தெரியுமா?: அட்லாண்டா: இந்து விரைவுச் சுயம்வரம்
"இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!" என்றார் ஹூஸ்டனில் இருந்து வந்திருந்த பெண். ஹூஸ்டனில் நடந்த முந்தைய இரண்டு யூ.எஸ். விவாஹ் நிகழ்வுகளையும் தவறவிட்டு, ஏப்ரல் 30, 2017 அன்று நடந்த அட்லாண்டாவின் முதல் யூ.எஸ். விவாஹ் நடத்திய Hindu Speed-Dating நிகழ்விற்கு வந்திருந்தார் அவர். தன்னார்வத் தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், 70 பேர் இலவசமாகப் பங்குபெற்றனர்.

திருமணத்துக்குத் துணைதேடும் இந்துக்களுக்கு, மதுவற்ற சூழலில் முறையான சந்திப்பை ஏற்படுத்தி, தக்கவரைத் தேர்ந்தெடுக்க உதவுவதுதான் யூ.எஸ். விவாஹ் என்னும் லாபநோக்கற்ற அமைப்பின் குறிக்கோள். நவம்பர், 2016ல் டாலஸ் நகரில் இந்துசமயத் தலைவர்களால் தொடங்கப்பட்டு, ஹூஸ்டனில் 2ஆவது கிளையும், அட்லாண்டாவில் 3ஆவது கிளையும் தொடங்கியிருக்கும் இந்த அமைப்பின் விரைவுச் சுயம்வரத்தில் பங்கேற்க இந்துவாக இருப்பதுதான் ஒரே தகுதி.

கணேசர் துதியுடன் தொடங்கிய நிகழ்வில் தன்னார்வலர் ஒருவர், துணையைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளைக் கூறினார். Group Speed Dating முறையில் ஆண், பெண் இருபாலரையும் சரிவிகிதத்தில் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வட்டமாக அமர்த்தப்படுவர். ஒவ்வொருவரும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, 10 நிமிடம் உரையாடுவார். பெண்கள் வெவ்வேறு குழுக்களுக்கு மாறியபடி இருப்பார்கள். இதன்மூலம் எல்லா ஆண்களும் எல்லாப் பெண்களையும் அறியமுடியும். பின்னர் வரும் கூட்டு நடன நிகழ்ச்சியில் தாம் விரும்பியவரோடு நடனமாடுவார். தன்னைப் பற்றிய விவரத்தை ஓரளவு தந்து, தொடர்புத் தகவல்களை அவருடன் பகிர்வார்.

ஆப்கானிஸ்தான் சென்றுவந்த ராணுவ வீரர் உட்படப் பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் பல அமெரிக்க நகரங்களில் இருந்தும், வட மற்றும் தென் இந்தியாவிலிருந்தும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அட்லாண்டா கிளை ஓராண்டில் பலமுறை இதுபோன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது. யூ.எஸ். விவாஹ் நிகழ்வுகளில் பங்குபெற, உதவ, நன்கொடை வழங்க தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: atlanta@usvivah.com

வரப்போகும் நிகழ்வுகளை அறியவும் முன்பதிவுக்கும்: usvivah.com

தகவல்: அம்பிகா சங்கர்
தமிழில்: ஜெயா மாறன்

© TamilOnline.com