சுய முயற்சியால் பெருஞ்செல்வர் ஆன அமெரிக்கப் பெண்மணிகள் 60 பேரில் ஒருவராகத் திருமதி. ஜெயஸ்ரீ வேதாந்தம் உள்ளால் அவர்களைக் குறிப்பிட்டுள்ளது பிரபல Forbes பத்திரிகை. 840 மில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட இவர் இப்பட்டியலில் 21வது இடத்தைப் பிடித்துள்ளார். சென்ற ஆண்டு இவரது இடம் 30வது ஆக இருந்தது.
ஜெயஶ்ரீ உள்ளால், அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தில் 2008ம் ஆண்டு சேர்ந்து அப்போது முதல் அதன் தலைவர் மற்றும் CEO ஆக உள்ளார். 2016ம் ஆண்டில் அரிஸ்டா $1.1 பில்லியன் வருவாயை ஈட்டியது. இந்நிறுவனத்தின் பங்குகளில் ஏழு சதவிகிதம் இவருடையவை. அரிஸ்டா, ஒரு மேகக்கணினி நிறுவனமாகும். இதற்கு பெங்களூரில் ஒரு கிளை உள்ளது.
ஜெயஶ்ரீ உள்ளால் 2015ம் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருதினைப் பெற்றார். தமிழ்ப் பெற்றோரின் மகளாக லண்டனில் பிறந்து புதுதில்லியில் வளர்ந்த இவர் சான் ஃப்ரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிகல் எஞ்சினியரிங் மற்றும் சான்டா க்ளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மைக் கல்வி கற்றுள்ளார். இவர் Cisco நிறுவனத்தில் பதினைந்து ஆண்டுகள் துணைத்தலைவர், மூத்த துணை தலைவர் (Senior Vice President) ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
சரடோகா நகர நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கரும், பொதுச்சேவைக்குப் பெயர்பெற்றவருமான அமரர் திருமதி. சூஸி நாக்பால் இவரது சகோதரி. இந்திய தூதரகத்தில் பணியாற்றிய திரு. வேதாந்தம் இவரது தந்தையார். 1978ம் ஆண்டிலேயே தமிழர் அமைப்பொன்றைத் தொடங்கக் காரணமாக அமைந்தவர் வேதாந்தம் என்பதை இங்கே நினைவுகூர்வது அவசியம்.
ஃபோர்ப்ஸின் இந்த வரிசையில் 24வது இடத்தைப் பெற்றுள்ள மற்றோர் இந்திய அமெரிக்கரான திருமதி. நீர்ஜா சேத்தி, சின்டெல் நிறுவனத்தின் துணைத்தலைவர். ஓப்ரா வின்ஃப்ரே, மடோனா, பியான்ஸ், டேய்லர் ஸ்விஃப்ட் ஆகியோருடன் இந்தப் பட்டியலில் நம்மவர்கள் இருப்பது சுவையான, இல்லையில்லை, பெருமைப்பட வேண்டிய, தகவல்.
தொகுப்பு: தெய்வானை சோமசுந்தரம் |