குமாரசாமி தமிழ்ப்பள்ளி: ஆண்டுவிழா
ஜூன் 11, 2017 அன்று குமாரசாமி தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் நியூ ஜெர்சி சாமர்செட் நகரம் உக்ரைனியன் அரங்கத்தில் நடந்தேறியது. முனைவர் கபிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து திரு. இராஜாமணி ஆண்டறிக்கை வாசித்தார். 2014ம் வருடம் 70 மாணவ மாணவியர், 12 தன்னார்வ ஆசிரியர்களோடு ஆரம்பித்த பள்ளி, தற்போது 195 மாணவ மாணவியர் மற்றும் 40 ஆசிரியர்களோடு வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்திலிருந்து (American Tamil Academy) வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் முனை. அரசு செல்லய்யா, முனை. சிவக்குமார் இராமச்சந்திரன், முனை. வாசு அரங்கநாதன் ஆகியோரின் வாழ்த்துக்களோடு கலைநிகழ்ச்சிகள் தொடங்கின.

மழலைநிலை மாணவர்கள் குழு நடனம், 'ஊரின் சிறப்பு' என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் தங்களின் சொந்த ஊர்களின் சிறப்பைப் பற்றிய உரை வெகு அழகு. நிலை 1 மாணாக்கர்கள், திருக்குறளிலிருந்து கதைகளையும், பள்ளித் தமிழ் வகுப்பு எப்படி நடைபெறும் என்பதையும் பாட்டு நடனத்தோடு நிகழ்த்திக் காட்டினார்கள். கம்பர், பாரதியார், இளங்கோவடிகள், ஒளவையார் மற்றும் தமிழ்ப்புலவர்கள் போல் வேடமணிந்து வந்து மகிழ்வித்தார்கள். நிலை 2 மாணவ மாணவியர் வழங்கிய 'அன்றும் இன்றும்' நிகழ்ச்சி, நமது வாழ்க்கைமுறை எப்படி மாறிவிட்டது என்பதைச் சுட்டிக் காட்டியது. 'திருவிளையாடல்' நாடகம், 'பாரதியாக நான்' மேடைப்பேச்சு மெய்சிலிர்க்க வைத்தன.

இடைவேளைக்குப்பின், நிலை 3 மாணாக்கர்களின் சுற்றுப்புறச்சூழல் காப்பதன் அவசியத்தைப் பற்றிய பேச்சு, நாட்டுப்புறப்பாடல்கள், திருக்குறள் பாடல்களுக்கு ஆடிய நடனம் அற்புதம். நிலை 4 மாணவர்கள் மேடைப்பேச்சு, வினாடிவினா, தமிழில் 'பிறந்தநாள் வாழ்த்துப் பாட்டு' என்று அரங்கம் அதிரச் செய்தார்கள். பறையிசையை மாணவர்கள் ஆசிரியர் குழு நடனத்துடன் இசைத்தனர்.

சிறப்பு விருந்தினர்களும், நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் திரு. கல்யாண் முத்துசாமி, திருமதி. ரேணுகா குமாரசாமி மற்றும் வட அமெரிக்கா வளர்தமிழ் இயக்கத் தலைவர் முனை. அருள் வீரப்பன், மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் விருந்தினர்களும் தமது உரைகளில் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சேவையைப் பாராட்டினார்கள். பங்கேற்ற மாணவ மாணவியர்க்கும், ஆசிரியர்கள் தன்னார்வலர்களுக்கும் சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகக் குழுவின் நன்றியுரையோடு விழா இனிதாக முடிந்தது.

தொடர்புக்கு:
மின்னஞ்சல்: contact@sbtamilschool.org
வலைமனை: www.sbtamilschool.org

செந்தில் கருப்பையா,
செரிடோஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com