தரிசனம்
திருப்பதி போவதென்று முடிவானதும் என்னைத் தவிர வீட்டில் எல்லோருக்கும் பரபரப்பு. அப்பா ரெயில்வேயில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் மாமாவுக்கு ஃபோன் போட்டு டிக்கெட்பற்றிப் பேசினார். ரயிலில் போவதால் சின்னமாமா, மாமியிடம் புளிசாதம், தயிர் சாதம், வடகம் செய்யச் சொல்ல, மாமி புளிசாதம் மாமாவுக்கு வயிறு பிரச்சனை கொடுக்கும் என்று சொல்லி மறுத்துக் கொண்டிருந்தாள். அம்மா, வேலைக்காரியிடம் நாளையிலிருந்து ரெண்டு நாள் வேலைக்கு வரவேண்டாம் என்றும், பாக்கெட் பால் போடுபவனிடமும் சொல்லவேண்டும் என்று கூறிக்கொண்டே அடுப்படிக்குச் சென்றாள். பாட்டி, "நாராயணா… நாராயணா" என்று முணுமுணுக்கத் தொடங்கிவிட்டாள்.

நான் என் புது மனைவியைத் தேடி அறைக்குச் சென்றேன். துவைத்த துணிகளை அவள் மடித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் கண்களில் நக்கல் சிரிப்பு. நான் வராந்தாவிற்குத் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்தேன். சின்னமாமாதான் எல்லாத்துக்கும் காரணம்.

எனக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது. இரண்டு நாள் மனைவியுடன் எங்காவது போய்வரலாம் என்று அப்பாவிடம் சொன்னேன். சின்னமாமாதான் திருப்பதிக்குக் குடும்பத்துடன் போகலாம், புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள் திருப்பதி போவது நல்லது என்று யோசனை கூறினார். அப்பா உடனே சம்மதிக்க, இருவர் மட்டுமே போகும் திட்டம், குடும்பத்துடன் ஆன்மீகப் பயணமாக மாறியது. கடுப்பாக இருந்தது. அப்பா சொன்னால் சொன்னதுதான். யாருக்கும் மாற்றத் தைரியம் கிடையாது.

டிவியில் ஏதோ சீரியல் ஓடிக்கொண்டிருக்க அம்மா சமையல் இடைவெளியில் அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டிருந்தாள். மாமா என் அருகில் வந்து அமர்ந்தார்.

"திருப்பதி போகலாம்னு நீ சொன்ன உடனே, எனக்கு கையும் ஓடல காலும் ஓடல" என்றார் மாமா.

"மாமா, நான் எப்ப சொன்னேன்?" என்று எரிச்சலாகக் கேட்டேன்.

"எங்கயாவது போலான்னு அப்பாட்ட நீதானடா சொன்னே?"

"ஆமா, சொன்னேன். ஆனா, திருப்பதி இல்ல".

"அப்பிடியா?" என்று சொல்லிவிட்டு ஏதோ யோசிக்க தொடங்கினர்.

மாமாவின் முகத்தைப் பார்த்தேன், ஏதோ குழப்பத்தில் இருப்பதுபோல் இருந்தது. மாமா திருப்பதி போகவேண்டாம் என்று சொன்னாலும் சொல்வார் என்று தோன்றியது. சட்டென்று என்பக்கம் திரும்பி "டேய் ரமேஷ், கவனிச்சியா. உன்னை வெங்கடேசப் பெருமாள் கூப்பிடுறார். திருப்பதிக்கு நாம போக முடிவு பண்ணா மட்டும் போதாது. அவன் கூப்பிடணும். நம்மள அவர் கூப்பிடறார். நாராயணா இதோ வந்துக்கிட்டே இருக்கோம்" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

பெருமாள் எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடுறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அப்புடு மாமா ஞாபகம் வந்தது. அவர் அப்பாவின் நெருங்கிய நண்பர். ஜாலியான டைப். அப்பாவிடம் ஏதாவது வேண்டும் என்றால் நானும், அக்காவும் மாமாவிடம் சொல்லிவிடுவோம். கண்டிப்பாக அது கிடைத்துவிடும். உடனே மாமாவைத் தொலைபேசியில் அழைத்தேன்.

"சொல்லுடா, ஆஃபீஸ் போகல?" மாமா.

"இல்ல மாமா. லீவ் போட்ருக்கேன்" என்றேன்.

"அதான, கல்யாணம் ஆனதுக்கப்புறம்தான் லீவுன்னு ஒண்ணு இருக்குனு உங்களுக்குத் தெரியும்" என்றார்.

"இல்ல மாமா, ஸ்ரீயும் நானும் எங்கயாவது போகலாம்னு லீவ் போட்டேன்" என்றேன்.

"ஓ!" என்று நக்கலாகச் சிரித்தார். "எங்க போறிங்க?" என்றார்.

"திருப்பதிக்கு" என்றேன்.

"என்னது, திருப்பதிக்கா? அப்பிடியே காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் ரெண்டு டிக்கெட் வாங்கிகிட்டு போய்டுங்கடா" என்றார் கிண்டலாக.

"அதுக்கு அப்பாகிட்டதான் பேசணும். அவர்தான் திருப்பதிக்குப் போகலாம்னு முடிவு பண்ணார்" என்றேன்.

"அப்பிடியா? நீ ஏன் அவன்கிட்ட கேட்ட?" என்றார்.

"மாமா, என்ன செய்துறதுன்னு தெரியல. நீங்கதான் உதவி பண்ணணும்."

"ம்... சரி. நான் அவன்கிட்ட பேசறேன்."

அப்பாடா என்று இருந்தது. மாமா எப்படியும் அப்பாவைச் சமாதானம் செய்து விடுவார் என்று தோன்றியது. நான் ஸ்ரீயைப் பார்த்து விஷயத்தைச் சொல்லத் தேடினேன். அவள் அம்மாவுடன் சமையலறையில் இருந்தாள். நான் என்னுடைய மடிக்கணினியை எடுத்து வேறு எங்கு செல்லலாம் என்று கூகிலிட்டேன். ஒரு வழியாகக் குன்னூர் செல்லலாம் என்று முடிவுசெய்து தங்குமிடம், ரயில் டிக்கெட் பார்க்கத் தொடங்கினேன்.

அப்புடு மாமாவிடம் ஒருமுறை கேட்டுவிட்டு டிக்கெட் உறுதி பண்ணலாம் என்று தோன்றியது. மீண்டும் மாமாவைத் தொலைபேசியில் அழைத்தேன். மாமா எடுக்கவில்லை. திரும்ப அழைத்தேன். கடைசியாக எடுத்தார்.

"சொல்லுடா ரமேஷ்" என்றார்.

"மாமா, நீங்கதான் சொல்லணும்."

"என்னது திருப்பதி போறது பத்தியா?"

"ஆமா" என்ன இப்படிக் கேட்கிறார் என்று தோன்றியது.

"பேசுனண்டா. அதை மாத்தமுடியாதுன்னு நினைக்கிறேன்."

"ஏன்?"

"அவன், டிக்கெட்லலாம் புக் பண்ணிட்டான். அதனால எல்லோரும் போறோம்."

"எல்லோரும்னா, நீங்களும் வரீங்களா?" என்றேன்.

"ஆமாண்டா" என்றார் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.

ஃபோனை வைத்துவிட்டேன். இதற்குமேல் ஒண்ணும் செய்யமுடியாது என்று தோன்றியது. பெருமாள் என்னைக் கண்டிப்பா கூப்பிடுகிறார் போலும் என்று நினைத்துக்கொண்டே மடிக்கணினியை மூடினேன்.

*****


தூரத்தில் மின்மினிப் பூச்சிபோல் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒரு ஊரைக் கடந்து ரயில் விரைந்து கொண்டிருந்தது. மலைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருபரிமாணக் கோட்டோவியம் போல. "தமிழ்நாடு தாண்டிட்டோம்" என்றார் மாமா. நான் மாமா பக்கம் திரும்பி நின்றுகொண்டேன். அவர் தலைமுடி எதிர்காற்றில் கலைந்திருந்தது. மாமா ஒரு சிறிய கனைப்புக்கு பின்பு "ரமேஷ், உன் கஷ்டம் புரியுது. பெருமாள் உன்னப் பார்க்கணும்னு விருப்பப்படுறார். புதுசா கல்யாணம் ஆன உங்க ரெண்டு பேருக்கும் ஆசீர்வாதம் பண்ண விரும்புறார். சந்தோசமா ஏத்துக்கடா. மனசுதான் எல்லாத்துக்கும் காரணம். மனசுநிறைய அந்த நாராயணன நினைச்சிக்க. உன்னால எல்லாத்தையும் கடந்துட முடியும்" என்றார்.

வெளியே பார்த்தேன். மலை மௌனமாக எங்களுடன் வந்து கொண்டிருந்தது. மாமா என் தோளில் தட்டி "வா, வந்து படு" என்றார். மாமா போனபின் சிறிதுநேரம் கழித்து நான் மேலே ஏறிப் படுத்தேன். ஸ்ரீ புரண்டு படுக்க, அவள் கை வளையல்கள் ஓசையிட, மனம் மீண்டும் கலைந்தது.

யாரோ என்னை முதுகில் தட்டவே திரும்பிப் பார்த்தேன். ஸ்ரீ நின்றுகொண்டிருந்தாள். "போதும் தூங்கினது எழுந்திருங்க" என்றாள். எழுந்து அமர்ந்தேன். எதோ ஒரு ரயில் நிலையத்தில் வண்டி நின்றுகொண்டிருந்தது. மாமா, முகத்தைத் துண்டால் துடைத்துக்கொண்டே என்னை நோக்கி வந்தார்.

"எழுந்துட்டியா, போய் முகம் கழுவிட்டு வா. அடுத்தது திருப்பதி." என்றார்.

தடக்தடக் என ரயில் ஒரு சீரான வேகத்துடன் பயணித்தது. வெளியில் மின்சாரக் கம்பிகள், ரயில் போகும் வேகத்துடன் பயணித்தும், சட்டென விலகியும், மீண்டும் ரயிலுடன் இணைந்தும் விளையாடிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் ரயிலின் வேகம் மெல்ல மெல்லக் குறைந்து ஒரு கணத்தில் நின்றது. நான் அம்மாவிடம் இருந்த பைகளையும் வாங்கிக்கொண்டு கீழே இறங்கினேன். ரயில் நிலையம் முழுவதும் சந்தனம் தடவிய மொட்டைத் தலைகளே தெரிந்தன. வெளியில் செல்லமுடியாதபடி பெரும் ஜனக்கூட்டம். ஸ்ரீ என் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

"ஸ்ரீ, என் கையைப் பிடிச்சுக்கோ, காணாம போய்டுவ" என்றேன்.

"இங்க என்னக் கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம்" என்று சொல்லிக்கொண்டே அவள் சடையைப் பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு என் கையைப் பிடித்துகொண்டாள். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். நாலைந்து பேர் வாகனங்களில் மலைக்கு அழைத்துச் செல்லச் சூழ்ந்துகொள்ள, மாமா அவர்களுடன் எதோ பேசி ஒருவழியாகப் பேரத்தை முடித்தார். நாங்கள் மாமா காட்டிய வாகனத்தில் ஏறிக்கொண்டோம். வழிநெடுகிலும் பெருமாள். வாகனம் மலைமீது ஏற ஆரம்பிக்கச் சிலுசிலுவெனக் காற்று வாகனத்தின் ஒருபுறம் நுழைந்து மறுபுறம் தப்பித்தோடியது. ஒவ்வொரு திருப்பத்திலும் ஸ்ரீ என்மேல் விழுந்து கொண்டிருந்தாள்.

தங்குமிடம் வந்தது. சின்ன மாமாவும், அப்புடு மாமாவும் தனித்தனி அறையிலும், நானும் ஸ்ரீயும் இன்னொரு அறையிலும், பாட்டி, அம்மா, அப்பா ஓர் அறையிலும் தங்கினோம். நானும் ஸ்ரீயும் அறைக்குச் சென்றோம். அறை மிகப்பெரியதாக இன்னும் இருவர் தங்கலாம்போல இருந்தது. நான் பெருமூச்சு விட்டு என் படுக்கையில் விழுந்தேன். வெகுநேரத்திற்குப் பிறகு நானும் ஸ்ரீயும் மட்டும் தனியாக இருந்தோம். ஸ்ரீ பையிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை உணர்ந்து என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. நான் எழுந்து சென்று கதவைத் திறந்தேன்.

அம்மா பாட்டியுடன் நின்றுகொண்டிருந்தாள். நான் "என்ன?" என்பது போல் பார்க்க, "ஏண்டா, இந்த ரூம்ல இந்தியன் டாய்லெட்டா?" எனக் கேட்டாள்.

"அய்யய்யோ, இல்லம்மா, வெஸ்டர்ன் டாய்லெட்தான் இருக்கு" என்றேன்.

"அப்பாடா, பாட்டி உங்களோட அறையில இருக்கட்டும். எங்க ரூம்ல இந்தியன் டாய்லெட். பாட்டிக்கு முட்டிவலி வந்துடும். அப்புறம் அவ்வளவுதான், சாமி பார்க்க விடமாட்டா". என்றாள்.

பாட்டி என்னைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள்.

ஸ்ரீ சுவற்றில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். நானும் அப்போதுதான் கவனித்தேன், அறையின் ஒவ்வொரு சுவரிலும் பெருமாள் கண்மூடி திவ்யமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தார். இவர் பார்வையிலிருந்து இங்கு தப்ப முடியாதுபோல் இருந்தது.

000

குளித்து முடித்து தரிசனத்துக்குக் கிளம்பினோம். வழி நெடுகிலும் பெருமாள் பாடல்கள் எல்லாக் கடைகளிலும். அது ஒருவிதமாக மனதைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்தது. அத்தனை முகத்திலும் ஒருவிதமான மகிழ்ச்சியும் பரவசமும். இதே பெருமாளை வேறு கோவில்களில் வேறு நிலைகளில் கண்டிருந்தாலும், இவரிடம் எதோ ஒன்று இருக்கிறது போலும். வழியெங்கும் வளர்ந்திருந்த சம்பங்கி மரங்களின் பூக்கள் உதிர்ந்து கொட்டியிருந்தன. கோவிலை அடையச் சிறிது தூரம் இருக்கும்போதே, அனைவரிடமும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஸ்ரீ திரும்பிப் பார்த்து "சீக்கிரம் வா" என்பதுபோல் சைகை செய்தாள். நானும் அவர்களுடன் இணைய, நுழைவாயிலை அடைந்தோம்.

எங்களுக்கு முன்னால் வந்தவர்கள் வரிசையாகப் போக நாங்களும் சேர்ந்து கொண்டோம். அவ்வரிசை வெகுதூரத்தில் இடதுபுறமாகத் திரும்பியது. வரிசையில் நிற்பவர்கள் சற்று உட்கார்ந்து போவதற்கு வழி நெடுகிலும் இருக்கைகள். பாட்டி அதில் அமர்ந்து மெதுவாக வந்தாள். நான் அவளுடன் மெதுவாக நகர்ந்தேன். மற்றவர்கள் எங்களைத் தாண்டி முன்னால் போனார்கள். எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லை. நானும், பாட்டியும் மெல்ல நடந்து அந்த வரிசையைக் கடந்திருந்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு, அனைவரும் விசாலமான ஓர் அறையில் அமர்த்தப்பட, அங்கு மற்றவர்களைச் சந்தித்தோம்.

"அம்மா, என்ன இவ்வளவு கூட்டம்?" என்று கேட்டேன்.

"பெருமாளைப் பார்க்கிறது அவ்வளவு லேசில்லடா" என்றாள்.

"ரொம்ப கஷ்டப்படுத்துவாருன்னு சொல்றியா" என்றேன்.

அம்மா முறைத்தாள். "பெருமாளைப் பார்க்க நாம மட்டும் வரலடா. நம்மபோல அவர்மேல அன்பு வச்சிருக்கற நிறைய பக்தர்கள் வந்திருக்காங்க. அவங்களும் நம்மகூட வராங்க. நீ அதைப் பெரிய கூட்டங்கிற" என்றார் அப்புடு மாமா.

"போன தடவ நான் வந்தப்ப 24 மணி நேரம் காத்திருக்க வச்சி, அதுக்கப்புறம்தான் சாமி பார்க்க அனுப்பிச்சாங்க", என்றார் சின்ன மாமா.

"இல்ல மாமா, வயசானவங்க நிறையப் பேர் பார்க்கிறேன். அவங்களும் இந்த வரிசைல நின்னு கஷ்டப்பட்டு வராங்க" என்றேன்.

"அவங்க கஷ்டபடுறாங்கன்னு உனக்கு எப்படித் தெரியும்? நீ பாட்டிகிட்ட இப்படியே வீட்டுக்குத் திரும்பி போய்டலாமான்னு கேளு. அவ கண்டிப்பா வரமாட்டா. எவ்வளவு நேரம் ஆனாலும் அவ காத்திருந்து பெருமாளைப் பார்த்துட்டுதான் போவா. ஏன்னா, இதுக்காகத்தான் அவ இவ்வளவு நாள் காத்திருந்தா. ஒருதடவ பார்த்துட்டான்னா போதும், இன்னும் நாலு அஞ்சி வருஷம் அத நினைச்சி உயிர் வாழ்ந்திடுவா. உன்னோட வயசுக்கு இது கஷ்டம்னு தோணுது, அவ வயசுக்கு இது பெரும் பாக்கியம்ன்னு தோணுது" என்றார் அப்புடு மாமா.

அனைவரும் அவர் முகத்தையே பார்த்து கொண்டிருந்துவிட்டு ஆழ்ந்த யோசனைக்குச் சென்றனர். சிறிதுநேரம் யாரும் பேசவில்லை.
சட்டென ஏதோ ஒரு மூலையில் இருந்து "ஏடு கொண்டல வாடா, வெங்கட்ரமணா" என்று ஒற்றை ஓலி பீறிக்கொண்டு எழும்ப, அந்த அறையில் இருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக "கோவிந்தா கோவிந்தா!" என்று முடித்து வைத்தார்கள். அங்கே ஒரு பக்திவெறி தெரிந்தது. அந்த அறையின் வேறுபகுதியில் கதவு திறக்க, அனைவரும் அதை நோக்கி ஓட்டமெடுத்தனர். நான் பாட்டியை பத்திரப்படுத்தி அவளை என் கைகளுக்குள் கொண்டுவந்து கூட்டத்தை விலக்கி அவளை முன்னோக்கித் தள்ளிக்கொண்டு போனேன்.

மீண்டும் யாரோ "ஏடுகொண்டல.." என்று ஆரம்பிக்க, மொத்தக் கூட்டமும் உணர்ச்சி பொங்கி அந்தச் சிறிய திறப்பை நோக்கி விரைந்தது. நான் பாட்டியை என் முன்னால் வைத்துக்கொண்டு கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாதவாறு பாதுகாத்து அழைத்துச் சென்றேன். ஒருவழியாக அந்த அறையிலிருந்து வெளிப்பகுதிக்கு வந்தவுடன் நெரிசல் சற்றுக் குறைந்தது. அனைவரும் ஒரு திசையை நோக்கி ஓட ஆரம்பிக்க, நான் பாட்டியை அழைத்துக்கொண்டு வேகமாக நடந்தேன். ஸ்ரீயும், அம்மாவும் முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். பாட்டி முடிந்தவரையில் என்னுடன் ஈடு கொடுத்து வந்துகொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் வேகம் குறைய, மீண்டும் ஒரு வரிசையில் இணைந்துகொண்டோம். அனைவர் முகத்திலும் வியர்வை வழிந்தோடியது. ஸ்ரீ தன் கைக்குட்டையால் என் முகத்தைத் துடைத்துவிட்டாள்.

மீண்டும் ஒரு பெரிய வரிசையைக் கடந்து கோவிலின் முன்பக்கத்தை அடைந்திருந்தோம். பாட்டியின் முகத்தில் களைப்பே தெரியவில்லை. அவள் மிக உற்சாகமாக என்னுடன் வந்துகொண்டிருந்தாள். "நாராயணா கோவிந்தா" என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.

பலவித விளக்குகளின் ஒளியில் கோவிலின் உட்புறம் ஜொலித்துக் கொண்டிருந்தது. நெய் வாசனை மூக்கில் நுழைந்து சுவையை உணரமுடிந்தது. பெரும்பாலான தூண்களில் தங்கத்தகடுகள். பலவண்ணப் பூக்களில் தொடுத்த பெரிய பெரிய மாலைகளை ஒருவர் உள்ளே எடுத்துச் சென்றார். மனம் சற்றுப் பதைபதைப்பாக இருந்தது. என்னையும் பாட்டியும் தவிர மற்ற அனைவரும் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். மூலஸ்தானத்தை நெருங்க நெருங்கக் கூட்டம் அழுத்தத் தொடங்கியது. நான் பாட்டியின்மீதே கவனத்தை வைத்திருந்தேன். கூட்டம் சற்று வெறிபிடித்தது போல "கோவிந்தா கோவிந்தா" என்று கூவிக்கொண்டு முன்னே சென்றது. பாட்டிக்கு முன்னால் நின்றவர் பாட்டியின்மீது விழ, அவரை ஒரு கையால் தள்ளிவிட்டுப் பாட்டியை ஓரமாக இழுத்தேன்.

மூலஸ்தானத்தை நெருங்கிவிட்டோம். நான் சற்றுத் தூரத்தில் ஏதேனும் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்தேன். எங்கும் மனிதத் தலைகள். வேறெதுவும் தெரியவில்லை. மீண்டும் எட்டிப் பார்க்க ஒன்றும் தெரியவில்லை. எந்த திசையில் பார்க்க வேண்டும் என்றும் தெரியவில்லை. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நகர, மனசும் எண்ணமும் பெருமாள் ஆக்கிரமித்திருந்தார்.

பாட்டி, "ரமேஷ், ஒண்ணும் தெரியலடா" என்று கூறினாள். அவள் குரல் உடைந்திருந்தது. பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த கூட்டத்தை நகர்த்தி வழிவிடச் சொல்லலாமென்றால் யாரும் கேட்கிற மனநிலையில் இல்லை. சட்டெனப் பாட்டியின் கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு அவளை அப்படியே தூக்கினேன். பாட்டி சற்றுத் தடுமாறியவளாக, "என்னடா பண்ற!" என்று கேட்டாள்.

நான் "இப்ப தெரியுதா பாரு?" என்றேன்.

பாட்டி, "தெரியறதுடா" என்று சொல்லிக்கொண்டே, இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி "கோவிந்தா கோவிந்தா" என்று உரக்கக் கூவினாள். அவள் கண்களிலிருந்து சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது. உற்றுநோக்கி மனதுக்குள் பெருமாளை உள்வாங்கிப் பதிய வைத்துக்கொண்டாள். மோட்சமே கிடைத்ததுபோல் அவள் முகத்தில் அத்துணை மகிழ்ச்சி. நான் பாட்டியைக் கிழே இறக்கிவிட முற்பட, என் தோளில் யாரோ அழுத்தி "ஜருகண்டி" என்று சொல்லித் தள்ளிவிட்டார்கள். நான் நிலை தடுமாறி அருகில் இருந்த தூணில் சாய்ந்து மெதுவாகப் பாட்டியைக் கீழே இறக்கிவிட்டேன். பாட்டி என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

"பார்த்துகிட்டே இருக்கலாம்போல இருக்குதுடா" என்றாள். அப்போதுதான் எனக்கு உறைத்தது, நான் பெருமாளைப் பார்க்கவே இல்லை என்று! என் கவனம் முழுவதும் பாட்டி பார்க்கவேண்டும் என்பதிலேயே இருந்தது. நான் பார்க்கத் தவறி இருந்தேன்.

பாட்டியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். எங்களுக்காக மற்ற அனைவரும் பிரகாரத்தில் காத்திருந்தார்கள். அனைவரும் அவரவர் பார்த்த பெருமாளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அம்மா என்னை பார்த்து "ஏண்டா, ஒரு மாதிரியா இருக்க? பெருமாளைச் சரியாப் பார்க்கல?" என்றாள்.

நான் சற்றுத் தயங்கி. "இல்ல பாட்டி என்னோட இருந்தாங்களா. அதான் பார்த்தேனா, இல்லையான்னு சரியாய் நினைவில்லை" என்றேன்.

"உன்னோட கவனம் எல்லாம் இங்க இல்ல, அப்புறம் எப்படிப் பெருமாளை பார்க்கமுடியும்?" என்று அப்பா சற்றுக் குரல் உயர்த்திக் கடுமையாகப் பேசினார். ஸ்ரீ என்னைப் பாவமாகப் பார்த்தாள். அதற்குள் கோவிலில் வேலை பார்ப்பவர்கள் வந்து, எங்களை நகரச் சொல்ல நாங்கள் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தோம்.

அப்புடு மாமா என் அருகில் வந்து "என்னடா ஆச்சி?" என்றார். அவரிடம் நடந்ததைச் சொன்னேன். "சரி, விடு. இன்னொரு முறை வரமுடியுமான்னு பார்ப்போம். பெருமாளை நினைச்சுக்கிட்டு வா" என்றார். கோவிலிருந்து வெளியே வந்தோம். ஸ்ரீ என்னைச் சமாதானம் செய்வதுபோல் வேறு எங்கேயோ காண்பித்தாள். நாங்கள் அறைக்குத் திரும்பினோம்.

சின்ன மாமா, அப்புடு மாமா, அப்பா மூவரும் அறைக்கு வராமல் வேறேதோ வாங்குவதற்குச் சென்றுவிட, மற்றவர்கள் அறையில் தங்கி ஓய்வெடுத்தனர். ஸ்ரீயும் அம்மாவுக்கு உதவியாக அவளுடனே தங்கிக்கொண்டாள். நான் என் அறைக்குச் சென்று படுத்தேன். அசதியாக இருந்ததால், படுத்தவுடனே தூங்கிவிட்டேன்.

சிறிது நேரத்திற்கு பிறகு விழித்துப் பார்த்தேன். அறை முழுவதும் இருள். என் உடம்பு சற்று வியர்த்திருந்தது. அப்போதுதான் கவனித்தேன், அறை முழுவதும் சம்பங்கி வாசனை. எங்கிருந்து இப்படி ஒரு வாசனை? ஸ்ரீ வெளியிலிருந்த மரத்திலிருந்து பறித்து அறையில் வைத்திருக்கிறாள் போலும். புரண்டு படுத்தேன். மூடிய வெளிக்கதவின் கீழ்ப்பகுதியில் எதோ ஒளி அசைவது தெரிய, கதவைத் திறந்து வராந்தாவில் பார்த்தேன். இருள் அடர்ந்திருந்தது. தூரத்தில் ஒளிப்புள்ளி ஒன்று. நான் அறையிலிருந்து வெளியே வரப் பயந்து, கண்ணைச் சற்றுக் கசக்கி, விரித்துப் பார்த்தேன். கண் இருளுக்குப் பழக்கமாகி, இருளிலிருந்தவை புலப்பட ஆரம்பித்தன. மரத்தாலான பெரிய தூண் ஒன்று அருகிலிருந்தது. அதில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் இருந்தன. தூரத்தில் இருந்து வந்த ஒளியில் சிற்பங்கள் தெரிந்தன.

அத்தூணில் இணைந்திருந்த ஒரு கதவு உட்பக்கமாகத் திறந்திருந்தது. அதிலும் பலவகையான சிற்பங்கள், சிறிய மணிகள். அவை அசைவது போலவும், அசையாமல் இருப்பது போலவும் தெரிந்தது. அது ஒரு நிலவறை. ஆம்! அது ஒரு மிகப்பெரிய நிலவறை. சற்றுப் பயம் தெளிந்து எட்டிப் பார்த்தால், மற்றொரு நிலவறை. பின்னர் மற்றொன்று, மற்றொன்று என்று வரிசையாக ஏழு நிலவறைகள். அத்தனையும் கடந்து அந்த ஒளிப்புள்ளி அசையாமல் இருந்தது. சில வினாடிகளுக்குப் பின்பு அது கோவில் கருவறை என்பது புரிந்தது. அந்த ஒளிப்புள்ளியை மீண்டும் உற்று நோக்க, அது பல வண்ணங்களில் சுடர்விட்டது. என்னை அறியாமல் கண்ணில் நீர் கசிந்தது. உடல் சிலிர்த்தது.

ஒளிப்புள்ளியின் அசைவு ஒரு உடல் அசைந்து வருவதுபோல் பெரிதாகிக் கொண்டிருந்தது. அது ஒளிப்புள்ளி அல்ல. அது மனிதர் போல ஓர் உருவம். மெல்ல என்னை நோக்கி வந்தது. அருகில் வர வர அந்த இடம் முழுவதும் குளிர்ந்தது. என் அறையிலிருந்து முழுவதுமாக வெளியே வந்தேன். பாதங்கள் பனிக்கட்டியில் நிற்பதுபோல் உறைந்திருந்தன. அந்த உருவத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், அவ்வப்போது வணங்கியும், கைகளைத் தலைக்குமேல் குவித்தும் செய்வதறியாமல் நின்றேன். மிக அருகில் அந்த உருவம் வந்து நின்றது. அதன் உடல் முழுவதும் சம்பங்கி மலர்களும், பல வண்ணங்களில் கனமான மாலைகளும் போர்த்தப்பட்டிருந்தன. வைரத்தால் ஆன கிரீடத்தில் விளக்கின் ஒளிபட்டுக் கண் கூசியது. மெல்ல என்னருகில் வந்து என்னைத் தொட, நான் உடல்பதறி, கைகூப்பி "நாராயணா..கோவிந்தா.." என்று பலமாகக் கத்திக்கொண்டே இறுகப்பற்ற எத்தனிக்க, ஒரு பெரும் ஒளிவெள்ளத்தில் அவர் மறைந்துபோனார்!

"ஏங்க...", "டேய் ரமேஷ்", "ரமேஷ்" எனப் பலபேர் என்னைச் சுற்றிக் குரல்கொடுக்க நான் விழித்துக்கொண்டேன். அறையில் அனைவரும் என்னைச் சூழ்ந்திருந்தனர். அவர்களை விழித்துப் பார்த்தேன். கண்கள் கூசின.

"என்னடா ஆச்சி, ஏதாவது கனவா?" என்றார் மாமா. நான் ஒன்றும் சொல்லவில்லை. எழுந்து அமர்ந்தேன். உடல் எங்கும் வியர்த்து, பனியன் உடலோடு ஒட்டியிருந்தது. ஸ்ரீயும் அம்மாவும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். நான் சற்றுநேரம் அமைதியாக இருந்தேன்.

"சரி, எழுந்திரு. வெளியில போய் டீ குடிச்சிட்டு வருவோம்" என்றார் மாமா. நான் எழுந்து வேஷ்டியைச் சரி செய்துகொண்டு மாமாவுடன் சென்றேன். மாமா டீ சொல்லிவிட்டு அருகில் வந்து அமர்ந்து, பத்திரிகையைப் புரட்டினார்.

நான் அந்தக் கனவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். கனவில் பார்த்த பெருமாளின் உருவமும், சம்பங்கி மணமும் இன்னும் நினைவில் இருந்தன. தொண்டை வறட்சியாக இருக்கவே, அருகிலிருந்த குடிநீர் பாட்டில் ஓன்றை எடுத்துக் குடித்தேன். எதிர்ச்சுவரில், "தரிசனம் என்பது நீயாகப் பெறுவதல்ல, அவரே கொடுப்பது" என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.

மாமா, டீ கோப்பையை என் கையில் கொடுத்தபடி, "ரமேஷ், நீ மறுபடியும் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்றியா?" என்று கேட்டார்.

"இல்ல மாமா, தேவையில்லை" என்று உறுதிபடக் கூறினேன்.

சம்பங்கி மலரின் வாசனையை இன்னும் நுகரமுடிந்தது.

வெங்கடேசன் சுந்தரேசன்,
ஓ'ஃபாலன், மிசௌரி.

© TamilOnline.com