தமிழ்நாடு அறக்கட்டளை: 43வது மாநாடு
2017 மே 27, 28 தேதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளையின் 43வது மாநாடு ஒஹையோ மாநிலத்தில் கொலம்பஸ் நகர் வெஸ்டெர்வில் மேனிலைப்பள்ளியில் நடந்துமுடிந்தது. இதில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உறுப்பினர்களும், தன்னார்வத் தொண்டர்களும் கலந்துகொண்டனர். பள்ளியின் அரங்க வரவேற்புப் பகுதியில் திருவள்ளுவர் திருவுருவும் ஐம்பெரும் காப்பியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாநாட்டின் தலைவர் திரு. மணிவண்ணன் பெரியகருப்பன் வரவேற்புரை வழங்கினார். இரண்டு வருடங்களுக்கு முன் கொலம்பஸ் கிளை தொடங்கப்பட்ட வரலாற்றை ஆனந்த் பத்மனாபனும், ரவிராஜும் பகிர்ந்துகொண்டார்கள். இசைமேதை கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 'சங்கம் முதல் சிலிக்கான் வேலி வரை' என்னும் இசை நிகழ்ச்சி விருந்தாக அமைந்தது. விதித்தா கன்னிகேஸ்வரனின் மனதை உருக்கும் குரலில் "அமுதே தமிழே அழகியமொழியே" என்ற பாடலில் தொடங்கி, திருக்குறள், திருமந்திரம், திருவருட்பா, சங்கப்பாடல்கள் ஆகியவற்றுக்குச் சமகால மெட்டமைத்து, முப்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 3 மாதப் பயிற்சி கொடுத்து இசைத் திருவிழா ஒன்றை நடத்தினார் கன்னிகேஸ்வரன். இந்த இசைக்கு, பரதநாட்டியம், கதக் நடனங்களுடன் யோகா அம்சங்களையும் இணைத்து உள்ளூர் நடனக் குழுவினர் ஆடியது நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

தொடர்ந்து, 'தமிழ் நாட்டின் மீது ஒரு காதல்' (FL), 'தையலும் தன்னம்பிக்கையும்' (IL), 'ஓய்வுபெற்ற பின்' (PA), 'கொல்லி மலைக்கு வாங்க' (MI), 'ஒளி கொடுக்கும் ஜார்ஜியா' (GA), 'அன்னையர் தினம்' (NY) ஆகிய தலைப்புக்களில் பல்வேறு மாநிலக்கிளைகள் பங்களித்தன. இளையோர் கோடை விடுமுறையில் அறக்கட்டளையின் ABC திட்டத்தின்கீழ் தமிழகப் பள்ளிகளில் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். அரவிந்த் கண்ணப்பன் (CA) 'பாம்புக்கடியும் பாமரத் தமிழர்களும்' என்ற தொகுப்பை வழங்கினார். தமிழ்க் கலாசாரம், கடையேழு வள்ளல்கள் பற்றிய விவாதங்களோடு இளையோர் மாநாடு மற்றொருபுறம் நடந்தது. 40 பேர் தங்களுடைய பிறந்தநாள் பரிசின் ஒரு பகுதியை TNFற்குத் தர உறுதியளித்தார்கள்.

திரிவேணி கலைக் குழுவினர் வழங்கிய 'ஆள் பாதி ஆவி பாதி' என்னும் நகைச்சுவை நாடகமும், இளைஞர்களின் 'அக்கப்பெல்லா' இசையும், நடனமும் ரசிக்க வைத்தன. மருத்துவர் அழ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் தலைமையில் 'இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனிதாபிமானம் வளர்கிறதா? தளர்கிறதா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றம் சுவைபட இருந்தது. சூப்பர் சிங்கர்ஸ் ஹரிஹரசுதன், பரீதா, ஸியாத், நிவேதா மற்றும் விஜய் டிவி புகழ் நவீன் ஆகியோர் இணைந்து வழங்கிய 'பொன்மாலைப் பொழுது' மக்களை ஆரவாரத்தில் ஆழ்த்தியது. மீனாட்சி சுந்தரம் அவர்கள் 'சிரிக்க வாங்க' என்ற தலைப்பில் வழங்கிய உரை முத்தாய்ப்பாக அமைந்தது.

அறக்கட்டளை சென்னை மையத்திலிருந்து திரு. ராஜரத்தினம் (தலைவர்), Dr. மாணிக்கவேல் திருமதி. கவிதா தவிர Dr. ஜவஹர் (திருச்சி எஞ்சினியரிங் கல்லூரி) விழாவுக்கு வந்திருந்தனர். தலைவர் திரு. சிவசைலம், திரு. பாஸ்கரன் (சிகாகோ) அவர்களுக்குச் சிறந்த சேவைக்கான விருதும், முன்னாள் தலைவர் மற்றும் சென்னைக் கிளை தொடர்பாளர் திரு. துக்காராம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கிக், கௌரவித்தார். மாநாட்டின் மொத்த வருமானமும், 10 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் TNF-ABC திட்டத்தினால் பயனடையும் அரசுப் பள்ளிகளுக்குப் போய்ச்சேரும். TNFன் அடுத்த (2018) மாநாடு நியூ ஜெர்ஸி மாநிலத்தில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
வலைமனை: www.tnfusa.org
மின்னஞ்சல்: tnfusapresident@gmail.com
தொலைபேசி: 610.444.2628.

ஜெயா மாறன்

© TamilOnline.com