வருகிறார். நிறைய நிலங்களை மீட்டிருக்கிறார். நான்காவது மகன் டி.ஆர். மகேஷ் சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சேக்கிழார் அடிப்பொடி அவர்கள் பேசப்பேச நம்மை மறந்து போகிறோம். "தென்றல் செய்துவருவது பெரிய காரியம். 'அப்பாலும் அடிசார்ந்தார்க் கடியேன்' என்பது மாதிரி, தென்றல் இதழும் அப்பால் இருந்துகொண்டு தமிழ்ப்பணி செய்துவருவது பெரிய விஷயம். எனது வாழ்த்துக்கள்" என்கிறார். பூஜையறையில் சேக்கிழாரையே தெய்வமாக வைத்து வழிபடும் 'சேக்கிழார் அடிப்பொடி'யின் பாதம் பணிந்து ஆசிபெற்று நாமும் விடைபெற்றோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன் சந்திப்பில் உதவி: முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
*****
ஙப்போல் வளை ஆத்திசூடி 'ஙப்போல் வளை' என்கிறது. பலரும் 'ங' என்ற எழுத்து எப்படி வளைந்திருக்கிறதோ அப்படி உடம்பை வளைக்க வேண்டும் என்பதாகப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். உண்மையான பொருள் அதுவல்ல.
'ங' என்ற எழுத்தும் 'ங்' என்ற எழுத்தும் மட்டுமே சொற்களில் பயின்று வரும். பிற எழுத்துக்கள் வரா. ஆக, ஒரு தனி எழுத்து, தன் இனக்குடும்பத்தையே காப்பாற்றுகிறது. அதுபோன்று ஒவ்வொருவரும் நொடித்துப் போகாது தன் இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் பொருள். 'வளை' என்றால் சூழ்ந்து கொள்; காப்பாற்று என்று பொருள். ஸ்ரீரங்கத்தில் அடைய வளைஞ்சான் தெரு என்று ஒன்றுண்டு. எல்லாரையும் சேர்த்துக் காப்பாற்றிய தெரு என்பது அதன் பொருள். அப்பர் பெருமான் தான் இந்த ஆத்திசூடிப் பெருமைக்கு வழி வகுத்துக் கொடுத்தவர். "'ஙகரவெல் கொடியான்" என்று சிவபெருமானை அவர் புகழ்கிறார். 'ங'வைப் போன்றிருக்கும் எருதைக் கொடியாகக் கொண்டவன் என்கிறார். ஆக, நம் கண்ணுக்குப் படாதது, நம் புலனுக்குத் தெரியாததெல்லாம் பெரியவர்களுக்குப் புலப்படும்.
- சேக்கிழார் அடிப்பொடி
*****
மையலும் மயிலும் மொழிபெயர்ப்பு மிகவும் முக்கியமானது. ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் பெயர்க்கும்போது அறத்துப்பால், பொருட்பாலைச் செய்தார். காமத்துப்பாலைத் தொடவில்லை. காரணம், அவர் ஒரு புராட்டஸ்டண்ட் மதத்துறவியாக என்பதுதான். இதைச் செய்வது துறவியான தனக்குச் சரிவராது என்று நினைத்தார். ஆனால், பின்னர் அதனை மொழிபெயர்த்தார். அதற்குக் காரணம் சொல்லும்போது, "இந்தத் தலைப்பை வள்ளுவர் மாதிரி வேறு யாரும் நியாயமாகக் கையாண்டு இருக்க முடியாது என்பதால் இதனைத் துணிந்து செய்ய முடிவெடுத்து மொழிபெயர்த்தேன்" என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு முதல் குறளிலேயே பிரச்சனை வந்துவிட்டது.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
என்பது காமத்துப்பாலின் முதல் குறள். அணங்கு என்றால் தேவலோகப் பெண். ஆய்மயில் என்றால் விசேஷமான மயில் போன்றவள். "இப்பெண் ஒரு தெய்வமகளோ அல்லது தோகைவிரிக்கும் மயிலோ அல்லது மாதுதானோ? இன்னவள் என்று அறியமுடியாமல் என் நெஞ்சு மயங்குகின்றது!" என்பது இதன் பொருள். இதனை ஆங்கிலத்தில் peacock என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும். அப்போது பாலினம் மாறிவிடுகிறது. பெண்ணை, ஆணோடு ஒப்பிடுவதாகிவிடும். Peahen என்றும் சொல்ல முடியவில்லை. பின் peafowl என்று மொழிபெயர்த்தார்.
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear, Is she a maid of human kind? All wildered is my mind!
ஜி.யு.போப் இதில் முன்னோடி. அன்றைய அரசாங்கத்தால் கல்லூரியில் தமிழ் மற்றும் தெலுங்குப் பேராசிரியராக அவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். அது வாழ்நாள் நியமனம். பிற மொழிகளும் அவருக்குத் தெரியும். புறநானூறு எல்லாம் எப்படிப் பண்ணவேண்டும் என்று அவர்தான் ஆரம்பித்து வைத்தார்.
- சேக்கிழார் அடிப்பொடி
*****
நாதனா, நாமமா? நாதனைவிட நாமத்திற்கு வலிமை அதிகம். அதனால்தான் மாணிக்கவாசகர் "நமச்சிவாய வாஅழ்க!" என்று சிவனின் நாமத்தை முன்வைத்தார். வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதனின் நாமம். நாதன் என்பது பிரம்மம். அது 24 கேரட் தங்கம்மாதிரி. அப்படியே இருக்கும். நகை செய்யமுடியாது. ஆனால், நாமம் என்பது செம்புகலந்த தங்கம் மாதிரி. நம் இஷ்டத்திற்கு பக்திசெய்து வளைத்துக் கொள்ளலாம்.
ஆஞ்சநேயர் இலங்கைக்குப் புறப்பட்டார். கடற்கரைக்கு வந்ததும் "ராமா" என்றார். கடல் தாண்டிவிட்டார். ராமர் இலங்கைக்குச் செல்ல கடற்கரைக்கு வந்தார். பாலம் கட்டினார். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நாமத்தின் மகிமையை. ஆண்டாள் "ஓங்கி உலகளந்த உத்தமனைப் பாடி" என்று சொல்லவில்லை. "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்று சொல்கிறாள். துச்சாதனன் துகிலுரியும்போது திரௌபதி,
"வையகம் காத்திடுவாய்! - கண்ணா மணிவண்ணா என்றன் மனச்சுடரே ஐய நின் பதமலரே - சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி"
என்று கண்ணனின் நாமத்தைச் சொல்லித் துதிக்கவும் புடவை வளர்ந்தது. மானம் காத்தது. ஆக, எப்போதும் நாம் இறைவனின் நாமத்தைச் - அது சிவ நாமமோ, ராம நாமமோ எதுவாக இருந்தாலும் - சொல்லித் துதித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது எப்போதும் துணையாக இருந்து நம்மைக் காக்கும். இவற்றை ஞாபகப்படுத்த நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகம் என்று எத்தனையோ நூல்கள் இருக்கின்றன. அவற்றை பக்தியோடு வாசித்தால் நல்லது நடக்கும்.
- சேக்கிழார் அடிப்பொடி
*****
பெண்ணிற் பெருந்தக்க யாவுள! தில்லையில் நடப்பது ஆனந்த தாண்டவம். ஆனால் அந்தத் தாண்டவத்தை மனிதசரீரம் உள்ளவர்கள் பார்க்கமுடியாது. ஆனந்தம் வேறு, இன்பம் என்பது வேறு. இன்பம் ஒன்று பலவாய்ப் பிரிவது. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய்" என்றார், பாரதியார். ஆனால், ஆனந்தம் என்பது முழுமையானது. பிரிக்க முடியாதது. பரிபூரணமானது. அதனை நமது உடலின் பவ கரணங்களால் தாங்க முடியாது. அதற்காகத்தான் சிவனின் அருகில் 'சிவகாமி' இருக்கிறாள். சிவபெருமானிடமிருந்து வரும் அந்த ஆனந்த அலைகளை, மனிதர்கள் தாங்கும் அளவிற்கு மட்டுப்படுத்திக் கொடுப்பதற்காக அவள் இருக்கிறாள்.
பிறந்து பத்துநாள் ஆன குழந்தைக்கு ஜுரம் வந்தால் ஊசி போடமுடியுமா? மருந்து கொடுக்கமுடியுமா? அது தாங்குமா? அதற்காக அம்மா மருந்து சாப்பிடுவாள். அவள் சாப்பிட்ட மருந்து அவளுள் சேர்ந்து, தாய்ப்பால் மூலம் குழந்தைக்குச் சேரும். அதுதான் தாய்மை. "பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென நோயுண் மருந்து தாயுண்டாங்கு" என்று குமரகுருபரர் சொல்வார்.
இப்படி இறைவனை, சிவன், சக்தி என்று ஆண், பெண்ணாகப் பிரித்தாலும் 'பால்' கடந்தது இறை. கம்பன் சொல்லுவான், "ஆண்பாலோ, பெண்பாலோ, அப்பாலோ, எப்பாலோ" என்று. மனைவியை பிரம்மா நாவில் வைத்துக் கொண்டார். விஷ்ணு நெஞ்சினில் வைத்தார். சிவனோ உடலின் பாதியையே தந்து விட்டார். இதிலிருந்து பெண்களுக்கு எவ்வளவு ஏற்றத்தை நம் தெய்வங்கள் கொடுத்திருக்கின்றன என்று பார்க்கலாம்.
இப்படிப் பெண்களுக்கு மிக உயர்வான இடத்தை இந்து மதம் அளித்துள்ளது. பாரதியார் சொல்வார், "காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்" என்று. திருத்தொண்டர் புராணத்தில் வரும் அன்பர்கள் எல்லாம் நாயன்மார்களாக மலர்வதற்குக் காரணம் அவர்களுக்கு வாய்த்த பத்தினியர்தாம். அவர்கள் மனைக்கு வேர் மாதிரி. அஸ்திவாரம் வெளியே தெரியாது, கட்டடம்தான் தெரியும்.
'இல்லாள்' என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு ஆண்பால் கிடையாது. 'இல்லான்' என்றால் அதற்கு 'எதுவும் இல்லாதவன்' என்பது பொருள். அதுபோல சமஸ்கிருதத்தில் 'கிருஹணி' என்பார்கள். அதற்கும் ஆண்பால் கிடையாது. பெண்களுக்கு இவ்வளவு உயர்ந்த இடத்தை நமது சமூகம் அளித்திருக்கிறது! இன்றைக்கு, பெண்களுக்கு உயர்வைக் கொடுக்க மனமில்லாவிட்டாலும் அவர்களது உயர்வை அங்கீகரித்தாலே போதும். ஆனால், அதுகூட நடப்பதில்லை. எல்லாம் மாறிப் போய்விட்டது. இதனை அடிக்கடி நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அப்படி நினைவூட்டுவாரும் அதிகமில்லை!
- சேக்கிழார் அடிப்பொடி |