சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் 'கணினித் தமிழ் விருது' பெற்றிருப்பவர் செல்வமுரளி. இவர் உருவாக்கிய, விவசாயிகளுக்கு உதவும் குறுஞ்செயலிக்காக 2015ம் ஆண்டுக்கான விருது இவருக்குத் தரப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் மத்தியதர விவசாயக் குடும்பத்தில் வந்தவர். தனது கிராமத்திலிருந்தே விஷுவல் மீடியா டெக்னாலஜி என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். கணினி வன்பொருள், மென்பொருள் என இரண்டிலுமே பல கண்டுபிடிப்புகளையும், ஆண்ட்ராய்ட் செயலிகளையும் உருவாக்கி வருகிறார். இவரது விவசாயம் சார்ந்த செயலி மூன்று லட்சத்துக்கும் மேலான பயனாளிகளைச் சென்றடைந்துள்ளது. இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அவற்றை மக்களுக்கு அளிக்கவேண்டும் என்ற இலட்சிய வேகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் செல்வமுரளியுடன் உரையாடினோம். அதிலிருந்து...
*****
கணினித்துறையில் ஈடுபாடு "சிறுவயது முதலே செய்தித்தாள் வாசிப்பேன். கம்ப்யூட்டர் படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற கட்டுரை ஒரு செய்தித்தாளில் வந்திருந்தது. அது என்னை ஈர்த்தது. பள்ளியில், +2 வகுப்பில் கம்ப்யூட்டர் சயன்ஸ் பிரிவு அறிமுகமான சமயம் அது. நான் அதைத்தான் படிப்பதெனத் தீர்மானித்தேன். அதெல்லாம் இங்க்லீஷில் இருக்கும். சரிவராது என்று சொன்னார்கள். இருந்தாலும் பிடிவாதமாக அதில் சேர்ந்தேன். +2 வகுப்பில் கம்ப்யூட்டர் பாடத்தில் 180 மார்க் எடுத்தேன். அதுதான் ஆரம்பம்" என்று உற்சாகமாகத் தொடங்கினார் செல்வமுரளி.
மென்பொருள் நிறுவனம் துவங்கும் எண்ணம் ஏற்பட்டதற்கான காரணங்களை விவரிக்கையில், "+2 முடித்தபின், அப்பாவின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மேலே படிக்க முடியவில்லை. தினமலரில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் வேலை கிடைத்தது. வேலை பார்த்துக்கொண்டே பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயன்ஸ் அஞ்சல் வழியில் படித்தேன். அந்த வருமானம் போதவில்லை. 2007ல் முதல் கம்ப்யூட்டர் சர்வீஸ் மையத்தை எனது கிராமத்தில் ஆரம்பித்து நடத்தினேன். இணையதளம் வடிவமைத்துத் தரும் பணியையும் செய்தேன். இதையெல்லாம் பகுதிநேரமாகச் செய்தேன். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கவே பகுதி நேரமாகத் தொடரமுடியவில்லை. அதனால் 2010ல் ஒரு நிறுவனமாக இதை ஆரம்பித்து முழுநேரமாகச் செயல்பட ஆரம்பித்தேன்" என்கிறார்.
கிராமத்தில் மென்பொருள் நிறுவனம்! ஒரு கிராமத்தில் இருந்துகொண்டு ஒரு மென்பொருள் நிறுவனத்தை எப்படி நடத்தமுடிகிறது என்று நாம் ஆச்சரியப்பட்டோம். அதற்கு, "நகரங்கள் ஏற்கனவே மக்கள் பெருக்கத்தால் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. நாமும் அதில் போய் முழுகிவிட வேண்டாம் என்று நினைத்தேன். முதலில் கிருஷ்ணகிரியில்தான் நிறுவனத்தை நடத்தினேன். இப்போது என் சொந்தக் கிராமத்தில் இருந்தே இதனை இயக்கிவருகிறேன்" என்றவர், அவ்வாறு நடத்துவதன் சாதக, பாதகங்களையும் பட்டியலிட்டார்.
"கிராமத்தில் ஒரு கணினி நிறுவனத்தைத் துவங்கி நடத்துவது இன்றைக்கும் பலவீனம்தான். ஆனால், இந்தத் தொழிலை நடத்துவதற்கு இணைய இணைப்பும், தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் இருந்தால் போதும். நான் 2007முதல் 2010வரை இணையதளங்கள் மூலம்தான் என் பணியைச் செய்தேன். அப்போது என்னிடம் சொந்தக் கம்ப்யூட்டர்கூடக் கிடையாது. பிரௌசிங் சென்டர் மூலமே பணிகள் நடந்தன. ஆனால், நான் இதை ஒரு நிறுவனமாக ஆரம்பித்தபின் அது சாத்தியப்படவில்லை. அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டால் தொழில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. வேகமின்மை, அடிக்கடி தொடர்பில்லாமல் போவது என்று இணைய இணைப்பில் பல பிரச்சனைகள். எவ்வளவு பெரிய டெக்னாலஜி என்றாலும் அதைக் குறைந்த செலவில் கொடுப்பது எனது இலக்காக இருந்தது. இணையதளத்தை வடிவமைக்க பத்தாயிரம், இருபதாயிரம் என்று வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் நாங்கள் ஒருநாளைக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, Rupee Host என்ற பெயரில் வடிவமைப்புச் செய்தோம். அதற்கு மிகநல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து எங்களது சேவைகளை விரிவுபடுத்தினோம்.
பாதகங்கள் என்றால் ஒரு சமயம் மூன்று மாதம்வரை இணையத் தொடர்பைக் கட் செய்து விட்டார்கள். மற்றபடி தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் கிராமத்தில் கிடையாது. நாம் வேலைக்கு எடுத்துப் பயிற்சி கொடுத்து அவர்களை உருவாக்க வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு வருடம் அதற்குக் கஷ்டப்பட்டேன். இதெல்லாம் பாதகங்கள். எல்லாவற்றையும் சமாளித்துதான் நாங்கள் வளர்கிறோம்" என்கிறார்.
வளர்ச்சிப் படிகள் இப்படி இந்த நிறுவனத்தின் வளர்ச்சி கடும் உழைப்பினாலேயே சாத்தியமாயிருக்கிறது. முதலில் ஒரு காண்ட்ராக்ட் கிடைத்தது. லைவ் ஸ்ட்ரீம் பண்ணுவதற்காக 100 சர்வர்களை இவர்களிடம் வாங்கியிருக்கிறார்கள். அது முதல் படி. 2011 காலகட்டத்தில் சிபேடு என்ற பெயரில் சொந்தமாகவே கையடக்கக் கணினிகளை (டேப்லெட் பிசி) சீனாவில் தயாரித்து வாங்கி அவற்றைத் தமிழுக்கு மாற்றிச் சந்தைப் படுத்தியிருக்கிறார்கள். "இதெல்லாம் வெற்றி பெறாது" என்று ஆரம்பத்தில் பலர் இவர்களை பயமுறுத்தியதுண்டு. அதையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வெற்றி பெற்றதில் செல்வமுரளிக்கு நியாயமான பெருமிதம். தமிழ்க் குறுஞ்செயலிகளை அதில் நிறுவி, பள்ளிகளுக்கும், பிரபல நிறுவனங்களுக்கும் வழங்கியிருக்கிறார். சி-டிரைவ் என்ற பென்டிரைவ் ஒன்றும் இவர்கள் படைப்புகளில் அடக்கம். அதனுடைய சிறப்பு, 200 வகை மென்பொருள்களைக் கணினியில் நிறுவாமலேயே பயன்படுத்தும் வசதிதான். அடுத்து எந்தெந்தத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லையோ அவற்றில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த முடிவுசெய்து அதில் இறங்கியதுதான் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது.
விவசாயிகளுக்கான குறுஞ்செயலி "விவசாயிகளுக்காக ஒரு சிறப்புக் குறுஞ்செயலியை உருவாக்கியுள்ளீர்கள் அல்லவா, அதுபற்றிச் சொல்லுங்கள்" என்றதும் செல்வமுரளிக்கு உற்சாகம் பொங்குகிறது. "என் குடும்பம் விவசாயக் குடும்பம். நேரடியாக விவசாயம் செய்யவில்லை என்றாலும் அது குறித்து எல்லாருக்கும் தெரியும். என் தந்தை ஒரு தானிய வியாபாரி. நான் இருக்கும் கிராமம் விவசாயிகளால் நிரம்பியது. என்னுடைய பணியாளர்கள் அனைவரும் விவசாயக் குடும்பத்தினர். ஆகவே, தகவல் திரட்டுவதிலோ, விவசாயிகளின் தேவைகளை அறிவதிலோ எந்தச் சிக்கலும் எழவில்லை. அப்போதுதான் தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயத்தைத் தொடவே இல்லை என்பது தெரிய வந்தது. விவசாயத்துறைக்கும், தொழில்நுட்பத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அங்கே புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த நினைத்தோம். ஆனால் ஏற்கனவே நொடித்துப் போயிருக்கும் விவசாயிகள் இதனை ஆதரிப்பார்களா என்ற தயக்கம் இருந்தது. மேலும், மொழி ஒரு பெரிய பிரச்சனை. அதற்கான சந்தை எப்படி இருக்குமோ என்ற தயக்கம் இருந்தது."
நம்மாழ்வார் கொடுத்த நம்பிக்கை "நண்பர் பிரகாஷ் சுகுமாரன் உதவியுடன் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களைத் திருவண்ணாமலையில் சந்தித்துப் பேசியது திருப்புமுனை ஆனது. அவர் இதன் தேவை அனைவருக்கும் உண்டு என்று கூறி, சில ஆலோசனைகளைச் சொல்லி, 'விரைவில் பணியை ஆரம்பியுங்கள்' என்று உற்சாகப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தில் இந்தக் குறுஞ்செயலியை உருவாக்கினோம். இன்றைய சூழ்நிலையில் விவசாயிகளுக்குத் தேவை நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நாங்கள் விவசாயிகளுக்கு வழங்குகிறோம். எங்களுக்கு நம்பிக்கையை வழங்கியது நம்மாழ்வார்" என்கிறார் செல்வமுரளி.
விவசாயம் செயலியைப் பற்றிச் சொல்லும்போது, "இது ஓபன் சோர்ஸ் டெக்னாலஜிதான். ஆரம்பத்தில் மொபைல் அப்ளிகேஷனாக மட்டுமே இருந்தது. ஆனால் மொபைல் இல்லாதவர்களும் இதுகுறித்துக் கேட்கவே மொபைல், வெப்சைட் என இரண்டுக்கும் தனித்தனி அப்ளிகேஷன்களை உருவாக்கியிருக்கிறோம். வேர்ட்பிரஸ் டெக்னாலஜியில் இது வேலை செய்கிறது. ஆரம்பத்தில் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. முதல் வெர்ஷன் வெளியான பிறகு தர்மபுரி கலெக்டர் இதுபற்றி அறிந்து எங்களை அழைத்தார். விவசாயிகள் கூட்டத்தில் எங்கள் செயலியை அறிமுகப்படுத்தினார். அதுமுதல் நல்ல ஃபீட்பேக் கிடைக்க ஆரம்பித்தது. தற்போது ஒரு நாளைக்கு 10 முதல் 20 அழைப்புகளாவது வருகின்றன. விவசாயிகளின் சந்தேகங்களையும், பிரச்சனைகளையும் அந்த அழைப்புகளின் மூலம் அறிந்துகொள்கிறோம். எங்களிடமிருந்து தகவல் பெறுவது மட்டுமல்லாமல் எங்களுக்கும் பல தகவல்களை அவர்கள் தருகின்றனர். இது எங்களை அப்டேட் செய்துகொள்ள உதவியது. இதுவரை 'விவசாயம் குறுஞ்செயலி'யை விவசாயிகள் கொடுத்த கருத்துரையின்படி ஒன்பதுமுறை மேம்படுத்தி இருக்கிறோம்; மூன்று லட்சம் பேருக்குமேல் இந்தச் செயலியை நிறுவிப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அந்த நாடுகளில் இயற்கை விவசாயத்தைச் செய்யப் பேரார்வம் காட்டி வருகின்றனர். மேலும் பலவிதமான விவசாய வாய்ப்புகளை விவசாயிகளிடமிருந்து அறிந்திருக்கிறோம். இந்தச் செயலியை சர்வதேசத் தரத்தில் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். இது மற்ற மொழிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்." என்று சொல்லும்போது அவரது மகிழ்ச்சி நம்மிடமும் தொற்றிக்கொள்கிறது.
விவசாயி வேறென்ன செய்யலாம்... "விவசாயத்தில் கிடைக்கும் துணைப்பொருட்களை நாம் நல்லவகையில் பயன்படுத்த முடியும். நெல்லின் உமியிலிருந்து சிமெண்ட் தயாரிக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. அதன்மூலம் இயற்கை முறையில் நாம் சிமெண்ட் உற்பத்தி செய்யமுடியும். சூரியகாந்தியின் தவிட்டிலிருந்து பேட்டரி தயாரிக்கலாம். சோளக்கதிரின் தாளிலிருந்து ஆடை தயாரிக்கலாம். இதெல்லாம் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள். ஆனால் இன்னமும் பயன்பாட்டுக்கு வராதவை. இவ்வாறு ஆங்கிலத்தில் கிடைக்கும் பல ஆய்வுகளை - நம் மண்சார்ந்து நம்மால் செய்யக் கூடியவற்றை - நாங்கள் தமிழில் தர ஆரம்பித்தோம். விவசாயம் சார்ந்து நிறையத் தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு விவசாயி இது போன்றவற்றையும் செய்து பிழைக்கமுடியும் என்ற நம்பிக்கையை இவை தருகின்றன. இவற்றைத் தனி ஒரு 'ஆப்' ஆக நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இவற்றை ஆராய்ந்து யாராவது செயல்படுத்தினால் அது விவசாயிகளுக்கு மிகப்பெரிய தொழில் வாய்ப்புகளை அளிக்கும். விவசாயம் சார்ந்து சுமார் 60 வகைக் கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஆற்றுமணலையும் சாம்பலையும் கலந்து விவசாயத்திற்குப் பயன்படுத்தினால் அது நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்று ஓர் ஆய்வுக்கட்டுரை படித்தேன். உடனே ஆற்றுமணலையும் கணபதி ஹோமம் செய்த சாம்பலையும் கலந்து, எங்கள் அலுவலகத்திலேயே ஒரு சிறு இடத்தில் நாகப்பழ விதையை விதைத்தோம். பத்தே நாளில் அது நன்கு வளர்ந்துவிட்டது. மற்ற இடங்களில் வளர்வதைவிட இதன் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதுபோன்று வேப்பங்கொட்டையையும், வசம்பையும் கலந்து எரித்தால் அந்தப் புகைக்குப் பூச்சிகள், கொசுகள் வராது. குழந்தைகளுக்கு வசம்பைப் பயன்படுத்துவதன் காரணம் இதுதான். இதுபோன்று நிறைய உள்ளூர்த் தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க எங்களிடம் நிலம் கிடையாது. ஆகவேதான் இவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கிறோம். அவர்கள் இதனைப் பயன்படுத்திப் பார்த்து மேலே விரிவாக்க முடியும்.
தண்ணீர்... தண்ணீர்... அடுத்து ஒரு சர்வே எடுத்தோம். ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீரை அதிகமாக எதற்குச் செலவழிக்கிறார்கள் என்று. துணி துவைப்பதற்குச் சுமார் 30 லிட்டர் தண்ணீரை சராசரியாக ஒருநாளில் செலவழிக்கிறார்கள். அதில் டிடர்ஜெண்ட் கலந்துவிடுவதால் அந்தக் கழிவுநீரை மறுபடி பயன்படுத்த முடியாது. ஒரு குடும்பத்திற்கு 30 லிட்டர் என்றால் தமிழ்நாட்டின் ஏழு கோடி குடும்பங்களுக்கு எவ்வளவு தண்ணீர் செலவாகும் என்று பாருங்கள். இதை எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்று பெரியவர்களிடம் பேசும்போது, சீயக்காய், புங்க இலை போன்றவற்றைப் பயன்படுத்தி அந்தக் காலத்தில் சோப்பு தயாரித்தார்கள் என்றார்கள். அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இதற்கு உதவும் என்றார்கள். இப்படி 10 வகையான ஆராய்ச்சிகளைப் பயன்பாட்டிற்காக நாங்கள் எடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், இவற்றை மேலெடுத்துச் செல்ல நிதி ஆதாரம் இல்லை. அதிகம் நிதி உள்ளவர்களே மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யமுடியும். எங்கள் செயலிகளுக்காகவே இதுவரை 15 லட்சம் செலவழித்திருக்கிறோம். ஆனால், இதுவரை 3-4 லட்சம் மட்டுமே எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இணையதள வருமானத்தை வைத்தும், ஆர்வம் காரணமாகவும் இதனை மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம்" என்கிறார்.
உழுதவன் கணக்குப் பார்க்க... பிற குறுஞ்செயலிகள், மென்பொருட்கள் பற்றிச் சொல்லும்போது, "ரிசர்ச், டெவலப்மெண்ட் மற்றும் ஹோஸ்டிங்தான் முக்கிய பிசினஸ். எங்களுக்குச் சொந்தமாக சர்வர் இருக்கிறது. இணையதள மெயின்டனன்ஸ் செய்து வருகிறோம். புதிதாக இணையதளம் வடிவமைக்கிறோம். 'விவசாயக் கணக்கர்' என்ற குறுஞ்செயலியை உருவாக்கி அளித்திருக்கிறோம். அது விவசாய சம்பந்தமான செலவுகளையும், வருமானத்தையும் உள்ளிட்டால் உங்களுக்கு லாபம் எவ்வளவு, எதில் அதிகம் செலவாகிறது என்பது உட்பட எல்லா விவரங்களையும் தெளிவாகத் தந்துவிடும். இதுபோல நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளை உருவாக்கியிருக்கிறோம். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆதரவில்லாமல் எதுவுமே சாத்தியம் ஆகியிருக்காது. நண்பர்களின் ஆலோசனை எனக்குப் பெரும்பலம் . விவசாய செயலி, தமிழ் எழுத்துரு எல்லாவற்றையுமே உருவாக்கி நாங்கள் இலவசமாகத்தான் கொடுத்திருக்கிறோம். லாபம் என்று இதில் எதுவுமில்லை" என்கிறார்.
கணினித் தமிழ் விருது கணினித் தமிழ் விருது கிடைத்ததை ஒரு சிறப்பான தருணம் என்கிறார். "என் தொழில்முனைவு சற்றே வித்தியாசமானது. மென்பொருள் துறையில் வேலைக்குச் சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும். அப்படியிருக்க, சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்துவதில் என் வீட்டாருக்கு விருப்பமில்லை. அதுவும் கிராமத்தில் இருந்துதான் நடத்துவேன் என்று சொல்லி நடத்திவருவது அவர்களுக்கு இன்றுவரை விருப்பமில்லை. சரி நிறுவனம்தானே நடத்துகிறான், நடத்தட்டும் என்று அவர்கள் சமரசமானபோது, நான் விவசாயத்துறைக்கு வந்தது எங்கள் குடும்பத்தினருக்குச் சற்றும் விருப்பமில்லை. ஒருபுறம் அதிகப் பொருட்செலவு, மன அழுத்தம் எனப் பலவிதமான பிரச்சனைகள். சொல்லப்போனால் பல இழப்புகளை இந்த விருது ஈடுகட்டியிருக்கிறது. உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. உண்மையில் தமிழ்க்கணினி வளர்ச்சிக்காக உழைத்த அனைவருமே விருதுக்குரியவர்கள்தான். மிகச்சிறந்த தேர்வுக்குழு எங்களைத் தேர்ந்தெடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி. குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் ஓ.சி.ஆர். தமிழ் உருவாக்கம் உள்பட பல அடிப்படைகளைத் தமிழ்வளர்ச்சிக்காகச் செய்தவர்கள். அவருக்குத்தான் விருது கிடைக்கும் என நாங்கள் நினைத்தோம். இறுதிக்கட்டத்தில் எங்கள் பெயர் தேர்வானது. அதில் மகிழ்ச்சிதான் என்றாலும் கிருஷ்ணமூர்த்திக்குக் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் எங்களுக்கு உண்டு. அவர் கிட்டத்தட்ட 50 வருடமாகத் தமிழ் கணினி வளர்ச்சிக்காக உழைத்து வருகிறவர். நாங்கள் எல்லாம் இப்போதுதான் வந்திருக்கிறோம். என்றாலும் கிராமத்துப் பின்னணியில் இருந்து செயல்பட்டு வரும் எங்களை ஊக்குவிக்க இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். இதற்காக எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கும், ஊழியர்களுக்கும் குறிப்பாக விவசாயம் குறுஞ்செயலியினைத் தேர்ந்தெடுத்த தேர்வுக் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி" என்று நெகிழ்கிறார்.
யாரும் செய்யாததைச் செய்யவேண்டும் "யாரும் செய்யாததைச் செய்ய வேண்டும்; தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய புதிய விஷயங்களை உருவாக்கித் தரவேண்டும் என்பதுதான் என் எதிர்காலத் திட்டம். கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது. அது இன்று நிறைவேறியிருக்கிறது. ஆரம்பத்தில் டேப்லட் பி.சி. எல்லாம் பணமில்லாமல் யாரும் செய்யமுடியாது என்றார்கள். நாங்கள் செய்துகாட்டினோம். அதிலும் கிராமத்தில் ஒரு சிறு கம்பெனி, யாரிடமும் நிதி வாங்காமல் செய்தோம் என்பதையறிந்து பலருக்கும் வியப்பு. ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டில் தமிழுக்கான சப்போர்ட்டே கிடையாது. நாங்கள் அதனை உருவாக்கி, சந்தைப்படுத்தினோம். வெற்றி பெற்றோம்."
"தற்போது விவசாயத்தில் எந்தப் பருவநிலையில் எதைப் பயிரிடலாம், எது லாபமாக இருக்கும், இந்த வெப்பநிலையில், இந்த மண்வளம் இவ்வாறு இருக்கும் என்ற டேடாபேஸ் யாரிடமும் கிடையாது. இன்றைக்குத் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்திருக்கிறது. இதுமாதிரித் தகவல்களைத் தொகுத்து விவசாயிகளுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில் அளிப்பது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நோக்கித்தான் நாங்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சித்தமருத்துவத்தில் நிறைய மருத்துவமுறைகள் பற்றிச் சொலியிருக்கிறார்கள். அவையெல்லாம் இன்னமும் ஆராய்ச்சி செய்யப்பட்டுத் தொகுக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் வெளிநாட்டையே சார்ந்திராமல் அவற்றைத் தொகுத்து நமது பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் நாம் எங்கேயோ போய்விடுவோம். அதுதான் எங்கள் தற்போதைய இலக்கு" என்கிறார்.
ஊக்கமிக்க இந்த இளைஞரின் சாதனைகளுக்கும், முயற்சிகளுக்கும் வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
கொழுத்தவனுக்குக் கொள்ளு ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யத் தமிழ் மரபு அறக்கட்டளை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் ஓர் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். அதன் தொழில்நுட்பப் பகுதியை நான் கவனித்துக்கொண்டேன். நம்மிடம் இருக்கும் பொக்கிஷங்கள் பற்றி அதன்மூலம் அறிய முடிந்தது. ஒருவிதத்தில் எனக்கு நம்பிக்கை கொடுத்ததே அதுதான். சித்த மருத்துவ முறைகள் பற்றியெல்லாம் அச்சுவடிகள் மூலம் விரிவாக அறியமுடிந்தது. அந்தப் பாரம்பரியம் கிராமங்களில் இன்னமும் உயிர்வாழ்வதை அறிய முடிந்தது. பழமொழிகள் மூலமாகவும் அவையெல்லாம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கொழுத்தவனுக்குக் கொள்ளு; இளைச்சவனுக்கு எள்ளு என்பதை உடல்நலம் பற்றியதல்ல. அப்படி நம்மவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். முழுப் பழமொழி என்னவென்றால்,
கொழுத்தவனுக்குக் கொள்ளு; வலுத்தவனுக்கு வாழை இளைச்சவனுக்கு எள்ளு
கொழுத்தவனுக்குக் கொள்ளு என்றால் நன்கு செழிப்பாக இருப்பவன் கொள்ளை விதைத்தால் மழைபெய்து அழிந்து போய்விட்டாலும் பெரிதாக பாதிப்பை அவனுக்குத் தராது. அதற்கு அதிகப் பராமரிப்பு தேவையில்லை. அது அவனைக் காப்பாற்றி விடும். வலுத்தவனுக்கு வாழை என்றால், நிதி அதிகமாக வைத்திருப்பவன்தான் வாழையைப் பயிரிட முடியும். ஏனென்றால் வலுத்த காற்றினால் வாழைக்கு பாதிப்பு ஏற்பட்டாலும்கூடப் பணமிருப்பவனால் மீளமுடியும். இளைச்சவனுக்கு எள்ளு என்பது செல்வம் அதிகமில்லாதவன் எள்ளு விதைத்தால் அவனுக்கு அது உதவியாக இருக்கும். இப்படிப் பொருளாதார, சமூக ரீதியாக எப்படி விவசாயம் செய்திருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் பழமொழி உதாரணம். பயிர்பற்றிய இத்தகைய பழமொழிகளை ஆராய்ச்சி செய்தாலே நமக்குப் பல உண்மைகள் தெரியவரும்.
- செல்வமுரளி
*****
தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள் தமிழ் யூனிகோடில் 'லதா' எழுத்துருதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லதா எழுத்துரு கேரக்டர் மிகவும் பெரிது. மொபைல் அப்ளிகேஷன்களில் அவை நிறைய இடம் எடுத்துக்கொள்ளும். ஆகவே அதற்கு மாற்றாக சில யுனிகோட் எழுத்துருக்களை உருவாக்க நினைத்தேன். அப்படி கிட்டத்தட்ட 20 வகை புதிய யுனிகோட் எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாகக் கொடுத்தேன். இதன் அதிகபட்ச அளவே 80-100 கிலோ பைட்ஸ்தான். ஆகவே இது மொபைலோ, இணையதளமோ அதிக இடத்தை எடுத்துக் கொள்ளாது. மிக எளிமையானதும் கூட. இணையதளம் உட்படப் பலவற்றிலும் இன்றைக்கு இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதனை இங்கேயிருந்து இலவசமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
- செல்வமுரளி
*****
உத்தமம் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் - உத்தமம் என்னும் அமைப்பு கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. உலகமுழுவதிலும் இருந்து தமிழ்க் கணிமை ஆர்வலர்கள், மென்பொருளாளர்கள், பேராசிரியர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆங்கிலத்தில் கணினி வளர்ச்சிக்கு அமைப்புகள் இருப்பதைப் போல தமிழுக்கு இந்த அமைப்பு. இந்த அமைப்பு தமிழ்க் கணிமை சார்ந்த பல ஆராய்ச்சிகளுக்கு பணிக்குழுக்களை உருவாக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை 15 உலகத்தமிழ் இணைய மாநாடுகளை நடத்தித் தமிழ்க் கணிமை ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இதில் இணைந்து தமிழ்க் கணிமைக்கு வலுச் சேர்க்கலாம்.
- செல்வமுரளி
*****
பெரிய நிறுவனங்களையே சார்ந்திருந்தால்... தமிழுக்கான சந்தை ஓரளவாவது இருப்பதால்தான் கூகிள் போன்ற நிறுவனங்கள் தமிழுக்குப் பல பயன்பாடுகளை இலவசமாகத் தருகின்றன. பெரிய நிறுவனங்களின் இலவசத்தையே நம்பினால், தமிழைச் சார்ந்த புதிய தொழில்முனைவோர்கள் இல்லாத நிலை வந்துவிடும். எல்லா தமிழ்ப் பணிகளுக்கும் பெரிய நிறுவனங்களை மட்டுமே எதிர்பார்க்கும் சூழ்நிலை வந்துவிடும். எனவே தமிழ்சார்ந்த தொழில்முனைவோர்களை உருவாக்குவதும், ஊக்குவிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை. தமிழ்க் கணிமைக்குப் பேரா. கிருஷ்ணமூர்த்தி, பேரா. தெய்வசுந்தரம், பேரா. ஏ.ஜி. ராமகிருஷ்ணன், பேரா. நாகராஜன், திரு. முகுந்த், திரு. தகடூர் கோபி, திரு. சீனிவாசன், திரு. நீச்சல்காரன் எனப் பலர் பெரும்பங்களிப்புச் செய்துவருகின்றனர். தமிழ்க் கணிமையை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் திரு.மு. இளங்கோவன், திரு. துரை.மணிகண்டன் ஆகியோர் பங்காற்றி வருகின்றனர். இவர்களின் பணிகள் மிகவும் போற்றத்தகுந்தன.
- செல்வமுரளி |