ஹார்வர்டு தமிழிருக்கை: கொடை நடை
மே 27, 2017 அன்று ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கை அமைக்க உதவவென பாஸ்டன் அருகில் நடைபெற்ற கொடை நடையில் (Harvard Tamil walkathon) பங்குபெற நூற்றுக்கணக்கில் நியூ இங்கிலாந்து தமிழன்பர்கள் திரண்டனர். கனெக்டிகட் மாநிலத்திலிருந்து வந்திருந்த 'மானுடம் பறை' அணியின் பறையிசையுடன் நாஷுவாவிலுள்ள மைன்ஃபால்ஸ் பூங்காவில் நடை துவங்கியது. அனைவரும் உற்சாகத்துடன் ஐந்து மைல் தொலைவு நடந்தனர். தமிழ் மக்கள் மன்றம், நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், பாஸ்டன் தமிழ் மன்றம், கலைமகள் தமிழ்ப்பள்ளி, கோலம் நடன அகாடமி, சிசுபாரதி, கனெக்டிகட் தமிழ்ச் சங்கம், ரோட் ஐலண்டு தமிழ்ச் சங்கம், பாரதி வித்யாஸ்ரமம், லோகவாணி, அப்யாஸ் சங்கீத வித்யாலயம் உள்பட வடகிழக்கு அமெரிக்காவிலுள்ள பல சமூக, கலாசாரப் பணி நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் இருக்கைக்கு 75000 டாலர் திரட்டப்பட்டது.

விழாவைத் துவக்கிவைத்த Dr. சுந்தரேசன் சம்பந்தம் தமிழ் என்பது நாடு, ஜாதி, மதம் போன்ற பேதங்களைக் கடந்து ஒருங்கிணைக்கும் பெருஞ்சக்தி என்று கூறினார். தமிழ் மக்கள் மன்றத் தலைவர் திரு. கார்த்திக் ராமு, அந்த நாள் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமையுடன் நினைக்கவேண்டிய பொன்னாள் என்று கூறினார். மாசசூசட்ஸ் மாநில ஆசிய அமெரிக்க ஆணையர் Dr. அனில் சைகல் மற்றும் ஏகல் நிறுவனத்தின் இயக்குனர் திருமதி. ரஞ்சனி சைகல், இளந்தமிழ் மாணவர்கள் லயா அனந்தகிருஷ்ணன், சக்தி குமரேசன் அருமையாக உரையாற்றினர். நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கத் தலைவர் திருமதி. பமிலா வெங்கட் நன்றியுரை ஆற்றினார்.

ஹார்வர்டு தமிழிருக்கை முயற்சிக்கு ஆதரவாக பாஸ்டனில் வேறு பல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. கோலம் நடன அகாடமியைச் சேர்ந்த திருமதி. சுஜாதா மெய்யப்பன் மற்றும் மாணவியர் ஜூன் 3ம் தேதி, ஆண்டோவர் சின்மயா மாருதி அரங்கில் 'வேலும் வேய்ங்குழலும்' என்ற நடன நிகழ்ச்சியை நடத்தினர். ஜூன் 18 அன்று தமிழ் மக்கள் மன்றம், லோவல் நகரத்தில் 'கோடைக் கொண்டாட்டம்' என்ற கேளிக்கை-விளையாட்டு விழா (பார்க்க: https://goo.gl/Tk53ND) நடத்தியது.

நன்கொடை அளிக்கவும், மேலும் அறியவும்:
வலைமனை: harvardtamilchair.org
கொடை நடை படங்களுக்கு: https://goo.gl/VWQsrz

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com