ஜூன் 4, 2017 அன்று செரிடோஸ் நகரில் (கலிஃபோர்னியா) இயங்கிவரும் பாரதி தமிழ் கல்வி இரண்டாம் ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. மே 21ம் தேதியன்று மாணவ மாணவியர் ITA பாடத்திட்டத்தின்கீழ் முதலாம் ஆண்டுத் தேர்வெழுதி, நூறு விழுக்காடு தேர்ச்சிபெற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பற்று உறுதிமொழியுடன் விழா ஆரம்பமானது.
விழா அமைப்பாளர் திரு. கணேசன் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் திரு. குரு ஆண்டறிக்கை வாசித்தார். கொன்சால்வஸ் பள்ளி முதல்வர் திரு. ராபர்ட் பென்கோ மாணவ மாணவியருக்குச் சான்றிதழ்கள் வழங்கினார், அவருக்குத் தமிழ்ப்பள்ளி முதல்வர் நினைவுப்பரிசு வழங்கினார்.
மழலையர் முதலில் ஆத்திசூடி வாசிக்க, அடிப்படை 1 மாணவர்கள் பாரதிதாசன் கவிதைகள், 'நாங்க படிச்சது' என்ற தலைப்பில் உரை, 'நான்கு முட்டாள்கள்' என்ற நாடகம், கொஞ்சுதமிழில் கதை என்று வழங்கி மனதைக் கவர்ந்தனர். நிலை 1 மாணவர்கள் 'பாகுபழி' நாடகத்தால் வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்தனர். அடிப்படை 2 மற்றும் நிலை 1 மாணவர்கள் 'எங்கள் பள்ளி முதல்வர்', 'கல்வியின் பெருமை' என்ற தலைப்புகளில் பேசி அசத்தினர். பிறகு பரதநாட்டியம், பாரதியார் பாடல்கள், சினிமாப் பாடல்கள், வட்டாரத் தமிழ் என்று கலகலக்க வைத்தனர். இந்தியாவிலிருந்து பேரன் பேத்திகளைப் பார்க்கவந்திருக்கும் தாத்தா, பாட்டிகளின் கையால் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர் திரு. பாபநாச வீரபாகு நன்றியுரை வழங்கினார். சுனிதா மற்றும் கணேசன் விழாவைச் சுவைபடத் தொகுத்து வழங்கினர்.
செந்தில் கருப்பையா, செரிடோஸ், கலிஃபோர்னியா |