சம்ஸ்கிருதி: ஆண்டுவிழா
ஜூன் 17, 2017 அன்று, திருமதி. செளம்யா ராஜராம் அவர்களின் சம்ஸ்கிருதி நாட்டியப் பள்ளி ஆண்டுவிழா பெட்ஃபோர்டில் உள்ள First Church of Christ வளாக அரங்கத்தில் சிறப்பாக நடந்தது. செளம்யா கலாக்ஷேத்ராவின் மாணவி ஆவார்.

கடவுள் வணக்கத்தை அடுத்து அங்கிகம், நமஸ்காரம் தொடர்ந்தன. பின்னர் ப்ரியாவும் ரேவதியும் 'அற்புத நர்த்தன' என்ற கீர்த்தனத்திற்கு அற்புதமாக நடனமாடினர். ஆன்யா, லாவண்யா, மாயா, பல்லவி, சவிதா, ஶ்ரீமதி, வித்யா, அடவுகளை அழகாக ஆடியதைத் தொடர்ந்து 'சம்போ சங்கர' என்ற நாமாவளிக்குச் சிறுமிகள் அனன்யா, கெளரி, நேஹா, ரியா, ஷர்மதா, சுமேதா அழகான பாவத்துடன் ஆடியது கண்கொள்ளாக் காட்சி. 'ரார வேணு' என்ற ஸ்வரஜதிக்கு கனகச்சிதமாக லக்ஷ்யா, மீரா, ஷ்ரேயா, ஷ்ரேயா, ஷ்வேதா நடனமாடினர்.

சிறுமியர் மீனு, சாரா தாமே அடவுகளுடன் வடிவமைத்த ஒரு பேராசைக்கார நாயின் கதையை உணர்வுபூர்வமாக அபிநயித்து ஆடினர். பின்னர் அலாரிப்பு (கபி,ஹரிணி, மாயா, நீலாக்ஷி, ப்ரியா, ரேவதி, சிந்து, த்ரிஷா), கணேச கெளத்துவம் (லக்ஷ்யா, மீரா, ஷ்ரேயா, ஷ்ரேயா, ஷ்வேதா) ஆகிய நடனங்கள் அழகாக நடந்தேறின. அடுத்து வந்த 'கங்கே' என்ற கீர்த்தனத்தை ப்ரியாவும் ரேவதியும் நர்த்தனமாடியபோது அங்கு கங்கை நீரே சூழ்ந்தது போல் உணர்வு! அடுத்ததாக கிருஷ்ண கெளத்துவத்திற்கு கபியும், 'நடனம் ஆடினார்' கீர்த்தனத்திற்கு மாயாவும், சிந்துவும் ஆனந்த நடனம் ஆடினர். 'பஷ்யதி' என்று துவங்கும் அஷ்டபதிக்கு ப்ரியா காட்டிய பாவம் கண்களில் நீரை வரவழைத்தது. நீலாக்ஷி ஆடிய 'விளையாட இது நேரமா' மிக நேர்த்தி. ஹரிணி 'ஆடினாயே கண்ணா' என்ற கீர்த்தனத்திற்கு அனாயாசமாக ஆடியது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. ரேவதியின் நந்தலாலா, த்ரிஷாவின் 'கஞ்சதளாயதாக்ஷி' யாவுமே வெகு அழகு.

தில்லானாவை அடுத்து மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. குருவின் நேர்த்தியான உழைப்பு மாணவிகளின் நடனத்தில் மிளிர்ந்தது. செளம்யா தனது மாணவிகளின் நடனத்தைப் பாராட்டிப் பேசினார். பெற்றோர் நன்றி நல்கினர்.

சரஸ்வதி தியாகராஜன்,
லெக்ஸிங்டன், பாஸ்டன்

© TamilOnline.com