நியூ ஜெர்சி: 'ராமானுஜ தர்சனம்'
பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது வருஷத்தை 'ஸ்ரீ ராமானுஜசார்யா சஹஸ்ராப்தி' என்பதாக உலகெங்கிலும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். நியு ஜெர்சியில் 'ஸ்ரீ பாஷ்யகார யுவவிகாஸ்' என்னும் ஆன்மீக அமைப்பை நடத்திவரும் திருமதி. விஷ்ணுப்ரியா 'ராமானுஜ தர்சனம்' என்னும் 3 மணிநேர நாடகத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, சுமார் 30 குழந்தைகளைக் கொண்டு நடத்தியுள்ளார். இந்த நாடகம் மேடையேறிய விவரம்:

ஏப்ரல் 30: ஸ்ரீவாரி ஸ்ரீ பாலாஜி கோவில், ஃப்ராங்க்லின், நியூ ஜெர்சி
மே 17: குருவாயூரப்பன் கோவில், மோர்கன்வில், நியூ ஜெர்சி
ஜூன் 17: ஸ்ரீ ரங்கநாதர் கோவில், பமோனா, நியூ யார்க். ஸ்ரீ கிருஷ்ண தேசிகர் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில்.

ராமானுஜர் பூவுலகத்தில் அவதரித்தது முதல், அவர் சமூகத்திற்கு ஆற்றிய அரிய தொண்டுகளை இந்த நாடகம் சித்திரித்தது. அவர் வேத வேதாந்தங்களின் உண்மைப் பொருளை விளக்கி வைணவ மதத்தின் மேன்மையை நிரூபித்ததை எடுத்துக்காட்டியது. ராமானுஜர் பரமாத்வான ஸ்ரீமன் நாராயணன் அனைவருக்கும் பொதுவானவன், அவனையடைய உலகில்வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சமமான உரிமையுண்டு என்பதை உணர்த்தியதையும் நாடகம் தெளிவுபடுத்தியது.

நாடகத்தின் வசனம் முழுவதும் ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் எழுதப்பட்டிருந்தது. இதில் நடித்த பல குழந்தைகளுக்குத் தாய்மொழி தமிழல்ல என்பது இதன் பிற சிறப்புகளாகும். குழந்தைகளைக் கொண்டே இத்தகைய அற்புதமான நாடகத்தை அரங்கேற்றியது விஷ்ணுப்ரியா அவர்களின் மிகப்பெரும் வெற்றி என்பதில் ஐயமில்லை. உ.வே. காரப்பன்காடு வெங்கடாசாரியார் பரம்பரையில் வந்த விஷ்ணுப்ரியா, 'ஸ்ரீ பாஷ்யகார யுவவிகாஸ்' அமைப்பை 2012ல் தொடங்கி ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை இளைய தலைமுறையினருக்குக் கற்பித்துவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஸ்ரீநிவாசன்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com