தென்றல் பேசுகிறது....
பிரதமர் மோதியின் சமீபத்திய அமெரிக்க விஜயம் முந்தைய விஜயங்களைப் போல வாணவேடிக்கை நிரம்பியதாக இல்லாவிட்டாலும் மிகவும் முக்கியமானதாகவே அமைந்திருந்தது. அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்குக் கொடுக்கும் மதிப்பைக் காண்பிப்பதாகவும் அமைந்திருந்தது. இருநாட்டு வர்த்தகம், விசா, பொருளாதாரம் மற்றும் பல துறைகளில் கூட்டுறவு பற்றிப் பேசினாலும், வன்முறையை இருவரும் ஒரே குரலில் கண்டித்துப் பேசினர். பயங்கரவாதப் பாசறையாகப் பாகிஸ்தான் தொடரக் கூடாதென்பதை உறுதியாகக் கூறினர். 'முதலில் அமெரிக்கா' என்பதில் குறியாக இருக்கும் ட்ரம்ப்புக்கு எந்தவிதத்திலும் தொந்தரவு தராமல் இந்தியாவுக்கானதைச் சாதுர்யமாகப் பேசிப் பெற்றார் பிரதமர். அதே நேரத்தில் மோதி அங்கிருந்த சமயத்தில் வேறெங்கும் நகராமல் உடனிருந்ததன் மூலம் டிரம்ப் தனது மதிப்பைச் சந்தேகமற வெளிக்காட்டினார். இரு நாடுகளின் நட்பை இந்த விஜயம் வலுப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.

*****


அமெரிக்காவில் 'சோஷியல் செக்யூரிடி' எண் செய்யாத பல முக்கியமான வேலைகளை இந்தியாவில் 'ஆதார் எண்' செய்வதைப் பொருளாதார வல்லுனர்கள் கண்டு வியக்கிறார்கள். சமையல் வாயு, உரம் போன்றவற்றுக்கான மானியங்கள் நேரடியாகப் பயனாளியின் வங்கிக்கணக்கைச் சென்றடைவதில் தொடங்கி ஒரு புதிய வெளிப்படைத்தன்மைக்கு ஆதாரமாக இது அமைந்துள்ளது. வருமான வரி மற்றும் பல அரசுத்துறைகளில் இது கட்டாயமாக்கப்பட்டதன் பின்னுள்ள தெளிவான பொருளாதார நுண்ணோக்கை வல்லுனர்கள் உலக அளவில் வியந்து பாராட்டுகிறார்கள். கிட்டப்பார்வையில் தவிக்கும் அரசியல்வாதிகளும் அவர்களுக்குத் துணைபோகும் பத்திரிகைகளும் இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகளைக் குறைபாடுவதை முழுநேரத் தொழிலாகச் செய்தாலும் இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் பார்வையைக் கவராமல் போகவில்லை என்பதற்காக நாம் பெருமைப்படலாம்.

*****


தொடர்ந்து இந்தியாவின் இயற்கை விவசாய ஆர்வலர்கள் அவர்களது முறைகள், சாதனைகள் இவற்றைத் தமிழ்கூறும் நல்லுகத்தின் கண்களுக்கு நாம் படம்பிடித்துக் காட்டி வருகிறோம். நம்மாழ்வார் போன்ற தெளிவும் திடமான கருத்தும் கொண்டோர் அதனை உயர்த்திப் பிடித்து வந்திருக்கின்றனர். இந்த இதழில் வேதபண்டிதரான ராமச்சந்திர பட் ஆர்வத்தின் காரணமாக அமெரிக்காவில் பத்து ஏக்கர் நிலத்தில் பயிர்ப் பண்ணை அமைத்து, அதில் பசுக்களையும் வளர்த்து வரும் நற்செய்தியை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம். சான் மார்ட்டின் (கலிஃபோர்னியா) ஸ்ரீவல்லப மஹாகணபதி கோவிலில் இந்தியாவின் கிர் (பிரம்மன்) இனப்பசுக்களை வாங்கிவந்து கோசாலை அமைத்துள்ள செய்தியும் கிடைத்துள்ளது. அதிகப் பால் தரும் இந்தப் பசுவினம் உலகின் பலநாடுகளிலும் இன்று பிரபலம் அடைந்துள்ளது. இயற்கை வேளாண்மை, பசுவினப் பெருக்கம் ஆகியவை மானிட குலத்தின் நலவாழ்வுக்கு இன்றியமையாதவை ஆகும் என்பதை மக்கள் உணர்ந்து வருவதை இது காண்பிக்கிறது.

*****


'சித்தாந்தச் செம்மல்' க. வெள்ளைவாரணனார், சுகி சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்க்கைக் குறிப்புகள், கூகுள் அலுவலகத்துக்கு வலைசை வந்த கொக்குகள் குறித்த கட்டுரை, திறம்படப் புனைந்த கதைகள் இன்ன பிறவற்றோடு பல்சுவைக் கதம்பமாக இந்த இதழ் உங்களைச் சந்திக்கிறது.

வாசகர்களுக்கு குருபூர்ணிமை வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

ஜூலை 2017

© TamilOnline.com