சுகம் மருத்துவமனை. அங்குதான் ராகவன் நான்காவது மாடியில் 408-ம் நம்பர் அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் அங்கே அனுமதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. மருத்துவமனை அவருக்கு வீட்டுக் கொல்லைப் பக்கம் மாதிரி. மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது அங்கு வந்து சேர்ந்து விடுவார். அப்படி அவருக்கு என்ன வியாதி என்று கேட்பதைவிட அவருக்கு என்ன இல்லை என்றுதான் கேட்க வேண்டும். ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல! உடல் பூராவுமே வியாதிதான். ஹைபர்டென்ஷன், ஷ¤கர், தைராய்ட் என்று ஏகப்பட்ட தொல்லைகள்! ஒருமுறை ஆஞ்சியோ ப்ளாஸ்டி செய்தும் சரியாகமல் பை பாஸ் செய்து கொண்டவர், 'மாரை வலிக்கிறது, மூச்சை அடைக்கிறது' என்று இந்த முறை மருத்துவமனைக்கு வந்து அட்மிட்டாகி சிகிச்சை பெற்றிருக்கிறார். அதனால் அவருக்கு இந்த மருத்துவமனையில் எல்லாரும் அத்துப்படி. மலையாள நர்ஸ் அவரை உள்ளே நுழையும்போதே, 'என்ன மிஸ்டர் ரோகவன், எப்படியிருக்கீங்க?' என்று விசாரிப்பாள். ரோகவன் என்ற மலையாளப் பெயரே அவருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுபோல் தோன்றும்.
ரோகவனது, மன்னிக்கவும், ராகவனது மனைவி லட்சுமி, முதல் முறையாகக் கணவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போது ஆடித்தான் போனாள். ஆனால் அவளுக்கு இப்போது இது வழக்கமான நடைமுறை ஆகிவிட்டது. அவளுக்கு மிகவும் பக்கத் துணையாக இருப்பது அவளது தம்பி ரங்கநாதன் தான். பார்ப்பதற்கு பயில்வான் ரங்கநாதன் மாதிரி கட்டுமஸ்தாக இருப்பான். உருண்டு திரண்ட திடமான மேனி. அகன்ற மார்பும் திரண்ட புஜங்களும் என்று சொல்வார்களே, அந்தமாதிரி. நாலு ஆளைச் சேர்த்து ஒன்றாய்ச் செய்தமாதிரி இருக்கும்.
'காலா என்னருகே வாடா. காலால் உன்னைச் சற்றே உதைக்கிறேன்' என்று சவால் விடுவதுபோல் இருக்கும் அவனது உருட்டுப்பார்வை. அவன்தான் லட்சுமிக்கு எல்லாம். 'ஒண்ணும் பயப்படாதே, அக்கா, அத்தானுக்கு ஒண்ணும் ஆகாது. வழக்கம் போல இப்பவும் சரியாகிவிடும்' என்று ஆறுதல் சொன்னான். ஆனால் டாக்டரோ இந்தமுறை எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லை. நாற்பத்தெட்டு மணிநேர கவுண்ட்-டவுன் கொடுத்துவிட்டார். அதற்குமேல் பிழைத்தால் மருத்துவ அதிசயம் என்றும் சொல்லி விட்டார். ராகவன் மூக்கில் ஆக்சிஜன் மாஸ்க், உடல்பூரா ஆங்காங்கே ஊசிகள், சிறுநீரை கலெக்ட் செய்ய கதீட்டர் என்று சர்வாலங்கார பூஷிதராகக்காட்சி அளித்தார். லட்சுமி, கடைத்தெரு மாரியம்மனிலிருந்து திருப்பதி வெங்கடாசலபதிவரை எல்லா தெய்வங் களுக்கும் சரமாரியாக வேண்டிக்கொண்டாள்.
'உங்களுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி விடுங்கள்' என்று டாக்டர் கூறிவிட்டார். லட்சுமியின் தம்பி ரங்கநாதன் செயலில் இறங்கினான். அவனுக்கு எல்லாமே திட்டமிட்டப்படி நடக்கவேண்டும். ஆக வேண்டியதைப் பார்க்கவேண்டும். எல்லாச் சொந்தங்களுக்கும் சொல்லியாகிவிட்டது. மாலை, ஊர்வலத்துக்கான வண்டி, ஐஸ் பெட்டி, புரோகிதர் என்று எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. ராகவன் கண்ணை மூடவேண்டியது தான் பாக்கி.
எல்லா ஏற்பாடுகளையும் ஒருவனே அலைந்து திரிந்து, மாய்ந்து மாய்ந்து செய்ததில், ரங்கநாதனுக்குச் சற்று கண்ணை அசத்தியது. 'அக்கா, நான் வீட்டுக்குப்போய் கொஞ்சம் கட்டையை சாய்க்கிறேன், ஒண்ணும் கவலைப்படாதே, காலைல பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் போனான்.
அடுத்தநாள் அந்த மருத்துவ அதிசயம் நிகழ்ந்தே விட்டது. டாக்டர் உட்பட யாரும், சற்றும் எதிர்பாராதபடி ராகவன் மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்டார். வழக்கமாக மயக்கத்திலிருந்து எழும் எல்லாரைப்போலவும், 'நான் எங்கிருக்கிறேன்?' என்று கேட்டவாறே தான் கண் விழித்தார். லட்சுமி, தான் கும்பிட்ட தெய்வங்கள் தன்னைக் கைவிடவில்லை என்று ஆனந்தக் கண்ணீருடன் தன் தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
'இந்தச் சந்தோஷமான செய்தியைத் தம்பியிடம் சொல்லவேண்டும், அவனை இன்னும் காணவில்லையே!' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தம்பியின் மனைவி அம்புஜம் அழுது புலம்பிய படியே ஓடி வந்தாள். லட்சுமி அவளிடம் 'நீ ஒண்ணும் கவலைப்படாதே கண்ணு, கடவுள் அருளால அத்தான் பிழைச்சுட்டார்' என்று ஆறுதல் சொன்னாள். ஆனாலும் அம்புஜத்தின் அழுகை நின்ற பாடில்லை அது கட்டுப்படாமல் மேலும் பெருகியது. அழுகையின் ஊடே, 'அக்கா, நேத்திக்கு ராத்திரி வீட்டுல வந்து படுத்தவர் இன்னிக்குக் காலைல எழுந்திருக்கவேயில்லை அக்கா. தூங்கிட்டு இருக்கறப்பவே ஆண்டவன் அவர் உயிரைப் பறிச்சுட்டுப் போய்ட்டானே அக்கா. இனிமே நான் என்ன செய்வேன், எனக்கு யார் இருக்கா?' என்று புலம்பல்களுக்கிடையே திக்கித் திணறிக் கூறினாள்.
'இது தாம்ப்பா உலகம், போகவேண்டிய உயிர் பொழச்சுக்கிச்சு; கெழங்குமாதிரி இருந்த ஆள் போயிட்டானே!' என்று அங்கிருந்த ஒருவர் தத்துவம் பேச, இன்னுமொருவர், 'போகும்போது கூட, பின்னாடி தனக்காக யாரும் கஷ்டப்படக் கூடாதுன்னு, தானே எல்லா ஏற்பாட்டையும் செஞ்சுட்டுதான் போயிருக்கார் பாத்தியா!' என்று சொல்லி வியந்து கொண்டிருந்தார்.
டி.எஸ். பத்மநாபன் |