தெரியுமா?: நியூ ஜெர்சி: மொய்யில்லா 'மொய்விருந்து'!
அழகான ஞாயிற்றுக்கிழமை மே 21ம் நாள். அட்லாண்டிக் கரையோரம் நியூ ஜெர்சியின் ஹைஸ்டௌன் ஊரின் பண்ணை நிலம் ஒன்றில் தமிழர்கள் ஒரு மொய்விருந்துக்கெனக் கூடினர். மொய்விருந்தென்றால் அன்னமிட்டுப் பணம் பெறுவது, ஆனால் இங்கே எந்தப் பணமும் வசூலிக்கப்படவில்லை. மாறாக இந்த மொய்விருந்தில், தமிழ்க் கலாசாரமும், விருந்தோம்பலும், விவசாயமும் நாள்முழுதும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டன. குறிப்பாக, விவசாயம் பற்றிய விழிப்புணர்வைப் பெருக்கவும், நேரடியாக உழவருக்கு உதவ வகை செய்யவும் இந்த விழா நடத்தப்பட்டது.

காலை பதினொரு மணிக்குக் கோலமும், குத்துவிளக்கும் ஒளிர, பொங்கல் வைத்துத் துவங்கியது விழா. வேளாண் பாரம்பரியமான முளைப்பாரிக் கலயங்களைச் சுற்றி, "ஒன்றுகூடி வாழ், ஒற்றுமையாய் வாழ், ஒன்றாய் வாழ்வது பலம், ஒரே குரலாய் இருப்பது சுகம்" எனக் கும்மி அடிக்கப்பட்டது. பின்னர், ஊரே எடுத்தேகும் முளைப்பாரி ஊர்வலம் தொடர்ந்தது. ஊர்வலத்தில் உள்ளங்கையில் உலகு சுமப்பவனையே தோள்களில் சுமப்பதாகிய காவடி ஆட்டம் இருந்தது. ஊருக்கான சேதியை உரக்கச் சொல்லும் பறையொலி நெஞ்சைத் தொட்டது.

பெட்டிக்கடை, நன்னாரி சர்பத் டீக்கடை, மோர்க்கடை ஆகியவை முன்னாள் கிராமங்களைக் கண்முன் நிறுத்தின. திருவிழாவில் மிட்டாய், பலூன், பொம்மை, கிலுகிலுப்பை இல்லாமலா? கடலை மிட்டாய், கமர்கட்டும் கூட இருந்தன. இருந்தால் இல்லாதவர்க்குக் கொடு எனப் பல்லாங்குழி; உன் கையில்தான் இருக்கிறது ஆனால் என்ன வரும் என்பது தெரியாதென்னும் தாயக்கட்டம்; உடல் உரம்பெறச் சிலம்பம் என அனைத்தையும் இந்த விழாவில் ஆடி மகிழ்ந்தனர் அமெரிக்கத் தமிழர். பம்பரம், காற்றாடி, கபடி எனப் பல்வேறு விளையாட்டுகள் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்பட்டன.

விவசாயத்தைக் கொண்டாடும் வகையில் ஆடல் பாடல்களுடன் விழா நாள்முழுதும் நடக்க, ஆயிரம் பேருக்கெனச் சமைத்த விழாவுக்குச் சுமார் இரண்டாயிரம் பேர் வந்திருந்து மகிழ்ந்தனர். விவசாயிகளைப் பேணுவதெப்படி, விவசாயத்தின் நிலை, நிலம் வளமிழந்தது, விதைகள் உயிரிழந்தது, நீராதாரங்கள் வற்றியது, நாட்டு மாடுகள், நாட்டு விதைகள், நாட்டு உரங்கள், இயற்கை விவசாயம் காணாமல் போனது, உழவு மாடுகள் உணவாகிப் போனது, சிறிய கடனுக்காக தற்கொலை செய்யும் விவசாயிகள், இப்படி நாம் தந்த தகவல்களால் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வும், விவசாயம் காக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பும் தீயைப் போல் பரவியது. வந்தவர்கள் தனிப்பட்ட முறையிலும், குழுவாகவும் உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் உதவப் போவதாக இவர்கள் கூறிச் சென்றது இந்த விழாவின் கணக்கிட முடியாத வெற்றியாகும்.

இறுதியாக மாலை ஆறு மணிக்கு உறி அடிக்கப்பட்டு, பாடல் ஆடல்களுடன் மொய் விருந்துத் திருவிழா, இனிதே நிறைவு பெற்றது.

புவனா கருணாகரன்

© TamilOnline.com