தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள்
பாலபுரஸ்கார்
சாகித்ய அகாதமி 2016ம் ஆண்டிற்கான பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகளை அறிவித்துள்ளது. முனைவர் வேலு சரவணன் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார். குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காக, குழந்தை நாடக வளர்ச்சிக்காக அவர் ஆற்றி வரும் பணிகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. குழந்தைகளால் அன்போடு 'வேலு மாமா' என அறியப்படும் வேலு சரவணன், நாடகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுவை பல்கலையில் நாடகத்துறையில் உதவிப் பேராசிரியர். 'ஆழி' என்ற நாடகக்குழுவின் மூலம் குழந்தைகளுக்கான நாடகங்கள், பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். கிராமம், கிராமம் சார்ந்த கதைகளில் தனக்கேயான நிகழ்த்து முறைகளை உருவாக்கியவர். தமிழகமெங்கும் பயணித்து குழந்தைகளுக்குக் கதைசொல்லல், நாடகம் நடத்தல் போன்றவற்றைச் செய்து வருகிறார். பல சிறுவர் நூல்களையும் எழுதியிருக்கிறார். இவருடைய 'கடல் பூதம்', 'குதூகல வேட்டை' போன்ற நாடகங்கள் 2,000 தடவைக்கு மேல் மேடையேறியுள்ளன.

யுவபுரஸ்கார்
யுவபுரஸ்கார் விருதை மனுஷி பாரதி பெறுகிறார். இவரது 'ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்' என்னும் கவிதை நூலுக்காக விருது வழங்கப்படுகிறது. இயற்பெயர் ஜெ. ஜெயபாரதி. ஊர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர். 'குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்' என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. 'முத்தங்களின் கடவுள்' இரண்டாவது கவிதைத் தொகுப்பு. அதற்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது பெற்றார். நாடகங்களிலும் ஆர்வம் மிக்கவர். கல்லூரி நாடகங்களில் நடித்திருக்கிறார். சிறுகதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 'பாரதியாரும் தாகூரும்' என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதுவரை தேசிய அளவில் வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதுகளில் பெண் கவிஞருக்குக் கிடைக்கும் முதல் விருது இதுதான். விருதாளர்களுக்கு டெல்லியில் நடைபெறும் விழாவில் பதக்கமும், ஐம்பதாயிரம்‌ ரூபாய் மதிப்புள்ள காசோலையும் வழங்கப்படும்.

சாதனையாளர்களைத் தென்றல் வாழ்த்துகிறது.

© TamilOnline.com