மறுபடியும் நறுமணம்!
அன்புள்ள சிநேகிதியே,

நானும் என் மனைவியும் உங்கள் அட்வைஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு ஒரு ஸ்பெஷல் அசைன்மென்ட் இருக்கிறது. வரும் ஜூலை 4, வார இறுதியில் என்னுடைய நெருங்கிய நண்பன் தன் குடும்பத்துடன் நான்கு நாட்கள் தங்க வருகிறான். இருபது வருடங்களாகத் தொடரும் நட்பு. என் குழந்தைகளும் அவன் குழந்தைகளும் ஒரே ஏஜ் குரூப். கல்லூரியில், இரண்டு பேரும் EEE ஹாஸ்டலில் ரூம் மேட்ஸ். மேல்படிப்புக்கும் ஒரே வருடம் கிளம்பி வந்தோம். திருமணமும் ஏறக்குறைய ஒரே சமயம். ஆனால், என்னுடையது பெற்றோர் பார்த்துச் செய்த கல்யாணம். அவனுடையது காதல். மனைவி மராத்தி. அம்மா, அப்பாவுக்குப் பயந்துகொண்டு, இங்கேயே திருமணம் ரகசியமாகச் செய்துகொண்டு, அப்புறம் சொல்லியிருக்கிறான். அது பெரியவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. காரணம், என்னைவிட வீட்டுக்கு அடங்கிய பிள்ளையாக அவன் இருந்தான். ரொம்ப அமைதி. குரலை உயர்த்திப் பேசமாட்டான். எல்லாருடைய மதிப்பையும் பெற்றுவிடுவான். ஆனால், தனக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் செய்வான்.

நான் ரூம் மேட் ஆக இருந்ததால் அவனுடைய குணமும் பழக்க வழக்கங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக, அவன் சைவக் குடும்பம். அம்மா, அப்பா முட்டையைக்கூட வீட்டுக்குள் வரவிட மாட்டார்கள். இவன் ஹாஸ்டலில் எதுவாக இருந்தாலும் சாப்பிடுவான். குடிப்பான். வீட்டில் யாருக்கும் தெரியாது. அவர்களுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் ஏன் என் பழக்கங்களைச் சொல்லிப் பிரச்சனை ஆக்கணும்? எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன், அவர்களுக்குப் பிடித்ததை அவர்கள் செய்கிறார்கள் என்ற கொள்கை அவனுடையது. அவனுக்கு நேர் எதிர் நான். என்ன செய்கிறேனோ அதை அப்படியே சொல்வதுதான் நேர்மை என்று நினைப்பவன். அவனுக்கு confrontation பிடிக்காது. எனக்கு ரகசியம் பிடிக்காது இருந்தாலும் எங்கள் நட்பு நன்றாகத்தான் இருந்தது.

எனக்கும் என்னுடைய மனைவிக்கும் அதிகம் பிரச்சனைகள் இல்லை. அவள் துப்புத் துலக்குவதற்கே நான் வாய்ப்புக் கொடுத்ததில்லை. வெகேஷன் தொடங்கி விசிட்டர்கள் வருவதுவரை அவளையே முடிவு செய்ய விட்டுவிடுவேன். அவளுக்கு அந்தச் சுதந்திரம் கொடுப்பதால், எனக்கும் சுதந்திரம், அமைதி, நேரம், இடம் எல்லாம் கிடைத்து விடுகிறது. என் நண்பன் இரண்டு மணிநேரம் காரோட்டி வரும் தொலைவில் இருந்தான். எங்கள் குடும்பம் நன்றாக ஒட்டிக்கொண்டு, குழந்தைகளுக்காக அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தோம். என் பெண்ணிற்கு 10 வயது. அவனுடைய பெண் 11. என் பையன் 7. அவன் பையன் 5 வயது.

இரண்டு வருடங்களுக்கு முன்னால், அவன் மனைவி தன் வேலையை வேறிடத்துக்கு மாற்றிக்கொண்டு பையனை மட்டும் அழைத்துக்கொண்டு போய்விட்டாள். இவனுடைய அம்மா இவனுடன் இருந்து பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்களுக்கு இது புதிராக இருந்தது. ஆனால், பெரிய வேலை கிடைத்துவிட்டது போல என்று நினைத்துக்கொண்டோம். அவனைக் கேட்டால் "You know her. She is adamant. She wants to have her way" என்று பட்டும் படாமலும் பதில் சொன்னான். ஆனால், அவன் எதையோ சொல்லாமல் விடுவதுபோலத் தோன்றியது. என் மனைவியின் அம்மாவுக்கு உடல்நலக் குறைவு, இந்தியா ட்ரிப் என்று மாற்றி மாற்றி ஏதோ வர, நாங்கள் அவனைப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

போன வருடம் திடீரென்று அவன் மனைவி ஃபோன் செய்து, தன் பெண் மிகவும் தன்னை மிஸ் செய்கிறாள், அந்த வீக்கெண்டில் அவளை எங்களுடன் அழைத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டாள். வேலைப்பளு அதிகம். இன்னும் கொஞ்சம் நாளில் "எல்லாம் சரியாகிவிடும்" என்று என் மனைவியிடம் சொன்னாள். என் மனைவி சந்தேகப்பட ஆரம்பித்தாள். நிலைமை சரியில்லை என்று தோன்றியது. ஒரு நெருங்கிய குடும்பம் எங்களை அணுகி, 'அவர்கள் பிரிந்து போய்விடப் போகிறார்களாமே?' என்ற கேள்வியை எழுப்பியது.

அப்புறம் கொஞ்சம் நான் சீரியஸாக என் நண்பனை விசாரித்தேன். அவளுக்குத் தெரியாமல் அவன் 50K எடுத்து அவனது அக்காவிற்கு வீடு வாங்க அனுப்பியிருக்கிறான். அந்த அக்கா இவன் மனைவியைக் கண்டு கொள்வதில்லை. இவனிடம் மட்டும் உதவி கேட்டு எழுதியிருக்கிறாள். ஏதேனும் பிரச்சனை வரப்போகிறதே என்று இவளிடம் அவன் சொல்லவில்லை. இவளுக்குத் தெரிந்தவுடன் கோபம் வந்துவிட்டது. "இன்னும் எத்தனை விஷயம் என்னிடம் சொல்லாமல் செய்திருக்கிறாயோ?" என்று கோபித்துக் கொண்டு, வேலை சாக்கில் கிளம்பிப் போய்விட்டாள். பெண்ணிடம், அம்மா 'பிஸினஸ் ட்ரிப்' போகிறேன் என்று சொல்லியிருக்கிறாள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போய் விடுகிறாள். "என்ன செய்வது? சொல்லியிருக்க வேண்டும். செய்யவில்லை. கோபித்துக் கொண்டிருக்கிறாள். எப்போது வருகிறாளோ வரட்டும்" என்று அமைதியாக பதில் சொன்னான். என் மனைவி உடனே அவளைத் தொடர்பு கொண்டு வெளிப்படையாகக் கேட்டுவிட்டாள். "பெண்ணுக்கு 11 வயது. பருவம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அம்மாவைப் பிரிந்து இருக்கக்கூடாது" என்றெல்லாம் பேசியிருக்கிறாள். அவள் முதல்முறையாக ஃபோனில் அழுது, "எனக்கு மட்டும் இங்கே பிரிந்து வந்ததில் சந்தோஷமா?" என்று குமுறியிருக்கிறாள்.

ஒருவழியாக இருவரிடமும் பேசி எங்களுடன் ஜூலை 4 வீக்கெண்டில் வர ஏற்பாடு செய்துவிட்டோம். எப்படியாவது இவர்களை ஒன்று சேர்த்துவிட வேண்டும் என்று நானும் என் மனைவியும் ஒரு தீர்மானம் எடுத்துள்ளோம். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று ஒரு ஸ்க்ரிப்ட் கொடுத்தால் நன்றாக இருக்கும். நானும் என் மனைவியும் எப்படிப் பேசுவது என்றெல்லாம் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் உதவி தேவை.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதரே,

அருமையான couple நீங்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். என்னை ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லியிருந்தீர்கள். மிகமிகச் சிரமம். முழு விவரமும் எனக்குத் தெரியாது. உங்கள் நண்பரின் மனோபாவத்தைப் பற்றித்தான் எழுதியிருந்தீர்கள். ஆனால், அவர் மனைவியைப் பற்றி எதுவும் தெரியவில்லை. எந்த அணுகுமுறை வேலை செய்யும் என்றும் புரியவில்லை. பொதுவாக, குழந்தைகள் எதிர்காலம் என்னும் sentiment வெற்றி பெறலாம். எப்போது அந்த மனைவி ரகசியத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாளோ அப்போதே அந்தக் கணவனின் அடிப்படைக் குணம் கொஞ்சம் புரிந்திருக்கலாம். மற்றபடி அந்த நண்பர் ஒரு நல்ல கணவராக, தந்தையாக இருந்திருக்கும் பட்சத்தில் நிரந்தரப் பிரிவு அவசியம்தானா என்ற கேள்வியை முன்வைக்கலாம். அவர்கள் வந்து தங்கும்போது நேரத்தை family segment, couple segment, adults segment என்று பிரித்துச் செயல்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்து பாருங்கள். இரண்டு குடும்பங்களும் ஒன்றாக வெளியே சென்று சாப்பிடுவது; குழந்தைகள் தனியாகப் பார்க்கில். பெரியவர்கள் தனியாக இருப்பது; அவர்கள் குழந்தைகளையும் நீங்கள் ஏதோவொரு காரணம் சொல்லி அழைத்துக்கொண்டு வெளியே போய், இவர்கள் இருவருக்கும் தனி சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துப் பேசவிடுவது; சில சமயம் பிரிவைப் பற்றியே பேசாமல், அந்த நாட்களைப் போலச் சந்தோஷமாக, எதுவுமே நடக்காதது போலவும், அப்படி இருந்தாலும் உங்களுக்கு அதைப்பற்றி அதிகம் தெரியாதது போலவும் உற்சாகமாக, பேசி, விளையாடிக் கொண்டு இருப்பது; இப்படிச் செய்தாலே, தங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு, வாழ்க்கைக்கு எது முக்கியம் என்று அவர்களே உணர வாய்ப்பு இருக்கிறது. இருவரும் உங்கள் வீட்டில் சந்திக்கச் சம்மதித்ததே பிரிவைச் சமாளிக்க இனியும் விரும்பாததால்தான்.

Absence of darkness is light என்பது போல
Absence of emotional separation is bonding

காதல் திருமணம் மறுபடியும் நறுமணம் வீசும்.

உங்களுடைய அணுகுமுறையை drcv.listens2u@gmail.com என்ற மெயிலுக்கு விவரித்து எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com