மே 6, 2017 அன்று மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுவிழா மார்த்தோமா' சர்ச்சில் நடைபெற்றது. ஆலன், ஃப்ரிஸ்கோ, ப்ளேனோ, மர்ஃபி, ப்ளவர்மௌண்டு, இர்விங் ஆகிய பள்ளி நிர்வாகிகள் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுப் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கினர். சிறப்பு விருந்தினராக இர்விங் நகர இளைஞர் கவுன்சில் உறுப்பினர் திரு. மைக்கேல் ஸ்டாலின் வந்திருந்து சிறப்பித்தார்.
திருமதி. கஸ்தூரி கோபிநாத் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. கோகுலத்தில் கண்ணன், தித்திமிதிமி, பூனையாரே பூனையாரே, ச..ரி..க..ம... போன்ற நடனங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்ததென்றால் குழந்தைத் தொழிலாளர்கள், மரம் வளர்ப்போம் போன்ற நாட்டிய நாடகங்கள் சிந்திக்க வைத்தன. 'சிலப்பதிகாரம்' நாடகத்தில் மாணவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், நடிப்பும் பாராட்டப்பட்டன.
திருமதி. லதா இளங்கோவன் 2016-17 ஆண்டுக்கான நிதி அறிக்கையை வாசித்தார். மைக்கேல் ஸ்டாலின் அமெரிக்காவில் தமிழ்க்கல்வியின் அவசியத்தை அழகாக எடுத்துரைத்தார். 'தமிழோடு விளையாடு' போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கினார். அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கால்டுவெல் வேள் நம்பி, 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பித்த டாலஸைச் சேர்ந்த சாதனையாளர்களை மேடையில் கௌரவித்தது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது. திருமதியர் கீதா அருணாசலம், சித்ரா மகேஷ் ஆகியோர் முறையே 2014, 2016ல் குறளரசி விருது பெற்றனர். 2017ல் செல்வி. சீதா இராமசாமி 'குறள் இளவரசி' ஆனார். டாலஸைச் சேர்ந்த மூவர் இவ்விருது பெற்றது இந்நகருக்குப் பெருமை சேர்ப்பதாகவும், மூவருமே பெண்கள் என்பது அதிகச் சிறப்பு என்றும் கால்டுவெல் குறிப்பிட்டார்.
திரு. வெங்கடேசன் வீரப்பன் நன்றியுரை ஆற்றினார். இரண்டாவது வருடமாகத் தொடர்ந்து 'Tamilonline Foundation' வழியே பள்ளிக்கு நிதியுதவி வரும் தென்றல் பதிப்பாளர் திரு. சி.கே. வெங்கட்ராமன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியை MTS வானொலி தொகுப்பாளர்களான RJ கோமதி மற்றும் RJ டேனி சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.
கீதா அருணாசலம், டாலஸ், டெக்சஸ் |