ஏப்ரல் 29, 2017 அன்று டெக்சஸ், சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சான் அன்டோனியோ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. விழாவில் தமிழகத்தின் பழமையான கலைகளுள் ஒன்றான தோல் பாவைக்கூத்து, பரதநாட்டியம், சிறுவர் சிறுமியரின் நாட்டியம் போன்றவை நடந்தேறின.
விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தில் 'ஏறு இல்லாட்டி ஏது சோறு' என்ற விழிப்புணர்வு நாடகமும் அரங்கேறியது. 'திண்ணை' என்ற வாசகர்வட்ட உறுப்பினர்களின் அறிமுகமும் நடைபெற்றது. இந்த அமைப்பு மாதம் ஒருமுறை இங்குள்ள நூலகத்தில் கூடி தமிழ்க் கதை, கவிதைகளை விவாதிக்கும்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. ராஜகுரு பரமசாமி, புதிய செயற்குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். 2015-17ம் ஆண்டின் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்குப் பாராட்டும் கேடயமும் தலைவர் திரு. விஜய் பார்த்தசாரதி வழங்கினார்.
காளிச்சரண், சான் அன்டோனியோ, டெக்சஸ் |