தெரியுமா?: ஹார்வர்டு பல்கலையில் தமிழ்க் கருத்தரங்கு
ஹார்வர்டு பல்கலையில் தமிழிருக்கை அமைப்பதற்கான முயற்சி உற்சாகத்துடன் முன்னேறி வருகிறது. மே மாதம் 5-6 தேதிகளில் ஹார்வர்டு தமிழிருக்கை அமைப்பின் சார்பாக, ஹார்வர்டு பல்கலை வளாக யெஞ்ச்சிங் இன்ஸ்டிட்யூட்டில், மொழி விஞ்ஞானி பேரா. மைக்கேல் விட்சல் தலைமையில் ‘ரிக் வேதமும் சங்க இலக்கியமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. சென்னையிலுள்ள ‘செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன’த்தைச் (Central Institute of Classical Tamil) சேர்ந்த பேரா. மருதநாயகம் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியம், தமிழ்க் கலாசாரத்தின் தொன்மை பற்றி உரையாற்றினார். தமிழ் ஆய்வாளர் Dr. சுடலைமுத்து பழனியப்பன், ஹார்வர்டு தமிழ் விரவுரையாளர் Dr. ஜோனதன் ரிப்லீ ஆகியோர் சங்க இலக்கியங்கள் பற்றி உரையாற்றினார்கள்.

Click Here Enlargeஜப்பானிலுள்ள க்யோடோ பல்கலையின் பேரா. வெர்னெர் நோபுள், ஒசாகா பல்கலையின் பேரா. ஐஜிரோ டோயாமா ஆகியோர் ரிக்வேதக் கவிதை நுட்பத்தைப் பற்றியும் மொழிபெயர்ப்பு உத்திகளைப் பற்றியும் விளக்கினார்கள். தேவார வித்தகர், இயலிசைப் பேராசிரியர் வைத்தியலிங்கம் புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் பண்ணிசையில் வழங்கினார். உலகமொழிகளின் உறவுமுறை, பரவல் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு சுவையான கலந்துரையாடலும் நடைபெற்றது.

Click Here Enlargeஉலகளாவிய தமிழன்பர்களின் உதவியுடன் ஹார்வர்டு தமிழிருக்கை அமைப்பு இதுவரை சுமார் இரண்டரை மில்லியன் டாலர் நிதி திரட்டியள்ளது; அதாவது இலக்கில் பாதி தூரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்க மக்கள்மன்ற உறுப்பினர்கள் (United States Representative) துளசி கப்பார்ட் (ஹவாய்), ராஜா கிருஷ்ணமூர்த்தி (இல்லினாய்) போன்ற பிரமுகர்களைச் சந்தித்து, அமைப்பின் தலைவர் Dr. விஜய் ஜானகிராமன் ஆதரவைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வாஷிங்டன், ஹூஸ்டன், சான்ஃபிரான்சிஸ்கோ நகரங்களில் நிதி திரட்டும் முயற்சிகள் அங்குள்ள தமிழ்ச் சங்கங்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்றன.

தமிழன்பர்களின் நன்கொடை மூலம் எஞ்சிய மூன்றரை மில்லியன் டாலரைத் திரட்டும் பணியில் அமைப்பின் தொண்டர்களும் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹார்வர்டு பல்கலையில் தமிழன்னைக்கு ஒரு நிரந்தர அரியணையை அமைக்கும் இந்தப் புனிதப் பணியில் நீங்களும் பங்கு கொள்ளலாம். நன்கொடைகளுக்கு அமெரிக்காவில் 501(C)(3) பிரிவின்கீழ் வரிவிலக்கு உண்டு. நன்கொடை அளிக்கவும், மேலும் தெரிந்துகொள்ளவும்: harvardtamilchair.org

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com