நோன்புக் கஞ்சி
சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை நிமிடத்துக்கொரு முறை பார்த்தவாறு குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தாள் ஜமீலா. எவ்வளவு நேரம் நடந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. நெஞ்சில் படபடப்பும், முகத்தில் வேர்வையும் எட்டிப் பார்த்தன.

"அம்மா, ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க? எல்லாம் நல்ல செய்திதான் வரும். கொஞ்சம் அமைதியா உட்காருங்கம்மா" ஜமீலாவின் 12 வயது மகள் சற்றுக் கவலையும் கண்டிப்புமாகக் கூறினாள். மகளின் சொல்கேட்டு, அருகிலிருந்த நாற்காலில் அமர்ந்த ஜமீலா, சற்று நீண்ட பெருமூச்சை விட்டாள். அவளது நினைவு பத்துநாள் பின்னோக்கிச் சென்றது.

அன்று வியாழக்கிழமை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, சுவரில் சாய்ந்து சற்றுக் கண்ணயர்ந்த ஜமீலாவை வாசலில் தோன்றிய மனிதநிழல் எழுப்பிவிட்டது. அவர்கள் ஊர் பள்ளிவாசலில் இருந்து ஒருவர் வந்தார். ஜமீலாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

கடிதத்தின் சாராம்சம்: "அன்புடையீர், நமது ஊர் பள்ளிவாசலில் பல வருடங்களாக நோன்புக் கஞ்சிமுறையைச் சிறப்பாகச் செய்துவருகிறீர்கள். இந்த வருடமும் நோன்புக் கஞ்சிமுறையை எடுத்துச் சிறப்பாகச் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களுடைய பதிலை மூன்று வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம்."

கடிதத்தைப் படித்ததும், ஜமீலாவின் மனதைப் பரவசம் பற்றிக்கொண்டது. புனித ரமலான் மாதத்தை விரைவில் சந்திக்கப் போகிறோம் என்ற நினைப்பே புல்லரித்தது. இந்த விஷயத்தை உடனடியாகக் கணவனிடம் சொல்ல மனது பதைபதைத்தது.

ஜமீலாவின் கணவன் ரஃபீக் குவைத்தில் வேலை செய்கிறான். வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் ஃபோன் செய்வான். அந்த ஃபோனுக்காக ஜமீலா தவம் கிடந்தாள். ஃபோனும் வந்தது. நலம் விசாரித்த பிறகு, நோன்புக் கஞ்சி பற்றிய கடிதத்தின் விவரத்தை அவனிடம் ஆர்வத்துடன் கூறினாள்.

ஆனால் ரஃபீக், "ஜமீலா, இந்த வருடம் கஞ்சிமுறை நாம் செய்யவேண்டாம்" என்றான்.

"என்ன சொல்றீங்க!" தீயில் விழுந்த புழுவைப்போல் பதறினாள் ஜமீலா.

"ஆமாம், உனக்குத் தெரியாதது இல்லை, எனக்கு முன்போல் முதலாளி ஒழுங்காகச் சம்பளம் கொடுப்பதில்லை, பல மாதம் பாக்கி வைத்துள்ளார். எனக்கு உடம்பும் அடிக்கடி சரிவராமல் போகிறது. அதனால் மருத்துவச் செலவு அதிகம். இந்த நிலையில் நாம் கஞ்சிமுறை செய்துதான் ஆகவேன்டுமா? இந்த வருடம் செய்ய இயலாது என்று தகவல் சொல்லிவிடு. இறைவன் நாடினால் அடுத்த வருடம் செய்யலாம்."

"அப்படி சொல்லாதீங்க..." ஜமீலாவின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

"நாம் பல தலைமுறைகளாகக் கஞ்சிமுறை செய்து வருகிறோம். அது இறைவன் நமக்கு அளித்த வரம். அதை நம் தலைமுறையில் நிறுத்திவிட வேண்டாம். நோன்புக் கஞ்சிமுறை நாம் பெருமைக்காகவோ, கவுரவத்திற்காகவோ செய்வதல்ல. நம் ஊர் வானம் பார்த்த பூமி. இங்கு ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் பல குடும்பங்கள் இருக்கின்றன. அதில் பல மதங்களைச் சார்ந்த சகோதர குடும்பங்கள் உள்ளன. அவர்கள், இந்த ரமலான் மாதத்து நோன்புக் கஞ்சியைக் கொண்டு ஒரு வேளையாவது வயிற்றை நிரப்புவார்கள். நோன்பின் மாண்பே, வறியவரின் வயிற்றுப்பசியை உணர்வதுதான். அதனால்தான் நம் முன்னோர்கள் இந்தக் கஞ்சிமுறையைக் கொண்டுவந்தார்கள். அது நோன்பாளிகளின் பசியைப் போக்க மட்டுமல்ல, ஏழைகளின் பசியையும் போக்கத்தான். இதில் நமக்குச் சில பொருளாதார சிரமங்கள் இருந்தாலும், இறைவன் நம்மை மற்றவர்களைவிடச் சற்று வசதியாகத்தான் வைத்துள்ளான். கொஞ்சம் முயற்சி செய்தால் நம்மால் முடியும். நீங்கள் மனம் தளராமல் முயன்று கொஞ்சம் பணம் அனுப்புங்கள், இந்த வருடமும் இறைவன் அருளால் சிறப்பாகச் செய்துவிடுவோம்."

உணர்ச்சிக் குவியலாகப் பேசிய ஜமீலாவை இடைமறிக்காமல் கேட்டான் ரஃபீக். அவனுக்கு ஜமீலாவைப்பற்றித் தெரியும். அவள் தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டால், அதில் தீவிரமாக இருப்பாள்; மனதை மாற்றுவது கடினம்.

"சரி, நான் முயற்சி செய்கிறேன். நல்ல செய்தியுடன் அடுத்த வாரம் ஃபோன் செய்கிறேன்" என்று ஃபோனை கட் செய்தான்.

*****


"ட்ரிங், ட்ரிங்...." ஃபோன் மணி கேட்டுத் திடுக்கிட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள் ஜமீலா. எதிர்முனையில் ரஃபீக்.

"ஜமீலா, என்னை மன்னித்துவிடு. நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன், பணம் ஏற்பாடு செய்யமுடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கஞ்சிமுறை செய்வது எனக்குச் சரியாகப்படவில்லை. நமக்குச் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், இறைவன் நாடவில்லை போலும். நீ தாமதிக்காமல் பள்ளிவாசலுக்குத் தகவல் கொடுத்துவிடு."

இடிந்துபோய் அமர்ந்தாள் ஜமீலா. எதையோ பறிகொடுக்கப் போகிறோம் என்று அவள் மனது கவலை கொண்டது. கண்களில் கண்ணீர் வெள்ளம். சுருண்டு தரையில் விழுந்தாள்.

"ரஃபீக்...ரஃபீக்... வீட்டுல யாரும் இருக்கீங்களா?"

எவ்வளவு நேரம் தரையில் கிடந்து உறங்கினாள் என்று ஜமீலாவுக்கே தெரியாது. வாசலில் கேட்ட குரலால் விழித்தாள். கணவன் பெயர் சொல்லி அழைக்கிறார்களே என்று சற்றுக் குழப்பத்துடன் வாசலுக்கு வந்தாள். அங்கே ஒரு முதியவரும், இளைஞனும் நின்றார்கள். உற்றுப் பார்த்தாள். அடையாளம் தெரியவில்லை.

அந்த முதியவர் "யாரு, ஜமீலாவா? என்னை அடையாளம் தெரியவில்லை? நான்தான் உங்கள் ஊர் பழைய போஸ்ட்மேன் கோபால்" என்றார்.

ஜமீலாவின் முகம் பிரகாசம் அடைந்தது. "ஐயா நீங்களா! எப்படி இருக்கீங்க, உள்ளே வாங்கய்யா" என்று அன்புடன் அழைத்தாள்.

"இது என் பையன் சுந்தரம்" என்று சொன்னவாறே வீட்டினுள் வந்து அமர்ந்தார்கள்.

கோபால் அந்த வீட்டை ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார். "எப்படி இருந்த வீடு, எப்படி வாழ்ந்த குடும்பம், ரஃபீக் இப்போ குவைத்தில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன். நல்லா இருக்காராம்மா?" எனப் பாசத்துடன் கேட்டார்.

"ஏதோ, இறைவன் அருளால் இருக்கிறோம். மாமி எப்படி இருக்காங்க, அவங்களையும் அழைத்து வந்திருக்கலாமே" என்று கேட்டவாறு அவர்களுக்குப் பலகாரம் அளித்தாள்.

"மாமி தவறி மூன்று வருடம் ஆகிறது ஜமீலா. அவள் இருக்கும்வரை உன்னைப்பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பாள்."

கொஞ்சநேரம் பொதுவான குடும்ப விஷயங்களைப் பேசினார்கள். "ஜமீலா, என் பையனுக்கு அடுத்த மாதம் திருமணம். பத்திரிக்கை கொடுக்கத்தான் இந்த ஊர் வந்தேன். உனக்குப் பத்திரிக்கையுடன் இன்னொன்றும் கொடுக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கு" என்றவாறு அவளிடம் ஒரு கவரைக் கொடுத்தார்

"ஐயா, என்ன இது?"

"உன்கிட்ட நான் வாங்கின கடன் பணம் ரூபாய் 25,000 இருக்கும்மா."

புரியாமல் விழித்தாள் ஜமீலா

"10 வருஷம் முன்னாடி என் பையன் சுந்தரம் காலேஜ் அட்மிஷனுக்குப் பணம் இல்லாம நான் கஷ்டப்பட்டபோது, நீயும் ரஃபீக்கும் எனக்கு இந்தப் பணம் கொடுத்தீங்க. நீங்க எனக்குக் கடனா கொடுக்கல, உதவியாத்தான் கொடுத்தீங்க. அப்போ அந்தப் பணம் கிடைக்கலையென்றால், என் பையன் காலேஜ் போயிருக்கமுடியாது, இந்த அளவுக்கு என் குடும்பமும் வளர்ச்சி அடைந்திருக்காது. என் வாழ்க்கை முழுவதும் போஸ்ட்மேன் ஆகவே போய்விட்டது, என் பையன் இப்ப நல்ல நிலையில் இருக்கிறான் என்றால் அதற்க்கு நீயும் ஒரு காரணம். உதவி செய்தவர்களை மறப்பவன் மனிதனே இல்லை. ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழ்வதே வாழ்க்கை. உன் நல்ல மனசுக்காகத்தான் கடவுள் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார். இது உங்களுக்குப் புனிதமான மாதம் வேறு. இந்தப் பணத்தை நீ தயவுசெய்து வாங்கிகொள்ள வேண்டும்” என்று முடித்தார்.

ஆண்டவன் அவரை ஏன் அங்கே அப்போது அனுப்பினான் என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஜமீலா கண்ணில் ஆனந்தக் கண்ணீருடன் கவரை வாங்கினாள். இறைவன் நோன்புக் கஞ்சிமுறை தவறிவிடாமல் இருக்க அருளிவிட்டான் என்பதை ரஃபீக்கிடம் சொல்லத் துடித்தாள் ஜமீலா.

அப்துல்லா ஜெகபர்தீன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com