தெரியுமா?: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல்விருது விழா
டொரன்டோவில் 2017 ஜூன் 18ம் தேதியன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல்விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில் நடைபெற்றது. இம்முறை தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல்விருது கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு மேலாக சமரசம் செய்துகொள்ளாமல் கவிதை, புனைவு, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு எனப் பலதுறைகளிலும் தொடர்ந்து உழைத்து வருவது இவருடைய சாதனையாகும்.

இயல்விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன.
சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட காலச்சுவடு அறக்கட்டளை 'கணிமை விருது' திரு. த. சீனிவாசன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. புனைவு இலக்கியப் பிரிவில் 'ஆதிரை' நாவலுக்காகத் திரு. சயந்தனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' நூலுக்காக திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான மிஷ்கினுக்கும், கவிதைப் பிரிவில் 'ஆயிரம் சந்தோஷ இலைகள்' என்ற தொகுப்புக்காக திரு. சங்கரராமசுப்ரமணியனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மொழிபெயர்ப்பு பிரிவில் 'இறுதி மணித்தியாலம்' என்ற தலைப்பில் சிங்களக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்த ரிஷான் ஷெரீஃப் அவர்களுக்கும், தமிழிலிருந்து ஜெர்மன் மொழியில் 'வாழை இலையும் வீதிப் புழுதியும்' என்ற தலைப்பில் 14 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்ட ஈவ்லின் மாசிலாமணி அவர்களுக்கும், மாணவர் புலமைப் பரிசுப் போட்டியில் சிறந்த சிறுகதை எழுதி வென்ற சோபிகா சத்தியசீலனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கியச் சிறப்பு சாதனை விருதுகளை இவ்வருடம் டேவிட் ஷுல்மன், இரா. இளங்குமரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த முனை. ரவி குகதாசன், மரு. சுந்தரேசன் சம்பந்தம் மற்றும் கவிஞர் சேரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இவர்களை திரு. அ. முத்துலிங்கமும், திரு. சிவன் இளங்கோவும் மேடையில் அறிமுகம் செய்தனர். பேரா. சந்திரகாந்தன் தொடக்கவுரையையும், சட்டவாளர் மனுவல் ஜேசுதாசன் வரவேற்புரையையும் நிகழ்த்தினர். கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி அரசின் பாராட்டுச் சான்றிதழை கவிஞர் சுகுமாரனுக்கும், இயக்குநர் மிஷ்கினுக்கும் வழங்கினார்.

கவிஞர் சுகுமாரன் தன் விருதுப் பணத்தில் ஒருபகுதியையும், இயக்குநர் மிஷ்கின் முழு விருதுப் பணத்தையும் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு வழங்கிச் சபையோரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டனர். வழக்கம்போல ஃபெட்னா சார்பாக வாழ்த்து மடலை சிவா வேலுப்பிள்ளை வழங்கினார். மரு. துஷ்யந்தி ஸ்ரீகரனின் வாழ்த்துரையைத் தொடர்ந்து திருமதி. உஷா மதிவாணன் நன்றியுரை வழங்கினார். விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார் கந்தசாமி கங்காதரன். விழாவுக்குப் பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், ஆர்வலர்களும் வருகை தந்திருந்தார்கள்.

அ. முத்துலிங்கம்,
கனடா

© TamilOnline.com