வந்தது வசந்தம்
சந்தக்கவிஞர்கள் சாற்றிப் புகழ்ந்திட
கந்தமெனக் கமழ் தென்றல் தவழ்ந்திட
சிந்தை சிலிர்த்தெழ சீர்மிகு இசையென
வந்தது வசந்தம், வாழ்த்துவோம் வருகென

ஆறெனப் பருவம் அமைத்தனர் முன்னோர்
ஆயினும் இங்குளோர் நான்கென வகுத்தனர்
பாயிரம் பாடிப் புகழ்வதற் கொத்ததோ
காய்ந்திடு வேனிலின் முன்வரு வசந்தமே!

செங்கால் நாரையும் செவ்வாய்க் கிளிகளும்
அங்கங்கு கிளம்பிச் சிறகினைச் சிலிர்க்கும்
பொங்கிடும் மகிழ்வுடன் பூங்குயில் கூவும்
திங்களும் மாசறு தட்டெனச் சொலிக்கும்

தலைமேல் தாங்கிய பனித்தகடுகளுடன்
சிலைபோல் நின்ற பல நெடு மரங்களும்
இலையும் தளிருமாய் அணிமணி பூண்டு
நிலமகளைத் தலை தாழ்த்தி வணங்கும்.

பார்மகள் போர்த்திய பனித்துகில் வீசிப்
பசும்புல் பட்டாடையில் பளிச்செனத் திகழ்வாள்
கூர் அம்பெனப் பாய் குளிர் பறந்தோடச்
சீர் மிகு சித்திரை கொணரும் வசந்தம்

பாயும் நீரில் கங்கையும் நானே
பருவங்களிலோ வசந்தம் நானென
வேய்ங்குழலோன் முன் கீதையிலுரைத்த
தூய வசந்தத்தைத் துதித்து மகிழ்வோம்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com