சான் அன்டோனியோ தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
மே 13, 2017 அன்று சான் அன்டோனியோ தமிழ்ப்பள்ளியின் 12வது ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா ரேடியன் அகாடமி கலையரங்கில் நடைபெற்றது. விழா மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. பாரதியார் கவிதைகள், பாடல்கள், திருக்குறள் ஒப்புவித்தல், ஆசிரியர்களின் நடனம் எனப் பல கலைநிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன.

சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். வெங்கட் ஸ்ரீநிவாஸன், டாக்டர். ராஜம் ராமமூர்த்தி, டாக்டர். ஏழுமலை அப்பாச்சி, டாக்டர். திருமதி மாலா ஆகியோர் வந்து சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் திருமதி. மாலினி ரூபன் தலைமையுரை ஆற்றினார். உயர்கல்வி மாணவர்களுக்காக தமிழ்க் கல்விக்கான அங்கீகார மதிப்பெண் பெற தமிழ்ப்பள்ளி AdvanceEd ஆய்விற்குத் தகுதி பெற்றதைத் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்,

விடுமுறை எடுக்காமல் 100% வருகை பதிவுசெய்த மாணவர்களுக்குப் பரிசும், பேச்சுப் போட்டியில் வென்றவர்களுக்குக் கோப்பையும், தீபாவளி வாழ்த்து அட்டை வடிவமைப்பில் வெற்றி பெற்றோருக்குப் பதக்கமும் அளிக்கப்பட்டன. மாணவ மாணவியர் தாங்கள் சிறுசேமிப்பின் மூலம் சேர்த்த பணத்தைத் தருமபுரியில் உள்ள மலைவாழ் மக்கள் பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார்கள். நிறைவாக, பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் கோப்பையும் வழங்கப்பட்டன.

ராஜகுமார் மாரியப்பன்,
சான் அன்டோனியோ, டெக்சஸ்

© TamilOnline.com