டேபிள் டென்னிஸ் சேம்பியன் சுவாதி கிரி
"பிங்-பாங், பிங்-பாங் என்று அந்தச் சின்னூண்டு வெள்ளைப் பந்து அங்குமிங்கும் போய் வருகையில் உண்டாகும் சீரான ஒலியைக் கேட்கிறேன். மெல்ல அல்லது வேகமாக, சுழற்சியோடு அது அடிக்கப்படுவதைப் பார்த்து என் மனம் மயங்குகிறது" என்கிறார் சுவாதி கிரி.

12 வயதே நிரம்பிய சுவாதி அமெரிக்கப் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் U9, U10, U11 சேம்பியன் பட்டங்களை அடுத்தடுத்த மூன்று ஆண்டுகளில் வென்றுள்ளார். ஐரோப்பாவின் லக்சம்பர்கில் (Luxembourg) ஆகஸ்ட் மாதம் உலக அளவில் நடைபெறவிருக்கும் ஹோப்ஸ் சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார். இப்போட்டியில் வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பதினாறு பேர் போட்டியிடுவர். வட அமெரிக்காவின் சார்பாக சுவாதி மட்டுமே 11-12 வயதினருக்கான போட்டிகளில் பங்கேற்கிறார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மில்பிடாஸிலுள்ள இந்தியன் கம்யூனிடி சென்டர் கோடை முகாமில் டேபிள் டென்னிஸ் பழகச்சென்ற சுவாதியின் ஆர்வத்தையும் திறமையையும் கண்டுபிடித்தனர் அங்கு வந்திருந்த இந்தியப் பயிற்சியாளர்கள். சுவாதியின் பெற்றோரிடம் பயிற்சியை விடாமல் தொடரக் கூறினர். லியாங் யங்யீ என்ற சீனப் பயிற்சியாளரிடம் கடந்த ஐந்து வருடங்களாகப் பயிற்சி பெறுகிறார் சுவாதி. சுவாதியின் முதன்மைப் பயிற்சியாளரும் இவரே.

சுவாதி வாரத்தில் 5 நாட்கள் பயிற்சி செய்கிறார். அதே கிளப்பிலிருந்து ஓலிம்பிக்ஸில் இருமுறை கலந்துகொண்ட லில்லி ஜாங் என்பவரை முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறார். "UC பெர்க்கலியில் படித்துக்கொண்டே ஒலிம்பிக்ஸில் விளையாடும் லில்லியிடம்தான் நான் எப்படிப் படிப்போடு விளையாட்டையும் சமாளிக்க முடியும் என்பதைக் கற்றேன்" என்கிறார் சுவாதி.

சான் ஹோசேயின் எவர்கிரீன் பகுதியில் வசிக்கும் சுவாதியின் தந்தை கிரி ஒரு எஞ்சினியர், கால்பந்து வீரர். அம்மா டாக்டர் மற்றும் நீச்சல்வீரர். தொழில்துறை வடிவமைப்பாளராகப் பயிற்சி பெறும் அக்காவும் டென்னிஸ் வீரர்தான். குடும்பத்தில் எல்லோருக்குமே விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு.சுவாதி முதலில் பள்ளிப் பாடங்களைத் தயார் செய்துவிடுவார். அப்போதுதான் விளையாட்டுப் பயிற்சியின் போது டென்ஷன் இருக்காது. வெற்றியோ தோல்வியோ அதைச் சமநிலையுடன் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டார். போட்டியின் முடிவைப் பற்றி எண்ணாமல் கடினமாக விளையாடும் அதே நேரத்தில் ஆடுவதை ரசிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்திக்கொண்டார் என்கின்றனர் சுவாதியின் பெற்றோர்.

"எந்த விளையாட்டானாலும் சரி, அதை ஆடுபவருக்கு மட்டுமல்லாமல், முழுக் குடும்பத்துக்குமே அதில் ஈடுபாடு இருக்கவேண்டும். குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் இறுகப் பிணைவதற்கான வாய்ப்புகளையும் அது தருகிறது" என்கின்றனர் சுவாதியின் பெற்றோர்.

குடும்பத்தினரின் முழு ஆதரவு, உழைப்பு, திறமை, மனவுறுதி இவையனைத்தையும் ஒருசேரக் கொண்ட சுவாதி இன்னும் பல விருதுகளை வென்று குவிக்கத் 'தென்றல்' வாழ்த்துகிறது.

தொகுப்பு: தெய்வானை சோமசுந்தரம்

© TamilOnline.com