எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
அத்தியாயம் – 9

நண்பன் ஃப்ராங்க் தீடீரென்று காணாமல் போய்விட்டான் என்று கேட்டதும் அருணுக்கு பகீர் என்றது. இரண்டு நாள் முன்னர்தான் ஃப்ராங்கோடு விளையாடியது ஞாபகம் வந்தது. ஃப்ராங்க் இல்லாமல் தன்னால் இனிமேல் ஏதும் செய்யமுடியாது என்று அவனுக்குப் புரிந்தது. வெறும் சாப்பாட்டு பாக்கெட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தான்.

வகுப்பில் கவனமில்லாமல் உட்கார்ந்து இருந்தான் அருண். திருமதி. ரிட்ஜ் அவனிடம் உடம்பு சரியில்லையா என்று இரண்டு, மூன்று தடவை விசாரித்தார். அருணுக்கு ஃப்ராங்க் நினைவாகவே இருந்தது.

அன்று பள்ளிக்கூடம் முடிந்து ஆயாவுக்காகக் காத்திருக்கும் வேளையில், செரா அவனருகே வந்து நின்றாள். செராவும் காத்திருப்பது போன்று தெரிந்தது. சாதாரணமாக மிகவும் ஒதுங்கி இருக்கும் செரா, அன்று தானாகவே பேசவந்தது அருணுக்கு ஆச்சரியமாக இருந்தது. "என்ன செரா, பிக்கப்புக்குக் காத்திட்டு இருக்கியா?" என்று கேட்டான்.

செரா மெதுவாக, "ஐயம் சாரி அபவுட் ஃப்ராங்க். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே," என்றாள்.

அருண் தலையை மெதுவாக ஆட்டி, "தாங்க யூ," என்றான்.

"ஃப்ராங்க் ஒரு விசித்திரம். அவன் ஒரு அற்புதம்கூட," என்று செரா இன்னும் பேசினாள். "எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் எப்போதும் ஏதாவது ஜோக் அடிச்சுட்டே இருப்பான்."

"ஆமாம், அவனுடைய நகைச்சுவை உணர்வு அற்புதமானது. யாரும் அவனை மிஞ்சவே முடியாது அதுல."

செரா, அருண் முதுகில் ஆறுதலாகத் தட்டினாள். "ஃப்ராங்க் எந்த ஊருக்கு மாற்றிப் போயிருப்பான்னு உனக்குத் தெரியுமா செரா? இப்படி திடீர்னு காணாம போவான்னு நான் நினைச்சுக்கூடப் பாக்கலை."

"நானுந்தான் அருண். சாரி, எனக்கும் அவனைப்பத்தி ஒண்ணும் தெரியலை." சில நிமிடம் இருவரும் பேசாமல் இருந்தனர்.

"அருண், நான் உனக்கு ஒரு சின்ன ஐடியா கொடுக்கலாமா, நீ தப்பா எடுத்துக்கலைன்னா?" செரா தன்னிடம் இவ்வளவு தூரம் பேசுவது மிக வியப்பாக இருந்தது.

"சொல்லு செரா, ப்ளீஸ்," என்றான்.

"அருண், எங்கப்பா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் (nutritionist). அவரால உனக்கு உதவ முடியும்." அருணின் வியப்பான முகத்தைப் பார்த்து, "அருண், எனக்கு எல்லாம் தெரியும். ஃப்ராங்க் என்கிட்ட லொடலொடன்னு நீங்க இரண்டு பேரும் பண்ணப்போறத பத்தி சொல்லிகிட்டே இருந்தான்." வியப்புக் குறையாமல், "Nutritionist? எங்கே?" என்று கேட்டான்.

"ஹோர்ஷியானா."

அந்தப் பெயரைக் கேட்டவுடன், "வேண்டாம், செரா. என்னால எங்க அம்மா பட்ட தொல்லை போறாதுன்னு, உங்க அப்பாக்கும் வம்பு வரவேண்டாம். ஹோர்ஷியானா ஒரு விஷப்பாம்பு போல. நம்ம அதுகிட்டேயிருந்து ஒதுங்கியே இருக்கறது என்னைக்கும் நல்லது."

செரா தனது கண்ணாடியைச் சரிசெய்து, அருணை ஒரு விசித்திரமான பிராணியைப் போலப் பார்த்தாள். புன்சிரிப்புடன், "Dude, loosen up," என்றாள்.

அருணுக்கு அந்த தருணத்திலும் சிரிப்பு வந்தது. "'செரா, நீ என்னைச் சொல்றியா? ரொம்பத் தமாஷ்."

"ஒரு பொண்ணு கண்ணாடி போட்டுகிட்டு, கைல புஸ்தகத்தோடு இருந்தா Geek அப்படீன்னு லேபல் பண்ணிடுவீங்க, இல்லையா? Get over it, dude," என்று சற்றுக் கோபத்தோடு சொன்னாள்.

செராவின் பதில் அருணை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. செராவின் அந்த முகத்தை அதுவரைக்கும் பார்த்ததில்லை.

"அதோ, எங்கப்பா வந்துட்டாங்க" என்று கை காட்டினாள் செரா. “வா, அவர்கிட்ட உன் கேள்வி எல்லாம் கேளு."

அதே சமயம் அருணின் ஆயாவும் அங்கு வந்து சேர்ந்தார். அருண் கிடுகிடுவென்று செராவின் அப்பாவிடம் தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள எண்ணி அவர் வரும் திசை பார்த்து ஓடினான்.

அப்பா அருகே வந்ததும், செரா அவரிடம், "அப்பா, இவன்தான் அருண். என் வகுப்புத் தோழன். இவனுக்கு உங்ககிட்ட ஏதோ கேட்கணுமாம்."

"எதைப்பத்தி அருண்?" செராவின் அப்பா சார்ல்ஸ் ஃப்ளவர்ஸ் அன்போடு கேட்டார்.

அருண் பையைத் திறந்து, ஃப்ராங்க் கொடுத்த உணவுப் பொட்டலத்தை எடுத்துக் காண்பித்தான். "மிஸ்டர் ஃப்ளவர்ஸ், இந்த பாக்கட்டோட 'ஊட்டச்சத்துப் பட்டியல்' எல்லாம் சரியா? நான் ஏன் கேட்கறேன்னா, என் ஃப்ரண்ட் ஃப்ராங்க் இதைச் சாப்பிட்டா அடிக்கடி பசி எடுக்குதுன்னு சொன்னான்."

சார்ல்ஸ் அருண் கொடுத்த பொட்டலத்தை வாங்கிப் பார்த்தார். "எனக்கு இந்த ப்ராடக்ட் பத்தித் தெரியும் அருண். நானும் இதை டெஸ்ட் பண்ணினதுல ஒருத்தன். இதுல போட்டிருக்கிறது எல்லாம் சரிதான்," என்றார்.

அதற்குள், அருணின் ஆயா அங்கு வந்தார். அவளைப் பார்த்தவுடன், சார்ல்ஸ் "அருண், உனக்கு இப்ப கிளம்பணும், பரவாயில்லை. நாளைக்கு இதைப்பத்தி மேற்கொண்டு பேசலாம்," என்றார்.

அதற்குள் நானி, "இல்லை, இல்லை, நீங்க பேசுங்க. நானும் அருண் கேள்வி கேட்கறது மூலமா நிறைய தெரிஞ்சுக்கலாம்" என்றாள்.

அருண் தொடங்கினான். "திரு. சார்ல்ஸ், இந்த பாக்கெட்ல லேபல் எல்லாம் சரின்னா, அப்ப ஃப்ராங்க் சொன்னதுல அர்த்தமே இல்லையே. அவன், இந்த பாக்கெட்டுல இருக்கிறத சாப்பிட்டா அடிக்கடி நிறையப் பசிக்குதுன்னு சொன்னானே."

அருணின் கேள்வி சார்ல்ஸைச் சிந்தனையில் ஆழ்த்தியது. அவர் சற்று யோசித்தார். அப்போது, செரா, "அப்பா, அருணோட அம்மாவும் ஹோர்ஷியானாவுல தான் வேலை பண்றாங்க," என்றாள்.

"அப்படியா, யாருப்பா உங்க அம்மா?" என்று சார்ல்ஸ் ஆச்சரியத்தோடு கேட்டாலும், அவர் இன்னும் அருணின் கேள்வியை யோசித்தபடிதான் இருந்தார்.

"திரு. சார்ல்ஸ், எங்கம்மா பெயர் கீதா மேகநாத். அவங்க..."

அருண் முடிக்குமுன், "என்ன? நீ கீதாவின் மகனா? என்னப்பா இப்படி சாதாரணமா சொல்ற? உங்க அம்மா எங்களோட நிறுவனத்துல தலைசிறந்த விஞ்ஞானி ஆச்சே," என்றார். 'தெரியும்' என்று அருண் தனக்குள் மெதுவாகச் சொல்லிக்கொண்டான்.

"அருண், இந்தக் கேள்வியை உங்க அம்மாகிட்டயே கேட்டிருக்கலாமே?" என்றார் சார்ல்ஸ். "அவங்களுக்கு என்னைவிட நிறையத் தெரியும் எங்க நிறுவனத்தோட பொருட்களைப் பத்தி."

"இல்ல…." என்று இழுத்தான் அருண்.

சார்ல்ஸ், சற்றே தயங்கியபடி, "அருண், எனக்கு என்னமோ இது போலிப் பட்டியலாக இருக்குமோன்னு தோணுது. சில சமயம், GMO சாப்பாடுகளை லேபல் பண்ணனும்னு அவசியம் இல்லை."

அவர் சொன்னதைக் கேட்டு செரா அதிர்ச்சியோடு, "என்னப்பா சொல்றீங்க? லேபல்ல பொய் சொல்லுவாங்களா?" என்று கேட்டாள்.

"ஆமாம் செரா, genetically modified organism சாப்பாட்டுல இருந்தா அதை லேபல்ல போடனும்னு அவசியம் கிடையாது. அப்படிச் செய்ய நம்ம ஊரு சட்டம் அனுமதிக்குது," என்று வருத்தத்தோடு சொன்னார் சார்ல்ஸ்.

அருணுக்கு அதைக் கேட்டவுடன் கோபம் வந்தது. "அப்படியா? அது unethical இல்லையா? இதனால ஃப்ராங்க் மாதிரி பசங்களுக்கு ஆயிரம் கஷ்டம் வரலாம், இல்லையா?" என்று பொரிந்து தள்ளினான்.

சார்ல்ஸ் குனிந்து, செராவையும் அருணையும் செல்லமாகக் கட்டிக்கொண்டார். "அருண், செரா, நல்லா கேட்டுக்கோங்க இரண்டு பேரும். உங்களை மாதிரி இளையவர்கள் நினைச்சா எதையும் மாற்ற முடியும். நீங்க தான் பிற்காலத்தின் கவர்னர்களும் செனேடர்களும். நீங்கதான் பிற்காலத்தின் காங்கிரஸ்மென் மற்றும் காங்கிரஸ் வுமன். ஏன், நீங்கதான் பிரசிடென்ட் கூட. எந்தவிதமான நல்ல சட்டத்தையும் உங்களால அமல்படுத்த முடியும்."

செராவும் அப்பாவும் கிளம்பினர். அருணுக்கு தன்னால் அதற்குமேல் ஒன்றும் முடியாது என்று தோன்றியது. ஃப்ராங்கும் இல்லை. செராவின் அப்பா சொன்னதும் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. வீடு திரும்பினான். தனக்குள், ஜட்ஜ் குரோவ் ஆசிர்வதித்து போல ஏதாவது Serendipitious ஆக நடக்காதா என்று பிரார்த்தனை செய்தான்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com