நா. காமராசன்
சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்...

விதைவளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதைவளர்க்கும் பிணம்நாங்கள்
சாவின் சிரிப்புகள்...


என்று திருநங்கைகளின் அவலவாழ்வை நெஞ்சில் தைக்கும்படி தனது 'காகித மலர்கள்' கவிதையில் சொன்ன கவிஞர் நா. காமராசன் (74) காலமானார். புதுக்கவிதைக்கு புதுரத்தம் பாய்ச்சிய இவர், தேனி மாவட்டம் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றார். அப்போதே புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். அன்றைக்குத் தீவிரமாக இருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். முதுகலைப் பட்டம் பெற்றபின்னர் சிறிதுகாலம் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அடுத்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், எம்.ஜி.ஆர். அவர்களால் திரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

"கனவுகளே ஆயிரம் கனவுகளே...", "போய்வா நதி அலையே", "சிட்டுக்கு சின்னச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது...", "கண்ணன் வந்து பாடுகிறான் காலமெல்லாம்..", "உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது; அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது...", "வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா..", "மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ..", "பாடும் வானம் பாடி நான்.." போன்ற இவரது பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. 'நீதிக்குத் தலைவணங்கு', 'இதயக்கனி', 'இன்று போல் என்றும் வாழ்க', 'நவரத்தினம்', 'கோழிகூவுது', 'நல்லவனுக்கு நல்லவன்', 'இதயக்கோவில்', 'உதயகீதம்', 'நான் பாடும் பாடல்', "பாடும் வானம்பாடி", "தங்கமகன்", அன்புள்ள ரஜினிகாந்த்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 'கறுப்பு மலர்கள்', 'சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்', 'கிறுக்கன்', 'சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி', 'தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்', 'ஆப்பிள் கனவு' போன்ற கவிதைத் தொகுப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. மரபிலும் மிகுந்த தேர்ச்சியுடைய இவர் நயமிக்க பல பாடல்களைத் திரையுலகுக்குத் தந்த பெருமை மிக்கவர். சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் கூட. கலைமாமணி, பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது உள்படப் பல விருதுகளைப் பெற்ற இவர் சென்னையில் காலமானார். மனைவி லோகமணி. மகன் திலீபன்; மகள் தைப்பாவை.

தண்டமிழ்க் கவிஞருக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com