சிமி வேலி தமிழ்ப்பள்ளி: ஆண்டுவிழா
மே 20, 2017 அன்று சிமி வேலி தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் 5ஆம் ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.

பள்ளி முதல்வர் திருமதி/ சுபாஷிணி ரங்கநாதன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திரு. டேவிட் நேசமணி (முன்னாள் உதவித்தலைமை ஆசிரியர்), திருமதி. சுஜாதா சுப்பிரமணியன் (தலைவர், அறநெறி அறக்கட்டளை) ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் ஐந்தாமாண்டைக் குறிக்கும் வண்ணம் ஆண்டுமலரில் தமிழ் இலக்கம் 'ரு' பொறிக்கப்பட்டு , அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பள்ளி மாணாக்கர்கள் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சினிமாவின் தாக்கம் அறவேயின்றி நடத்தப்பட்டது சிறப்பு. நிகழ்ச்சிகளை மாணவ மாணவியர் தமிழிலேயே தொகுத்து வழங்கினர். இன்றைய சமுதாய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு அதற்கு தீர்வுகளையும் வழங்கியது வெகுசிறப்பு. வில்லுப்பாட்டு, குறுநாடகங்கள், கிராமியக்கலைகள், விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் மேடையில் விளக்கினார்கள். மாணவ மாணவியர் பங்கேற்றுப் பேசிய பட்டிமன்றமும் சிறப்பாக இருந்தது.

பள்ளியின் வளர்ச்சி மற்றும் நிதியறிக்கையை உதவித் தலைமையாசிரியை திருமதி. நிர்மலா விஜயரங்கம் வழங்கினார். ஐந்தாண்டு தொடர்சேவை புரிந்த ஆசிரியர்கள் திருமதி. சக்தி அருள், திரு. நாச்சியப்பன் முத்துக்குமார், நூலகர் திரு. தனசேகர் வீரப்பெருமாள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் சிறப்பிக்கப்பட்டனர். பள்ளி நிர்வாகி திரு. யோகானந்த் கந்தசாமி நன்றியுரையாற்றினார். "செய்வதைத் தமிழில் செய்வோம்" என்ற உறுதிமொழியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

யோகானந்த் கந்தசாமி,
சிமி வேலி, கலிஃபோர்னியா

© TamilOnline.com