அத்தியாயம் – 8
அருண் ஃப்ராங்கோடு விளையாடிவிட்டுத் திரும்பி வரும்போது, தனது பேண்ட் பாக்கட்டில் ஃப்ராங்க் கொடுத்த சாப்பாட்டுப் பாக்கெட்டை அவ்வவ்போது தொட்டுப் பார்த்துக்கொண்டான். அம்மாவிடம் சொல்லாமல் மறைக்கிறோமே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஃப்ராங்கின் வேண்டுகோளின்படி அருண் அம்மாவிடம் அதைப்பற்றிச் சொல்லவில்லை.
அருண் ஏதோ அமைதியின்றி இருப்பதைப் பார்த்த கீதா என்னவென்று விசாரித்தார். "ஒன்றுமில்லை" என்று பதில் சொல்லிவிட்டான் அருண்.
வீடுவந்து சேர்ந்தபின், கீதா ஏதோ வேலையாகப் பின்புறம் சென்றார். அருணின் அப்பா ரமேஷும் உதவி செய்யச் சென்றார். அருண் ஃப்ராங்க் கொடுத்த பாக்கெட்டை வெளியே எடுத்தான். அவன் மனது பக்பக்கென்று அடித்தது.
பாக்கெட்டைப் பார்த்தான். அது அவர்கள் வீட்டில் வாங்கப்படும் சாப்பாட்டு பாக்கெட் மாதிரிதான் இருந்தது. ஃப்ரிட்ஜைத் திறந்தான். ஃப்ராங்க் கொடுத்திருந்த பாக்கெட்டையும், வீட்டிலிருந்த பாக்கெட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தான். மேலாகப் பார்த்தால் ஒரே மாதிரியே இருந்தன.
"அருண், கிச்சன்ல என்ன பண்ற?" அம்மாவின் குரல் தோட்டத்திலிருந்து வந்தது. "அருண்! பதில் கொடு ப்ளீஸ்…" அம்மா மீண்டும் உரக்கக் கேட்டார்.
"ஒண்ணும் இல்லை அம்மா" என்று சொல்லிவிட்டு, இரண்டு பாக்கெட்டுகளையும் கையில் எடுத்துக்கொண்டு, ஃப்ரிட்ஜ் கதவை மூடிவிட்டு, தடதடவென்று தனது அறைக்கு ஓடினான். அங்கே கையில் இருந்த சாப்பாட்டு பாக்கெட்டுகளைக் கூர்ந்து பார்த்தான். இரண்டின் சத்து விவரப் பட்டியலும் (Nutrition List) பார்க்க ஒரேமாதிரி இருந்தது. அருண் வீட்டுப் பாக்கெட் கொஞ்சம் பார்க்க நன்றாக இருந்தது. மற்றபடி வேறுபாடு எதுவும் தெரியவில்லை. Nutrition List, Ingridients இரண்டையும் மீண்டும், மீண்டும் ஒப்பிட்டான். எந்த வித்தியாசமும் புலப்படவில்லை.
அப்ப நான் ஏன் ஃப்ராங்க் போல குண்டாக இல்லை? எனக்கும் ஃப்ராங்க் போல ஏன் எப்போதும் பசி எடுக்கவில்லை? ஃப்ராங்கின் விலை குறைந்த உணவில் ஏதாவது வெளியே தெரியாத கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா? பல கேள்விகள் மனதில் எழுந்தன.
ஏதோ ஞாபகம் வர, தனது அறை ஜன்னலின் வழியாக பின்புறத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிடம், "அம்மா, நாளைக்கு நம்ம ஜட்ஜ் குரோவ் அவர்கள் வீட்டுக்குப் போறோமா? ஏதோ பார்ட்டின்னு நீங்க சொன்ன மாதிரி ஞாபகம்" என்றான்.
"ஆமாம் கண்ணா, நாளைக்கு ஜட்ஜ் ஐயா வீட்டுல வருடாந்திர கோடைகாலப் பார்ட்டி. எல்லாருக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருப்பாரு. ஜேஜேன்னு இருக்கும் பாரு." மறுநாள் ஜட்ஜ் வீட்டுக்குப் போகப்போவது தெரிந்ததும், அருண் அமைதியாகக் கையிலிருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களையும் கிச்சனில் உள்ள ஃபிரிட்ஜில் அம்மா கண்ணில் படாதபடி வைத்தான்.
*****
மறுநாள் மதியம். ஜட்ஜ் குரோவ் வீட்டுக்கு அருண், அம்மா, அப்பாவோடு சென்றான். அங்கே ஜேஜே என்று கூட்டம். கீதா, ரமேஷ், அருணைப் பார்த்தவுடன் ஜட்ஜ் குரோவ் வந்து வரவேற்றார். சிறிதுநேரம் பேசிவிட்டு மற்றவர்களை கவனிக்கச் சென்றுவிட்டார். அவரோடு தனியாகப் பேச நேரம் கிடைத்தால், ஃப்ராங்க் கொடுத்த பாக்கெட் பற்றிப் பேசிவிட நினைத்தான் அருண். அவன் அத்தனை கூட்டத்திலேயும் யாரிடமும் பேசாமல் இருப்பதை ஜட்ஜ் குரோவ் கவனித்தார். சற்று அவகாசம் கிடைக்க, ஜட்ஜ் அருண் அருகே வந்தார். அவனுக்கு சைகை காட்டி ஒதுங்கி வரச் சொன்னார். அமைதியான இடத்திற்குப் போனதும், ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு அருணையும் உட்காரச் சொன்னார். “மை ஸ்வீட் பாய், இன்னிக்கு என்ன, அம்மாவோட சண்டை போட்டியா?" என்றார். அவர் குரலில் பரிவு தெரிந்தது. அருண் பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தான். "அருண், எப்போதும் கலகலன்னு இருப்பியே? என்னாச்சுப்பா?"
"ஜட்ஜ் ஐயா, இந்த ஹோர்ஷியானா நிறுவனம் சாப்பாட்டுல கலப்படம் பண்றாங்கன்னு நினைக்கிறேன்," அருணிடம் இருந்து சடாரென்று பதில் வந்தது. அதைக் கேட்ட ஜட்ஜுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆனாலும் பொறுமையாக "சொல்லு அருண், மனசில இருக்கிறதைச் சொல்லப்பா" என்றார்.
"ஐயா, என் நண்பன் ஃப்ராங்க் குடும்பம் ஹோர்ஷியானா தயாரிக்கிற மலிவான சாப்பாட்டு பாக்கெட்டைச் சாப்பிடுறவங்க. அவங்க உடம்புக்கு கெடுதல் பண்ணுதுன்னு நினைக்கிறான். ஏதோ கலப்படமோன்னு சந்தேகம்." அருண் தொடர்ந்தான், "எங்க வீட்டுலையும் அதே மாதிரி பாக்கெட்டுகளைத்தான் வாங்குறோம். ஆனா, எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே?"
தான் ஒரு சாப்பாட்டு நிபுணர் இல்லை என்பது ஜட்ஜுக்குத் தெரியும். ஆனாலும், அருண் சொல்வதில் உண்மை இருந்தால், அதை உடனடியாக அதிகாரிகளிடம் தெரியப்படுத்த நினைத்தார். "அருண், உன்கிட்ட ஆதாரம் ஏதாவது இருக்காப்பா? ஹோர்ஷியானா அதிபர் டேவிட் ராப்ளே கிட்ட பேசறத்துக்கு முன்னாடி நம்மகிட்ட நல்ல ஆதாரம் வேண்டும். உனக்குத் தெரியும் அவரைப் பத்தி."
"ஐயா, எனக்கு நல்லாவே தெரியும். அவர் ஒத்துக்கவே மாட்டாரு. சரியான ஆதாரம் இல்லாம நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பவும் மாட்டாங்க."
ஜட்ஜ், அருணைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்தார். "உன்னோட இந்த மனிதாபிமானம் உன்னைப் பெரிய ஆளா ஆக்கப்போகுது பாரு. கவலைப்படாதே. எப்படியாவது உனக்கு ஆதாரம் கிடைச்சுடும். இங்கிலீஷ்ல அதுக்கு ஒரு வார்த்தை இருக்கு. அது Serendipity. இறைவன் அருளால கண்டு பிடிச்சுருவ."
*****
திங்கட்கிழமை காலையில் அருண் பள்ளிக்கூடத்திற்குச் சீக்கிரமாகவே போய்விட்டான். ஃப்ராங்கை மைதானத்தில் தேடிப் பார்த்தான். எங்கும் தென்படவில்லை. செரா கண்ணில் தென்பட்டாள். அவளிடம் கேட்டான். செரா மௌனமாக இருந்தாள்.
"என்ன செரா, பேசாம இருக்க? ஃப்ராங்கைப் பார்த்தியா?"
"அருண், ஐ அம் சாரி டு டெல் யூ. ஃப்ராங்க், இந்த ஊரைவிட்டு குடும்பத்தோட போய்ட்டான். இனிமே பள்ளிக்கூடத்திற்கு வரமாட்டான்."
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |