பழமுதிர்சோலை முருகன் ஆலயம்
மதுரைக்கு அருகே இயற்கை எழில்சூழ மிளிரும் தலம் பழமுதிர்சோலை. மலை அடிவாரத்திலிருந்து ஆலயத்துக்குச் செல்லப் பேருந்து, ஆட்டோ வசதி உண்டு. முருகனின் அறுபடை வீடுகளில் இது கடைசி வீடாகும். சிலப்பதிகாரம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற தமிழ் இலக்கியங்களால் புகழப்பட்டவன் இத்தலத்து இறைவன். நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் இவ்விறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர்.

மலையடிவாரத்தில் அழகர்கோவில் அமைந்துள்ளது. இது 108 திவ்யதேசங்களுள் ஒன்று. திருமால் இங்கே சுந்தரராஜப் பெருமாளாக சௌந்தரவல்லி, ஸ்ரீலஷ்மி தாயாருடன் சேவை சாதிக்கிறார். மலைமேல் உள்ளது முருகன் கோயில். சிறிய கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் அழகு முருகன் காட்சி தருகின்றார். முருகன், ஔவையுடன் "சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?" என்று இங்கு நடத்திய திருவிளையாடல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த மலைமேல் உள்ள அடர்ந்த காட்டில் வள்ளி வசித்ததாக நம்பிக்கை.

மலைக்கோவிலில் முருகன் ஞான சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், தெய்வானை க்ரியா சக்தியாகவும் அருள் பாலிக்கின்றனர். இம்மலை, 'விருஷபாத்ரி', 'இடபகிரி' என்றும் அழைக்கப்படுகின்றது. முருகன் நின்ற கோலத்தில், ஒரு முகத்துடனும், நான்கு கைகளுடனும், இரு பக்கமும் வள்ளி, தெய்வானையுடனும் காட்சியளிக்கிறார். வினாயகர் தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறார். தலவிருட்சம் நாவல் மரம்.

இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் கல்லில் வேல் வடிக்கப்பட்டும், பின்னர் மரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை வடிக்கப்பட்டும் வணங்கப்பட்டிருக்கிறது. ஆதி வேல் கல் மேடையிலும், அதன் வலப்புறம் வித்தக வினாயகரும் வைக்கப்பட்டிருந்திருக்கிறது. சமீபகாலத்தில் கோபுரம் எழுப்பப்பட்டு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மலை உச்சியில் நூபுர கங்கை என்னும் அருவி உள்ளது. விஷ்ணுவின் கணுக்காலில் இருந்து தோன்றியதால் 'நூபுர கங்கை' என்னும் பெயராம். அருகேயுள்ள மாதவி மண்டபத்தில் அமர்ந்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதியதாக நம்பிக்கை.

பொதுவாக ஆடி, ஆவணி மாதங்களில்தான் நாவல் மரம் காய்ப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் ஐப்பசி மாதத்தில், கந்தசஷ்டி விழாவின் போது காய்ப்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தில் தினமும் ஆறுகால பூஜை நடக்கின்றது. தமிழ்வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் மிகச் சிறப்புடன் நடைபெறுகின்றன. தினந்தோறும் மாலை 7.00 மணிக்கு முருகன் தங்கரதத்தில் வலம் வருகிறார். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பால் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி முருகனை வழிபடுகின்றனர். தினந்தோறும் 100 பேருக்கு இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

காரணமதாக வந்து - புவிமீதே
காலனணுகா திசைந்து - கதிகாண
நாரணனும் வேதன் முன்பு - தெரியாத
ஞானநடமே புரிந்து - வருவாயே
ஆரமுதமான தந்தி - மணவாளா
ஆறுமுகமாறி ரண்டு - விழியோனே
சூரர்கிளைமாள வென்ற - கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற - பெருமாளே.


(திருப்புகழ்)

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com