அமெரிக்க தெலுங்கு அசோசியேஷனின் மாநாட்டில் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் (த்ரிவர்கமு அல்லது முப்பால்) பாடல்களுடன், பரதநாட்டியம் நடனமும் பறையிசையும் முத்தாய்ப்பாய் இருந்தன.
TANA என்றழைக்கப்படும் வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷனின் ஆண்டுவிழா செயிண்ட் லூயிஸ் நகர அமெரிக்கா சென்டரில் மே 26 - 28 நாட்களில் நடைபெற்றது. . அமெரிக்கா முழுவதிலிருந்தும் 5000 பேர் பங்கேற்றனர். ஆந்திரா மாநில துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அமைச்சர் கம்மிநேனி ஸ்ரீனிவாஸ், தெலுங்கானா மாநிலத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராமாராவ், பாராளுமன்ற உறுப்பினர் முரளி மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் சிறப்பு நிகழ்ச்சியாக அமெரிக்க நிகழ்கலைக் கழகத்தின் பறையிசை இடம்பெற்றது. திருக்குறள் (த்ரிவர்கமு) பாடல்களுக்கு சிறப்பு இசையமைத்து நடனத்துடன் அரங்கேற்றினர். பின்னர் பறையிசைக்கு ஏற்ப பெண்கள் பரதநாட்டியம் ஆடினார்கள். திருக்குறளை 15 பேர் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார்கள். அதில், தலபட்டு ஸ்ரீராமுலு ரெட்டியின் த்ரிவர்கமு நிகழ்ச்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டது. முப்பாலிலும் உள்ள குறட்பாக்களின் தெலுங்கு மொழிபெயர்ப்பை திருபுவனம் ஆத்மனாதன் இசையமைத்துப் பாடி பதிவுசெய்து அனுப்பியிருந்தார்.
செயின்ட் லூயிஸ் நாட்டிய பதாஞ்சலி குழுவினர் நடனமாடினர். நடனத்தை ஆசிரியர் பிரதிபா சுதிர் அமைத்திருந்தார். மேலாண்மை அசோக், பறை இயக்கம் பாலா, பயிற்சியாளர் செந்தில் நாயகி, தாள இயக்கம் நந்தா, பின்னணி யசோதா, ரம்யா, கவிதா, ஒருங்கிணைப்பு ரமேஷ் செருபலா, கலை வடிவாக்கம் இரா பொற்செழியன் செய்தனர். 40 கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்கினார்கள்.
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |