தீயவன் ஒருவன் தனக்கு மந்திரதீட்சை தரும்படிக் கேட்டு ஒரு குருவிடம் சென்றான். குரு அவனிடம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடும்படிக் கூறினார். அவன் பொய் சொல்வதை விட்டுவிட்டான்.
அன்றிரவு அவன் மன்னரின் மாளிகையில் திருடுவதற்காகச் சென்றான். மாளிகையின் மாடியில் மற்றோர் ஆளைப் பார்த்தான். அவனும் திருட வந்திருப்பதாகக் கூறினான். இருவருமாகக் கஜானாவை உடைத்துத் திறந்து, உள்ளே இருந்த வைரங்களைப் பங்கு போட்டுக்கொள்ளத் தீர்மானித்தனர்.
ஆனால், அந்த மற்றொருவன் உண்மையிலேயே மன்னர்தான். திருடன்போல நடித்த அவர் கஜானாவின் சாவி இருக்குமிடம் தனக்குத் தெரியும் என்று கூறினார். வைரங்களைப் பங்கு போட்டுக்கொண்ட போது திருடனுக்கு "ஐயோ அரசர் எல்லா வைரங்களையும் இழக்கிறாரே!" என்று பரிதாபம் ஏற்பட்டது. மற்றொரு திருடனிடம் அவன் "நாம் ஒரே ஒரு வைரத்தை மட்டும் வைத்துவிட்டுப் போகலாம்" என்றான். அப்படியே செய்தனர்.
மறுநாள் காலையில் கஜானா திருடப்பட்டது தெரியவந்தது. (முதல் நாள் திருடன் போல நடித்த) அரசர், மந்திரியைப் போய் என்ன திருடப்பட்டுள்ளது என்று மதிப்பீடு செய்து வருமாறு அனுப்பினார். திருடர்கள் விட்டுப்போன ஒரே ஒரு வைரம் மந்திரியின் கண்ணில் பட்டது. அதைத் தனது பைக்குள் போட்டுக்கொண்டு போய் அவர் எல்லா வைரங்களும் திருடு போய்விட்டதாகக் கூறினார்.
முதல் நாள் இரவு அரசர் பொய்பேசாத திருடனின் வீட்டு முகவரியை வாங்கி வைத்துக்கொண்டிருந்தார். அவனை அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார். அவன் வந்து ஒரே ஒரு வைரத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தானும், தான் அறியாத திருடன் ஒருவனும் திருடியதாக ஒப்புக்கொண்டான்.
மந்திரியின் பையைச் சோதனையிட்ட போது அதில் ஒரு வைரம் கிடைத்தது. பொய் கூறியதற்காக அரசர் மந்திரியை வேலையை விட்டு நீக்கினார். பொய்பேசாத திருடனை அந்த இடத்தில் மந்திரியாக நியமித்தார்.
அவன் தனது மற்ற தீய குணங்களையும் விட்டுவிட்டான். நேர்மையான நிர்வாகியாக நடந்துகொண்டு புகழ்பெற்ற அவனால் அவனது குருவும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார்.
(இந்தக் கதையின் மூலம் சுவாமி அன்றாட வாழ்க்கையில் நேர்மையாக வாழ்வதன் அவசியத்தை விளக்குகிறார். குருவின் ஒரே ஒரு அறிவுரையைப் பின்பற்றினால்கூட அவர் நம்மை எண்ண முடியாத உயரத்துக்கு அழைத்துச் செல்வார்.)
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா
நன்றி: சனாதன சாரதி |