ஃப்லின்ட்: தியாகராஜ ஆராதனை
மே 20, 2017 அன்று ஃப்லின்ட் அருள்மிகு பஸ்ச்சிம காசி விசுவநாதர் ஆலயத்தில் கிரேட் லேக்ஸ் ஆராதனை கமிட்டியினர் (GLAC) ஏற்பாடு செய்த தியாகராஜ ஆராதனை 30வது ஆண்டுவிழா நடந்தேறியது. திரு. வெங்கடேசன் மற்றும் திருமதி. அம்புஜா வெங்கடேசன் பூஜை செய்து துவக்க, மெட்ரோ டெட்ராய்ட் வாழ் மாணவர்கள் தியாகராஜ கிருதிகளை அற்புதமாகப் பாடினர். கர்நாடக இசைக்கலைஞர் திரு. மதுரை R. சுந்தர் முன்னிலையில் மிச்சிகன்வாழ் இந்தியர்கள் தியாகராஜ கிருதிகளைப் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செய்தனர். அடுத்து, ஆசார்ய ரத்னாகர திரு. நெய்வேலி R. சந்தானகோபாலன் அவர்கள் இயக்கத்தில், குரு கஸ்தூரி சிவகுமாரிடம் பயின்ற 40 பாடகர்கள் ஒருங்கிணைந்து பாடியது மிகவும் இனிமையாக இருந்தது.

காலையில் குமாரி அனாஹிதா மற்றும் குமாரி அபூர்வாவின் கச்சேரி அரங்கேறியது. டொரொன்டோவைச் சார்ந்த திரு. அபய் குமார் (வயலின்), மிச்சிகனின் திரு. ராஜசேகர் ஆத்மகுரி (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசித்தனர். இவர்களின் கரஹரப்ரியா ராக ஆலாபனை அருமை.

பின்னர், இளவரசர் அஸ்வதி திருநாள் ராமவர்மா அவர்களின் கச்சேரி அரங்கேறியது. அவனீஸ்வரம் திரு. S.R. வினு (வயலின்), திருச்சி திரு. ஹரிகுமார் (மிருதங்கம்), திரு. கார்த்திக் (கடம்) ஆகியோர் சிறப்பாகத் துணை போயினர். மாயாமாளவகௌளை ராக ஆலாபனையும் ராம வர்மா அவர்களின் வர்ணனையும் பலத்த பாராட்டுப் பெற்றன. விழாவிற்கு சங்கீத கலாநிதி திரு. திருச்சி சங்கரன் வந்திருந்து சிறப்பித்தார்.

காந்தி சுந்தர்,
ஃப்லின்ட், மிச்சிகன்

© TamilOnline.com