அரோரா: பகவத் ராமானுஜர் சஹஸ்ராப்தி
2017 ஏப்ரல் 29-30 நாட்களில், சிகாகோ அரோராவிலுள்ள அருள்மிகு ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரத்தைச் சிறப்பாகக் கொண்டாடியது. சுமார் 1000 பக்தர்கள் பங்கேற்ற இந்த விழாவில் சிகாகோ மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

சஹஸ்ராப்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்ரீ பாலாஜி (உற்சவ மூர்த்திக்கு) மற்றும் ஸ்ரீ ராமானுஜர் மூர்த்திகளுக்கு திருமஞ்சனம், ஹோமம், உற்சவம் ஆகியவை நடந்தேறின. வேத முழக்கத்தோடு, தமிழ் வேதமாகிய திவ்யப்பிரபந்த பாராயணமும், தோத்திர பாராயணங்களும், மகளிர் குழுவினரால் துதிப்பாடல்களும் நடைபெற்றன. இந்தச் சிறப்பு தினத்தில் பகவத் ராமானுஜருக்கு தங்கக்கிரீடம் சாற்றப்பட்டது. அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானம் அளிக்கப்பட்டது.

ராமானுஜரைப் பற்றிய ஆங்கில நாடகம், திவ்யப் பிரபந்தப் பாடல்களாலான சங்கீதக் கச்சேரி, கோயில் பாலவிஹார் அமைப்பைச் சேர்ந்த சிறார்கள் கலந்துகொண்ட வினாடிவினா மற்றும் பஜனைப் பாடல் நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு, கோலாட்டம் என ஒன்றன்பின் ஒன்றாகக் கலை நிகழ்ச்சிகள் அணிவகுத்தன. முத்தாய்ப்பாக திரு. சேகர் சந்திரசேகரின் எழுத்து இயக்கத்தில், திரு. நாராயணன் திருமலை தயாரித்த 'ஏற்றம் தந்த எதிராசர்' என்ற சிறப்பு நாடகம் நடைபெற்றது. முற்றிலும் புதுமுகங்கள் இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்திருந்தனர். திருமதி. ஹேமா ராஜகோபாலன் வடிவமைத்து, 'நாட்யா' நடனப்பள்ளியைச் சேர்ந்த மாணவியர் வழங்கிய 'ராமானுஜர் தந்த பொக்கிஷம்' என்ற நாட்டிய நாடகம், ஸ்ரீராமானுஜரின் பார்வை மூலமாகப் பன்னிரு ஆழ்வார்களின் வரலாறுகளை அருமையாக விளக்கியது. கோயில் தலைவர் டாக்டர். பிரபாகர் குப்தா கார்லா வழங்கிய நன்றியுரையோடு திருவிழா இனிதே நிறைவேறியது.

ராமானுஜதாசன்,
சிகாகோ

© TamilOnline.com