நிருத்ய நிவேதன்: 5ம் ஆண்டு விழா
மே 13 அன்று மில்பிடாஸில் உள்ள ஷிர்டி சாயி பரிவார் வளாகத்தில் நிருத்ய நிவேதன் பரதநாட்டியக் கலைப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விழா சிறப்புற நடைபெற்றது. இப்பள்ளியின் முதல் மாணவியும் நடன இயக்குநரின் மகளுமான ஹர்ஷிதா வெங்கடேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி கடவுள், குரு வணக்கமாக, இளநிலை மாணவர்களின் புஷ்பாஞ்சலியுடன் துவங்கியது. முதுநிலை மாணவர்களும் இதில் பங்கேற்றனர். 'ஜெய ஜெய சம்போ', நாராயண கௌத்துவம், தில்லானா மற்றும் குருபாதுகா ஸ்தோத்திரம் என்று நடராஜர் மற்றும் திருமால்மேல் அமைந்த பாடல்களுக்கு மாணவர்கள் உணர்வொன்றி நடனமாடினர்.

இளநிலை மாணவர்கள் 'ஷப்தம்' எனப்படும் உணர்ச்சிகளை பாவங்களால் வெளிப்படுத்தும் ஒரு நாட்டிய நிலையைக் கிருஷ்ணன் வெண்ணெய் திருடும் லீலையைச் சித்திரித்து ரசிகர்களைக் கோகுலத்துக்கே அழைத்துச் சென்றனர். முதுநிலை மாணவர்கள் ராக, தாளம், பாவம் இவை அனைத்தும் ஒன்று சேர அடவு, முத்திரை, பாவங்களுடன் பாற்கடலைக் கடைகையில், லக்ஷ்மி தேவி அவதரிப்பதைச் சிறப்பாக வெளிப்படுத்தினர். நடனக் கலைஞர் நந்திதா, வர்ஷா, நவ்யா ஆகியோர் வர்ணத்தை சிறப்பாக அரங்கேற்றினர். சிறுமியர்கள் குருவாயூரப்பன் மீதமைந்த பாடலுக்கு ஆடி மகிழ்வித்தனர்.

இயக்குநரும் குருவுமான புவனா வெங்கடேஷ், அவரது கணவர் பாட, அவர் ஆடிய "உயிரும் நீயே உடலும் நீயே" பாடலுக்கான நடனம் அற்புதமாக அமைந்தது. நிறைவாக, ராமர் கல்யாணம் மற்றும் ஹனுமான் சாலீஸா இனிதே அரங்கேறின. நடன இயக்குநர் அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்துப் பூச்செண்டு அளித்து மகிழ்ந்தார்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com