அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: 10வது ஆண்டுவிழா
மே 13, 2017 அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் பத்தாவது ஆண்டுநிறைவு நாள், இன்ஸ்டெல் பள்ளி, டேரியன், இல்லினாயில் சிறப்பாக நடைபெற்றது. டேரியன், டெஸ்பிளெய்ன்ஸ், கெர்ணி, மில்வாக்கி, நேப்பர்வில் மற்றும் ஷாம்பர்க், ஆகிய பலவேறு தமிழ்ப்பள்ளிகள் ஒருங்கிணைந்து இதனை நடத்தின. மாணாக்கர், ஆசிரியர், அவர்தம் இல்லத்தவர் என 600க்கும் மேற்பட்டவர் இதில் பங்கேற்றனர்.

மாணாக்கர்கள் திருக்குறள், ஆத்திசூடி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, நிகழ்ச்சி திரு. பாபு அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பித்தது. திருக்குறள் ஒப்பித்தல், சொல்லாட்சி, சொற்சிலம்பம், சொல் ஒன்று-பொருள், பழமொழி போன்ற பல்வேறு போட்டிகளுடன் அரங்கமேடை கலகலப்பாகக் காட்சியளித்தது. ஒளவையின் "ஆத்திசூடி ஆள வைக்கும்" என்ற டெஸ்பிளெய்ன்ஸ் பள்ளி மாணாக்கர்களின் நாடகம் சிறப்பு. பாரதி, பாரதிதாசன் பாடல்கள், டேரியன் தமிழ்ப்பள்ளியின் "கோடி பெறும்" நாடகம், தமிழோடு இணைந்த பிறந்த நாள் பாடல் ஆகியவை அவையைக் கவர்ந்தன. "சிலப்பதிகாரம்" தந்த நேப்பர்வில் மாணாக்கர்களும், "மூவேந்தர்" தந்த ஷாம்பர்க் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்களும் நிறைவான பெயர் பெற்றனர். கோலாட்டமும், கும்மியாட்டமும் கண்களுக்கு விருந்தாகின.

குறள் போட்டியில் அதிகப்படியான குறட்பாக்கள் கூறிய மாணாக்கர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்க்குப் பரிசுகள் தரப்பட்டன. திருமதி. பர்வீன் சுல்தானாவின் 'தாய்த் தமிழ்' தலைப்பிலான காணொளி உரை தமிழுணர்வைத் துண்டுவதாக அமைந்தது.

தகவல்: திருமதி. பிரியா பாலச்சந்தர்

© TamilOnline.com